EPS | ”அதெல்லாம் முடியாது”எகிறிய எடப்பாடி! விழிபிதுங்கும் EX அமைச்சர்கள்
ஓபிஎஸ், சசிகலாவை கட்சியில் இணைக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர்கள் இபிஎஸ்-க்கு நெருக்கடி கொடுப்பதாக பேசப்பட்டு வரும் நேரத்தில், மீண்டும் ஒன்றிணைய வாய்ப்பே இல்லை என அதிமுக தரப்பில் இருந்தே தகவல் வந்துள்ளது.
மக்களவை தேர்தல் தோல்வியை தொடர்ந்து அதிமுகவில் மீண்டும் குழப்பம் வந்துள்ளதாக கடந்த சில நாட்களாக பேச்சு அடிபடுகிறது. கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைந்தால் தான் ஆட்சியை பிடிக்க முடியும் என்ற குரல் எழ ஆரம்பித்துள்ளது. அதுவும் இபிஎஸ் உடன் இருக்கும் அதிமுக சீனியர்கள் சேலத்தில் உள்ள அவரது வீட்டுக்கே சென்று இரண்டரை மணி நேரமாக முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியானது.
செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், சிவி சண்முகம், தங்கமணி, வேலுமணி, கே.பி.அன்பழகன் ஆகிய ஆறு பேரும் மீண்டும் அனைவருன் ஒன்றிணைய வேண்டும் என இபிஎஸ்-க்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவும், ஆனால் இபிஎஸ் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றி கொள்ளாமல் விடாப்பிடியாக இருப்பதாகவும் கூறப்பட்டது. இனிவரும் நாட்களில் அதிமுகவில் மாற்றங்கள் வர வாய்ப்பிருப்பதாக அரசியல் வட்டாரத்திலும் பேசப்பட்டது.
ஆனால் இதுதொடர்பாக அதிமுக தரப்பில் இருந்து யாரும் விளக்கம் கொடுக்கவில்லை. இபிஎஸ் தலைமையில் அதிமுக நிர்வாகிகளுடன் கடந்த 2 நாட்களாக ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்கு அதிமுக தயாராகி விட்டதாக அதிமுக பக்கம் கவனம் திரும்பியது.
இந்தநிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமாரிடம் சேலத்தில் நடந்த மீட்டிங் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதிமுகவில் இருந்து சென்றவர்களை கட்சியில் இணைக்க போவதில்லை என திட்டவட்டமாக மறுத்துள்ளார்.