தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike
இந்தியாவில் தங்கத்தின் விலை வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சவரன் ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டி விற்பனையாகி வருவது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. "இனி நடுத்தர மக்களால் தங்கம் வாங்க முடியுமா? தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளதா?" என்ற கேள்விகள் பரவலாக எழுந்துள்ளன. பல்வேறு கேள்விகளுக்கு மத்திய அரசு விரிவான பதிலளித்துள்ளது.
இந்தியா கடந்த 10 ஆண்டுகளில் எவ்வளவு தங்கத்தை இறக்குமதி செய்துள்ளது என்பது குறித்த முக்கிய புள்ளிவிவரங்களை மத்திய நிதியமைச்சகம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. விலை உயர்வுக்கான காரணங்கள் என்ன? சர்வதேச பொருளாதார சூழல் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையிலேயே தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
தற்போதைய இந்த திடீர் விலை ஏற்றத்திற்கு இரண்டு முக்கிய காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.. ரூபாய் மதிப்பு சரிவு: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. மற்றொன்று அமெரிக்காவின் வரி விதிப்பு: அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்தியப் பொருட்களுக்கு 50% வரை வரி விதிக்கப்பட்டதும் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்தக் காரணங்களால், சமீபத்தில் ஒரே நாளில் தங்கம் விலை இருமுறை உயர்ந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,00,120 என்ற புதிய உச்சத்தைத் தொட்டது."இனி நடுத்தர மக்களால் தங்கம் வாங்க முடியுமா? தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளதா?" என்ற பல கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
தங்கம் விலை விண்ணைத் தொடும் இந்தச் சூழலில், நாடாளுமன்ற மக்களவையில் சில உறுப்பினர்கள், "வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளியின் அளவு என்ன? தற்போதைய நிலவரம் என்ன?" என்று எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு மத்திய நிதியமைச்சகம் விரிவாக பதிலளித்துள்ளது.
மத்திய அரசு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் இந்தியா மிகப்பிரம்மாண்டமான அளவில் தங்கம்மற்றும் வெள்ளியை இறக்குமதி செய்துள்ளது. கடந்த 2014-15 நிதியாண்டு முதல் 2025-26 நிதியாண்டின் செப்டம்பர் மாதம் வரை, இந்தியா மொத்தம் 93 லட்சத்து 35 ஆயிரத்து 441 கிலோ 93,35,441 kg தங்கத்தை இறக்குமதி செய்துள்ளது. இதே காலகட்டத்தில், 6 கோடியே 53 லட்சத்து 82 ஆயிரத்து 481 கிலோ (6,53,82,481 kg) வெள்ளி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமச்சகம் தெரிவித்துள்ளது.
நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான குறுகிய காலத்தில் மட்டும் இறக்குமதி செய்யப்பட்ட தங்கம் 2 லட்சத்து 99 ஆயிரத்து 768 கிலோ (2,99,768 kg).வெள்ளி 28 லட்சத்து 20 ஆயிரத்து 728 கிலோ (28,20,728 kg)இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது .இந்த குறுகிய காலத்தில் இறக்குமதி செய்யப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளியின் மொத்த மதிப்பு மட்டும் சுமார் 29,733.63 மில்லியன் அமெரிக்க டாலர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு தங்கம் இறக்குமதி செய்யப்பட்டிருந்தாலும், தங்கம் விலை குறையுமா என்பது குறித்து மத்திய அரசு தனது அறிக்கையில் எந்தத் தகவலையும் குறிப்பிடவில்லை. தேவை மற்றும் சர்வதேச சந்தை நிலவரத்தைப் பொறுத்தே விலை மாற்றம் இருக்கும் என்பதால், பொதுமக்கள் இன்னும் சற்றே கலக்கத்துடனேயே உள்ளனர்.