
Muslims vs Police : திருப்பரங்குன்றத்தில் கிடா வெட்ட தடை!பொங்கி எழுந்த இஸ்லாமியர்கள்..பாஜக ஆட்சியா நடக்குது?
மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது அமைந்துள்ள பள்ளிவாசலுக்கு சென்ற் இஸ்லாமியர்களை மலை மீது ஆடு கோழி வெட்டக் கூடாது எனக்கூறி காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் இருதரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்கா பள்ளிவாசலுக்கு கடந்த மாதம் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு இஸ்லாமியர் ஆட்டுக்கிடாயுடன் கந்தூரி வழிபாடு நடத்துவதற்காக வந்துள்ளார். அப்போது காவல்துறையினர் மலை மீது ஆடு கோழி வெட்டக் கூடாது என தடுத்து நிறுத்தியதால் திருப்பரங்குன்றம் பள்ளிவாசலை சேர்ந்த ஜமாத்தாருக்கும் காவல்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து எஸ்டிபிஐ, மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார்பாக அதற்கு கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.
இந்நிலையில் இன்று காலை மலை மீது உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்கா பள்ளிவாசலில் கோழி, ஆடு பலியிட்டு சமூக நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக சமபந்தி விருந்து நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து திருப்பரங்குன்றம் மலை மீது செல்லும் கோட்டை தெரு பாதை அடைக்கப்பட்டது. மேலும் மலை மீது தொழுகைக்கு மட்டும் அனுமதி என்றும் உணவுப் பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது எனவும் இஸ்லாமிய பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அதைத்தொடர்ந்து திருப்பரங்குன்றம் பள்ளிவாசல் ஜமாத்தை சேர்ந்தவர்கள் காவல்துறையினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை ஒத்து வராததால் ஆட்டுக்கிடாயை தூக்கிக்கொண்டு ஆண்கள் பெண்கள் என 100க்கும் மேற்பட்டோர் மலையை நோக்கி சென்றனர். பின்னர் காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்திய போது இரு தரப்பிடையே சிறிய தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதன் பின்னர் கைது செய்வோம் என காவல் துறையினரை எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து அமைதியாக கலைந்து சென்றனர்.