ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்

Continues below advertisement

விக்கிரவாண்டி இடைத்தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாக, தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அஇஅதிமுக அறிவித்துள்ளதால், தேர்தல் களம் மும்முனைப்போட்டியாக மாறியுள்ளது. அதிலும், அதிமுக-வின் வாக்குகளை வாங்கப்போவது யார் என்பது தற்போது பேசுப்பொருளாக மாறியுள்ளது.

விக்கிரவாண்டியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த திமுக-வின் புகழேந்தி, மக்களவைத் தேர்தல் பரப்புரையின் போது, திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு காலமானார். இதையடுத்து, அத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியானவுடனேயே, தற்போது அத் தொகுதிக்குத் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியான சில தினங்களிலேயே, அன்னியூர் சிவா போட்டியிடுவார் என அறிவித்து, வேட்பாளர் அறிவிப்பில் முந்தி்க் கொண்டது திமுக. நாம் தமிழர் சார்பில்,ஹோமியோபதி மருத்துவர் அபிநயா அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல், பாஜக கூட்டணி சார்பில், பாமக போட்டியிடும் என அறிவிப்பு வெளியானவுடனேயே, ஏற்கெனவே இங்கு போட்டியிட்டுள்ள அன்புமணியை வேட்பாளராக, பாமக நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் அறிவித்தார். எனவே, அதிமுக சார்பில் யார் போட்டியிடப் போகிறார் என்ற கேள்வி எழுந்த நிலையில், தற்போது இந்த இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிக்கிறது என அக் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார், எனவே, திமுக, பாமக, நாம் தமிழர் என மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. இவர்களுடன் பல சுயேச்சைகளும் களத்தில் இறங்குவர் என்பது உறுதி.

நியாயமாக தேர்தல் நடைபெறாது, அதிகாரத் துஷ்ப்ரோயகம் நடக்கும், பணம் வாரி இறைக்கப்படும் என பல்வேறு காரணங்களைக் குறிப்பிட்டு, இந்த இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக அதிமுக அறிவித்துள்ளது. ஆனால், பின்னணியில் நடந்தவை குறி்தது நமக்குக் கிடைத்த தகவலின்படி, இந்த இடைத்தேர்தலில் போட்டியிட தேமுதிக ஆர்வம் காட்டியதாம். விருதுநகர் மக்களவையில் சில ஆயிரங்களில் வெற்றியை நழுவவிட்ட தேமுதிக, விக்கிரவாண்டியில் உள்ள விஜயகாந்த் ரசிகர்களின் பலம் மற்றும் அதிமுக வாக்கு வங்கி ஆகியவற்றைப் பயன்படுத்தி, வெற்றிப் பெறலாம் என கணக்குப் போட்டு, அதிமுக-விடம் கோரிக்கை வைத்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், ஆளும் கட்சியின் அதிகார- பண பலத்தை மீறி வெற்றிப் பெறுவது கடினம் என்று கருதியது மட்டுமில்லாமல், இந்தத் தேர்தலிலும் தோல்வி அடைந்தால், தொண்டர்கள் மட்டுமல்ல, மேல்மட்டத் தலைவர்களும் சோர்ந்துவிடுவார்கள் என்பதால், இத் தேர்தலைப் புறக்கணிப்பதுதான் சிறந்த சாணக்கியத்தனம் என்றவகையில் அதிமுக முடிவெடுத்ததாக, அக் கட்சியின் சில மூத்த தலைவர்கள் நம்மிடம் பகிர்ந்துக் கொண்டனர். 

கடந்த 2008-ம் உருவான விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில், கடந்த 2011-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த மார்க்சிஸ்ட் கட்சி 78 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றது. 2016-ம் ஆண்டு தேர்தலில், திமுக-விடம் அதிமுக தோல்வி அடைந்தாலும், கிட்டத்தட்ட 57 ஆயிரம் வாக்குகளைப் பெற்றது. ஆனால், 2019-ல் நடைபெற்ற இடைத்தேர்தலில், ஆளும் கட்சியாக இருந்த அதிமுக, 1 லட்சத்து 13 ஆயிரம் வாக்குகளைப் பெற்று அபார வெற்றிப் பெற்றது. ஆனால், கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலில், இத் தொகுதியில் அதிமுக தோல்வி அடைந்தாலும், 84 ஆயிரத்து சொச்சம் வாக்குகள் பெற்று, திமுக-வின் புகழேந்திக்கு கடும் போட்டியைத் தந்தது. எனவே, இந்த தொகுதியில், அதிமுக வாக்கு வங்கி என்பது குறிப்பிடத்தக்க அளவு இருக்கிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. 

இந்தத் தொகுதியில் உள்ள அதிமுக வாக்குவங்கி, எந்தக் கட்சிக்கு போகப்போகிறது, ஆளும் திமுக-விற்கா, பாஜக கூட்டணியில் உள்ள பாமக-விற்கா, அல்லது நாம் தமிழருக்கா, அல்லது சுயேச்சைகளுக்கா அல்லது நோட்டாவிற்கா என்பதான் மிகப்பெரிய கேள்வி. பொதுவான கணிப்பில், தொடர்ந்து இரட்டை இலை சின்னத்திற்கே வாக்களித்தவர்கள், உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிப்பார்களா என்பது சந்தேகமே. இந்த வாக்குகள், பாமக மற்றும் நாம் தமிழர் போன்றவர்களுக்குச் செல்ல வாய்ப்பு இருக்கிறது. ஆனால், அங்குள்ள நமது செய்தியாளர்கள் தரும் கள நிலவரப்படி பார்த்தால், ஆளும் கட்சி ஜெயித்தால், தொகுதிக்கு நன்மைகள் கிடைக்க வாய்ப்பு என்பதுடன், கொடுப்பதை வாங்கிக் கொண்டு வாக்களிப்போம், 2026-ல் பார்த்துக் கொள்வோம் என்ற பாணியை பலர் தேர்வு செய்ய வாய்ப்பு எனத் தெரிகிறது. அதுமட்டுமல்ல, பல அதிமுகவினர், தேர்தலில் வாக்களிக்காமல் இருப்பதற்கும் வாய்ப்பு உண்டு என்றும் நமது செய்தியாளர்கள் கணிக்கின்றனர். அதுமட்டுமல்ல, அதிமுக-வின் புறக்கணிப்பால், கட்சி வாக்குகள் இல்லாமல், அரசுக்கு எதிரான நடுநிலை வாக்குகள், தற்போது பாமக-விற்கோ அல்லது நாம் தமிழருக்கோ செல்லும் என்று கருதுவதற்கு வாய்ப்புண்டு. ஆனால், தமிழக இடைத்தேர்தல் வரலாற்றில், ஆளும் கட்சிக்கு எதிரான அலை இருப்பதேயில்லை என்பது பெரும்பாலான முடிவுகளின் கண்கூடாக உணர முடிகிறது. 

பிரதான எதிர்க்கட்சியான அதிமுக புறக்கணிப்பதால், தேர்தல் பரப்புரையில் பெரிய கவன ஈர்ப்புகள் இல்லாமல், சாதாரண பரப்புரைகளுடன் தேர்தல் களம் இருக்குமோ என்ற ஐயம் ஏற்படுகிறது. ஆனால், நாம் தமிழர் சீமான் நிச்சயமாக, பரப்புரையை சூடாக்குவார் எனக் கூறும் நமது செய்தியாளர்கள், பாஜக-வும் கடினமாக பாமக-வின் வெற்றிக்குப் பாடுபடுவோம் எனக் கூறியிருப்பதால், தேர்தல்களத்தில் அனலுக்கு குறைவிருக்காது என அடித்துச் சொல்கின்றனர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram