Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
தேர்தலுக்கான பணத்தை பற்றி கவலைப்பட வேண்டாம், நான் பார்த்துக் கொள்கிறேன் என இபிஎஸ்-யிடம் அதானி பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்கின்றனர். 2026 தேர்தலில் அதிமுகவை வெற்றி பெற வைத்தே ஆக வேண்டும் என்ற முடிவோடு, அமித்ஷா சில ஏற்பாடுகளை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பீகார் தேர்தலில் ஆட்சியை பிடித்த பிறகு, தமிழ்நாடு தேர்தல் பக்கம் முழு கவனத்தையும் திருப்பியுள்ளது பாஜக. திமுகவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைத்துவிட வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி அமைய வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளோடு அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது பாஜக தலைமை. அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் உடன் இணக்கமாக செயல்பட வேண்டும் என்பதுதான் தலைமையிடம் இருந்து பாஜகவினருக்கு வந்திருக்கும் ஆர்டர்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜக பொறுப்பாளராக பாஜகவின் தேசிய துணை தலைவரும், மக்களவை உறுப்பினருமான பைஜய்ந்த் பாண்டா நியமிக்கப்பட்டார். இந்தநிலையில் சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாட்டுக்கான தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை நியமித்தார் அமைச்சர் அமித்ஷா. தொகுதி பங்கீடு விவகாரத்தில் அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் எந்த பிரச்னையும் வந்து கூட்டணி முறிந்துவிடக் கூடாது என்பதற்காக தான் பியூஸ் கோயலை நியமித்ததாக சொல்கின்றனர். 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது பாஜக தேர்தல் பொறுப்பாளராக இருந்து அதிமுக-பாஜக கூட்டணி உடன்பாடு ஏற்பட முக்கிய காரணமாக இருந்துள்ளார். அதனால் பியூஸ் கோயல் இருந்தால் தொகுதி பங்கீட்டில் எந்த சிக்கலும் இல்லாமல் அதிமுகவுக்கு சாதகமான சூழலை உருவாக்கலாம் என பாஜக தலைமை நினைத்துள்ளது.
அதேபோல் அதிமுக பாஜக கூட்டணிக்காக பிரபல தொழிலதிபர் அதானியும் களத்தில் இறங்கப் போவதாக சொல்கின்றனர். அதிமுகவுக்கு தேவையான சப்போர்ட்டை கொடுக்க நினைக்கும் பாஜக, தேர்தல் செலவுகளுக்கும் அதிமுகவுக்கு உதவுமாறு அதானியிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது. அமித்ஷாவை சந்திப்பதற்காக இபிஎஸ் டெல்லி சென்ற போது அதானியுடனும் சந்திப்பு நடந்ததாக சொல்கின்றனர். அப்போது அதானி தேர்தல் பணிக்கான செலவுகளை பற்றி கவலைப்பட வேண்டாம், நான் பார்த்துக் கொள்கிறேன் என சொன்னதாக டெல்லி வட்டாரத்தில் பேச்சு இருக்கிறது. 5 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாமல் தேர்தலை சந்திப்பதால் செலவுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு தேர்தலில் அதுவே மைனஸாக மாறிவிடக் கூடாது என்பதற்காக பாஜக முன்கூட்டியே கணக்கு போட்டு இந்த ஏற்பாடுகளை செய்துள்ளதாக சொல்கின்றனர். அதிகார பலம், பண பலம் என சப்போர்ட்டை கொடுத்து ஆட்சிக் கட்டலில் அதிமுகவை அமர வைக்க வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறது பாஜக.