Pawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கை
கடந்த ஆட்சியில் தலைவிரித்தாடிய ஊழல் இந்த ஆட்சியிலும் தொடர்கிறது என்று பவன் கல்யாண் தற்போது மீண்டும் சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆட்சி மீது குற்றம் சாட்டியிருப்பது ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலில், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியுடன் இணைந்து தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி போட்டியிட்டது. தெலுங்கு தேசம் கட்சியினர் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தாலும் கூட்டணி கட்சி என்ற அடிப்படையில் பவன் கல்யாணுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
ஆந்திராவில் ஆட்சி அமைந்து 5 மாதங்களே ஆன நிலையில் துணை முதலமைச்சர் பவன் கல்யாண் அவ்வப்போது தெலுங்கு தேசத்தின் ஆட்சி மீது குறை கூறி வருகிறார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “நான் காக்கிநாடா துறைமுகத்தில் நடக்கும் அரிசி கடத்தலை தடுக்க வந்தேன். கடந்த ஆட்சியில் தலைவிரித்தாடிய ஊழல் இன்னும் தொடர்கிறது. இந்த துறைமுகம் அனைவருக்கும் இலவசம் போல தெரிகிறது. யாருக்கும் பொறுப்பு இல்லை” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
மேலும், காக்கிநாடா துறைமுகத்தின்போது ஆய்வு மேற்கொண்ட வீடியோவையும் அவர் பகிர்ந்துள்ளார். எதிர்க்கட்சியான ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆந்திர அரசுக்கு நெருக்கடி அளித்து வரும் நிலையில், ஆளுங்கட்சியின் கூட்டணி கட்சி தலைவரும், துணை முதலமைச்சருமான பவன் கல்யாணே ஊழல் இருப்பதாக கூறியிருப்பது ஆந்திராவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே கடந்த இரு வாரங்களுக்கு முன்பு போதைப்பொருள் விவகாரத்தில் குற்றவாளிகளைத் தடுக்க ஆந்திர அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று உள்துறை அமைச்சரை விமர்சித்து இருந்தார். இந்த விவகாரம் அப்போது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பவன் கல்யாணின் விமர்சனத்தை பெரிதுபடுத்தாமல் குறைகள் சரி செய்யப்படும் என்று அம்மாநில உள்துறை அமைச்சர் இந்த விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.
இந்த நிலையில், பவன் கல்யாண் தற்போது மீண்டும் சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆட்சியில் ஊழல் தொடர்கிறது என்று கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் உள்ள மொத்தம் 175 சட்டமன்ற தொகுதிகளில் தெலுங்கு தேசம் கட்சியினர் 135 தொகுதிகளிலும், ஜனசேனா கட்சி 21 இடங்களிலும் வெற்றி பெற்றது. முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகனின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 11 இடங்களில் வெற்றி பெற்றது. பா;ஜ.க. 8 இடங்களில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.