KN Nehru Lalkudi MLA | தம்பி போப்பா... கே.என்.நேரு - MLA மோதல்! நடந்தது என்ன?

Continues below advertisement

அமைச்சர் கே.என்.நேருவுக்கும் லால்குடி எம்.எல்.ஏவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் கே.என்.நேரு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி, அவராலேயே தான் செயல்பட முடியாத நிலையில் இருப்பதாகவும் அதனால் தனக்கு எம்.எல்.ஏ பதவியே வேண்டாம் என்று கூறி 10 பக்கங்களுக்கு குறையாமல் எம்.எல்.ஏ சவுந்தரபாண்டியன் கடந்த ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி  கடிதம் எழுதியது திருச்சி  திமுகவினர் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 

திருச்சி மாவட்டத்தில் உள்ள எம்.எல்.ஏக்கள் என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக் கூடாது என்று கேன்.என்.நேரு தரப்பே ஆர்டர் போடுவதாகவும், டெண்டர் உள்ளிட்ட விவகாரங்களில் அமைச்சர் நேருவின் உறவினர்கள் தலையிட்டு எம்.எல்.ஏக்களுக்கு குடைச்சல் கொடுப்பதாவும் கூறி துறையூர், முசிறி, லால்குடி, மண்ணாச்சநல்லூர், ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏக்கள் அதிருப்தியில் இருப்பதாகவும் திருச்சி அரசியலில் பேச்சுக்கள் அடிபடுகின்றன. ஆனால், வெளிப்படையாக அதனை யாருமே இதுவரை காட்டிக்கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.

கே.என்.நேரு முதன் முதலாக எம்.எல்.ஏ-வாக வெற்றி பெற்றது  இதே லால்குடி தொகுதியில்தான். அந்த தொகுதிக்கு உட்பட்டுதான் அவரது சொந்த கிராமமான கானக்கிளியநல்லூரும் இருக்கிறது. தான் திருச்சியில் போட்டியிட லால்குடியில் இருந்து நகர்ந்தபோது, அந்த தொகுதிக்கு நேருவின் சாய்ஸ்சாக இருந்தது தற்போதைய எம்.எல்.ஏ சவுந்தரபாண்டியதான்.  

அவர் 4- முறை லால்குடி தொகுதியில் வெற்றி பெற வைத்தவரும் கே.என்.நேருதான். ஆனால், எப்போதும் தான் சொல்வதைதான் கேட்க வேண்டும் என்பது, வார்த்தைகளில் கடினம் காட்டுவது மாதிரியான தோரணையில் நேரு செயல்படுவது போன்ற காரணங்களால் 4 முறை அதே தொகுதியில் வெற்றி பெற்றுள்ள சவுந்தரபாண்டியனுக்கு அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது என அந்த தொகுதிக்குள் பேசிக்கொள்ளப்படுகிறது.

இந்நிலையில் திருச்சி மாவட்டம், லால்குடி பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு , தொகுதியின் எம்எல்ஏ சௌந்தர பாண்டியனுக்கு அழைப்புதல் விடுக்கவில்லை என கூறப்படுகிறது. குறிப்பாக கடந்த சில மாதங்களாக லால்குடி பகுதியில் எந்த திட்டங்களை தொடங்கினாலும் ,அதற்கு முறையான அழைப்பு எம்எல்ஏ சௌந்தர பாண்டியனுக்கு கொடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த எம்எல்ஏ சௌவுந்தர பாண்டியன் , சமூக வலைதளத்தில் தான் இறந்து விட்டதாக தானே பதிவிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது குறித்து நாம் எம்.எல்.ஏ சௌந்தர் பாண்டியனிடம் கேட்டபோது.. நான் தான் இந்த தகவலை சமூக வலைதளத்தில் பதிவிட்டேன். மேலும் இதைபற்றி விரிவாக பேச விரும்பவில்லை தெரிவித்தார். 

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு , லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியனை நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பிறகு சமூக வலைதளத்தில் பதிவிட்ட தனது கருத்தினை அழித்துவிட்டார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram