Pinniyakkal Women priest : பெண் பூசாரி உசிலம்பட்டி பின்னியக்காள் வரலாறு தெரியுமா?

Continues below advertisement

தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவது தொடர்பாக சட்டப்படி அடுத்த நூறு நாள்களில் பணி நியமனம் வழங்கப்படும் . இனிவரும் காலங்களில் கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வதை அரசு உறுதி செய்யும்” என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சமீபத்தில் தெரிவித்தார். அதே போல பெண்களையும் அர்ச்சகராக்கும் திட்டம் உள்ளது. அர்ச்சகராக விரும்பும் பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். பற்றாக்குறை உள்ள இடங்களில் பெண்கள் அர்ச்சகராக நியக்கமிக்கப்படுவர் என்றும் தெரிவித்தார். இப்படியான அறிவிப்பு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில் மதுரை உசிலம்பட்டி பகுதியில் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு கோயிலில் பூசாரியாக இருக்கும் பின்னியக்காள் குறித்து விசாரிக்க அவர் வசிக்கும் நல்லுத்தேவன்பட்டி சென்றோம். அள்ளி முடிஞ்ச கொண்டையில், தொங்கு காது அமைப்பில் உசிலம்பட்டி மண்ணைச் சேர்ந்த பெண்ணாய் நம்மை வரவேற்றார். " வாங்கப்பே..., டீ தண்ணி குடிக்கிறீகளா. மோரூ...கீரு.., குடிக்கிறீகளா’ என்று அன்பான உபசரிப்புக்கு பின் நம்மிடம் பேசினார். ’லிங்கநாயக்கன்பட்டி லதே நாங்க வணங்குற துர்க்கையம்மன் கோயில் இருக்கு. இந்த கோயில்லதே 10 தலைமொறைக்கு மேல பூசாரியா கொண்டு செலுத்துறோ. எங்க தாத்தெ, பூட்டெ, சியான், அப்பா எல்லாருக்கும் பூசாரி பின்னுத்தேவன்னு பேருக வரும். அதுமாதிரிதே. எங்க அப்பு எனக்கு ’பின்னியக்காள்’னு பேரு வச்சாரு. பல வருசமாக ஆம்பளை பிள்ளைகள வச்சு கொண்டு செலுத்துன எங்க பரம்பரையில எங்க அப்பாக்கு நான் ஒரே பிள்ளை பொம்பளபிள்ளையா பிறந்தே. ஆனா எங்க அப்பாரு என்னைய ஆம்பளை மாதிரி தாட்டியமா வளத்தாரு. எனக்கு வெவரம் தெரியிறதுக்கு முன்னாடி இருந்தே என்னை கோயில் படிவசாலுக்கு கூட்டியாந்துட்டாரு. அதுனால இந்த ’துர்க அம்மன்’ ரத்தத்தோட கலந்துருச்சு. எங்க கோயில் முறைபூரா அத்துப்புடி. வருசத்துல பொரட்டாசி மாசம் மூனாவது வெள்ளிக் கிழமை திருவிழா சாட்டுவோம். அம்மனுக்கு பழம் தேங்கா, படயல் போட்டு பெட்டி தூக்கியாந்து பொங்க வச்சு சாமிகும்புடுவோம். எங்க கோயில்ல திருநீறு வாங்குனா கஷ்டமெல்லாம் அத்து போய்ரும். எட்டா கொழைய எட்டி கொட்டுக்கும். மண்டைக்கு பத்து போடாம காப்பாத்தியாரும். அதே மாதிரி தப்பு செய்றவங்கல கொலை அறுத்துரும்னு தப்பு, தண்டாக்காரங்க பயப்புடுவாங்க. அந்த அளவுக்கு துடியான தெய்வம். இப்படி இருக்கையில எங்க அப்பா பூசாரித் தனம் பாத்துவந்தாரு. அப்படியே அவருக்கு ஒடம்பு சரியில்லாம போச்சு. எங்கப்பாக்கு நான் மட்டுந்தே வாரிசுனு ஆராத்தி தட்ட கையில எடுத்தேன். எங்க அப்பா திருநீறு போட்டு நல்லபடியா பூசாரித்தனத்த கொண்டு செலுத்துடானு கெட்டியா தைரியம் கொடுத்தாரு. நானும் கெட்டிக்கார தனமா சாமிய கொண்டு செலுத்துனேன். ஆனா ரெண்டாம் பங்காளி, மூணாம் பங்காளிக "எப்புடி பொம்பள பிள்ளை பூச பண்றது. அதலாம் வேணாம்”னு என்னை ஒதுக்குனாங்க. ஆனா நான் விடல எங்க அப்பா என்ட குடுத்த விபூதி வீண் போகக்கூடாதுனு எல்லா எடமும் ஏறி இறங்குனேன். எல்லா டாக்குமெண்டும் எனக்கு சரியா இருந்ததால என்னைய நீதிமன்றம் பூச செய்ய சொல்லிருச்சு. ஆனாலும் என்னை மறைமுகமாக எதிர்த்து என்ன பூச செய்யவிடல. மறுபடியும் கோர்ட்டு போயி போலீஸ் பாதுகாப்பு கேட்டு வாங்குனேன். அதுக்கப்பறம் யாரும் என்னை எதிர்த்துக்கிட்டு வரல. எல்லா மக்களும் நல்லபடியா சாமி கும்பிட்டுக்கிட்டு போறாங்க. எனக்கு துரோகம் நினைச்சவங்கள கூட நான் தள்ளி நில்லுனு சொல்லல. சொல்லவும் மாட்டேன். மலை, மலையா வானு நல்ல வாக்கு தேன் சொல்றேன். தற்போதைய தமிழ்நாட்டு அரசாங்கம் பொறுப்பேத்துக்கிட்ட பின்னாடி பெண்களுக்கு முன்னுரிமை கிடைச்சுக்கிட்டு இருக்கு. அதே மாதிரி கோயில்களையும் பெண்கள் வந்துட்டா எந்த வேத்துமையும் இல்லாம இருக்கும்" என்றார் மகிழ்ச்சியாக. மேலும் பின்னியக்காளுக்கு சட்ட போராட்டத்திற்கு உதவிய வழக்கறிஞர் முரளிதரனிடம் பேசினோம்..," பின்னியக்காளிடம் எல்லா தரப்பு நியாம் இருந்தாலும் தாசில்தார், ஆர்.டி.ஓ உள்ளிட்டோர் ஒத்துழைப்பு இல்லாமல் இருந்தது. உள்ளூர் மக்களின் சிலரின் பேச்சைக் கேட்டு முடிவெடுத்தனர். அதனை தொடர்ந்து கீழமை நீதிமன்றங்கள் மூலம் நியாயத்தை பெற்றோம். ஆனால் பின்னியக்காளை ஒதுக்கியே சிலர் பூஜை செய்தனர். அதனால் உயர்நீதிமன்றத்தின் மூலம் நியாயமான தீர்ப்பை பெற்று அவருக்கு காவல்துறையின் பாதுகாப்பை பெற்றோம். அதனால் தொடர்ந்து காவல்துறையின் பாதுகாப்பில் பூஜை செய்துவருகிறார். ஊர் மக்களும் அவரிடம் விரோதம் இல்லாமல் சாமி கும்பிட்டு செல்கின்றனர். காவலர் பால்பாண்டி தற்போது பாதுகாப்பு பணியில் உள்ளார். ஊரடங்கு நேரம் என்பதால் அதிகமான பக்தர்கள் அனுமதிக்காமல் பின்னியக்காள் மட்டும் பூஜை செய்துவருகிறார். பின்னியக்காளின் வெற்றி பலருக்கும் முன் உதாரணம். அதே போல் பெண்கள் அர்ச்சகராக மாற்றும் அறிவிப்பு வரவேற்கக்கூடியது" என்றார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram