Mayiladuthurai Skeleton : செப்டிக் டேங்கில் எலும்புக்கூடு.. மயிலாடுதுறையில் பரபரப்பு
சீர்காழி அருகே பயன்படுத்தாத வீட்டின் கழிவறை தொட்டியில் மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே செம்பதனிருப்பு கிராமத்தில் கேசவன் என்பவர் வசித்து வருகிறார். விழுப்புரம் - நாகப்பட்டினம் நான்கு வழி சாலை விரிவாக்க பணிக்காக கேசவனின் வீடு கடந்த சில ஆண்களுக்கு முன்பு இடிக்கப்பட்டு அதன் அருகிலேயே புதிய வீடு கட்டப்பட்டு வருகிறது. ஆனால், பழைய வீட்டின் கழிவறை தொட்டி அகற்றப்படவில்லை புதியதாக கட்டப்பட்டு வரும் வீடு பழைய கழிவறை தொட்டிக்கு அருகாமையில் அமைந்துள்ளது.
இந்நிலையில் கேசவன் வீட்டின் அருகே சிறுவர்கள் நேற்று மாலை கிரிக்கெட் விளையாடியுள்ளனர். அப்போது கிரிக்கெட் பந்து கேசவன் வீட்டு வளாகத்தில் விழுந்து உள்ளது. அதை எடுக்க சென்ற சிறுவர்கள் தொட்டியின் உள்ளே பார்த்தபோது மனித எலும்புக்கூடுகள் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். சிறுவர்கள் பெற்றோர்களிடம் இந்த விஷயத்தை சொன்னதும் உடனடியாக அவர்கள் வீட்டின் உரிமையாளர் மற்றும் பாகசாலை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் நடத்திய முதற்கட்ட விசாரனையில் கழிவுநீர் தொட்டியில் கிடப்பது பெண் ஒருவரின் எலும்புக்கூடு என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கேசவனின் தாயாரான 65 வயதான மணிக்கொடி என்பவரை கடந்த 3 ஆண்டுகளாக காணவில்லை எனக் கூறப்படுகிறது. எனவே காணாமல்போன மணிக்கொடியின் எலும்புக் கூடா? அல்லது வேறு எதேனும் பெண்ணை கொலை செய்து சடலத்தை இங்கு கொண்டு வந்து போட்டுள்ளனரா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மணிக்கொடி காணாமல் போனது தொடர்பாக புகார் எதுவும் அளிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. கழிவறை தொட்டியில் மனித எலும்புக் கூடு கிடந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களுக்கு அச்சத்தை கொடுத்துள்ளது.