Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுக
தமிழக வெற்றிக் கழகம் மாநாட்டிற்கு பிறகு பொது நிகழ்ச்சிகளில் ஏதும் விஜய் பங்கேற்காமல் இருந்து வந்தார், அவ்வப்போது பனையூரில் உள்ள தன்னுடைய அலுவலகத்தில் மட்டும் கட்சி நிர்வாகிகளை சந்திப்பது, எளியோருக்கு உதவுவது உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இப்போது மீண்டும் விஜய், ஒரு பொது நிகழ்ச்சியில் பங்கேற்கவிருக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. திமுகவை தன்னுடைய அரசியல் எதிரியாக அறிவித்துள்ள விஜயை வைத்து புத்தக வெளியீட்டு விழாவை ஆதவ் அர்ஜூனா நடத்துவதால் திமுக தரப்பு உஷ்ணத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா தொகுத்துள்ள ‘எல்லோருக்குமான தலைவர் – அம்பேத்கர்’ என்ற நூல் வெளியீட்டு விழாவிற்கு வருகிறார் விஜய். டிசம்பர் 6ஆம் தேதி சென்னையில் நடைபெறும் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பு புத்தகத்தை வெளியிட்டு உரை நிகழ்த்தப்போகிறார் அவர்.
மாநாட்டிற்கு பிறகு அவர் பொதுவெளியிலோ அல்லது கட்சி நிர்வாகிகள் மத்தியிலோ பேசியது எதுவும் வெளியிடப்படாத நிலையில், அம்பேத்கர் குறித்த புத்தக வெளியீட்டு விழாவில் விஜய் என்ன பேசப்போகிறார் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதுவும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா தொகுத்துள்ள புத்தகத்தை அவர் வெளியிடும் நிலையில், அந்த கட்சி குறித்தும் கூட்டணி பற்றிம் கருத்துகளை விஜய் தெரிவிக்க வாய்ப்புள்ளதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
விஜயுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும் பங்கேற்கவிருப்பதாக இருந்த நிலையில், விஜய் திமுக-வை கடுமையாக எதிர்த்து, விமர்சித்து வரும் நிலையில் ஒரு கூட்டணி கட்சித் தலைவராக அந்த நிகழ்ச்சியில் விஜயோடு பங்கேற்பது சரியாக இருக்காது என்று திருமாவளவன் இந்த நிகழ்ச்சியை தவிர்த்துவிட்டார். அரசியல் கள சூழல் காரணமாக தன்னால் இப்போதை ஆதவ் அர்ஜூனா புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்க முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், திருமாவளவன் திமுகவையோ தமிழ்நாடு அரசையோ விமர்சிக்காமல் கூட்டணி தர்மத்தை கடைபிடித்து செயல்பட்டு வரும் நிலையில், அதற்கு நேர்மாறாக ஆதவ் அர்ஜூனா செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், திமுகவை தன்னுடைய அரசியல் எதிரியாக அறிவித்துள்ள விஜயை வைத்து புத்தக வெளியீட்டு விழாவை ஆதவ் அர்ஜூனா நடத்துவதால் திமுக தரப்பு உஷ்ணத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.