ADMK TVK Alliance | ’’அதிமுக தவெக கூட்டணி! நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்’’ பற்ற வைத்த அமீர் | Ameer
தவெக , அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது என்று இயக்குனர் அமீர் பேசி இருப்பது திமுகவினரிடையே களக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலுக்கான வேலைகளை திமுக, அதிமுக, நாம் தமிழர் , தவெக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் இப்போதே ஆரம்பித்துவிட்டன. அண்மையில் நடந்த தவெக முதல் மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் கொள்கை எதிரி பாஜக என்றும் அரசியல் எதிரி திமுக என்றும் அறிவித்தார். அதை கருத்தில் கொண்டு தான் அவருடைய அரசியல் செயல்பாடுகள் இருக்கிறது.
2026-ல் திமுகவை எப்படியும் வீழ்த்தி விடவேண்டும் என்று திட்டத்தில் தான் தவெக இருக்கிறது. தவெக கட்சி ஆரம்பித்ததில் இருந்து தற்போதுவரை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உட்பட அக்கட்சினர் தவெகவிற்கு எதிராக எதுவும் பேசவில்லை.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட தவெக பற்றி தீவிர எதிர்ப்பை பொது வழியில் வைக்க வேண்டாம் என்றே அறிவுறுத்தி இருந்ததாக செய்திகள் வெளியாகியது. விஜய் கூட அதிமுக பற்றி எந்த ஒரு கருத்துக்களையும் கூறவில்லை. இதனால் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக மற்றும் தவெக கூட்டணி அமைவதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் தான் திமுக ஆதரவாளரும், திரைப்பட இயக்குனருமான அமீர் தவெக , அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்பு இருக்கிறது என்று கூறியிருப்பது திமுகவினரிடையே களக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக தனியார் டிவியில் அமீர் பேசுகையில், “கூட்டணி கணக்கில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. திமுகவை விட அதிமுக குறைந்த பட்சம் ஒன்றரை சதவீத வாக்கு மூன்றரை லட்சம் அல்லது நாலு லட்சம் வாக்கு வித்தியாசம் தான் இருக்கு. அந்த அடிப்படையில் பார்த்தல் தவெக அதிமுக பாமக கட்சிகள் எல்லாம் சேரும் பொழுது அவர்கள் அதிகாரத்தை பிடிக்க வாய்ப்பு இருக்கிறது என்றால் இருக்கு. மக்கள் நம்புவார்களா என்றால் கண்டிப்பாக நம்புவார்கள். இந்த பிரச்சாரம் எல்லாம் எடுபடுமா என்றால் கண்டிப்பாக நடக்கும். அதுபோல் எதிர்கட்சிகள் எல்லாம் சேர்ந்து திமுகவிற்கு எதிரான பிரச்சாரத்தை கையில் எடுத்தால் கண்டிப்பாக எடுபடும்”என்று கூறியிருக்கிறார்.