Kanchipuram Mayor | "காஞ்சிபுரம் மேயர தூக்குங்க"களத்தில் இறங்கிய KN நேரு!

Continues below advertisement

காஞ்சிபுரம் மாநகராட்சி மேயருக்கு எதிராக திமுக மற்றும் எதிர்க்கட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள் 33 பேர் போர்க்கொடி தூக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் மேலிடம் வரை சென்றதால் அமைச்சர் கே.என்.நேரு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

காஞ்சிபுரம் மாநகராட்சியின் தற்போதைய மேயராக மகாலட்சுமி யுவராஜ் உள்ளார். மகாலட்சுமிக்கு ஆரம்பம் முதலே சிக்கல்கள் எழுந்த வண்ணம் உள்ளன. திமுக அவருக்கு மேயராக சீட் வழங்கிய பொழுது, அவருக்கு எதிராக திமுகவை சேர்ந்த சூர்யா என்பவர் மேயருக்கு போட்டியிட்டார். அப்போதே அவருக்கு எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் மற்றும் திமுகவின் சேர்ந்த சில கவுன்சிலர்களின் ஆதரவு இருந்தது.

மாநகராட்சி ஆணையராக இருந்த கண்ணன், மேயர் தரப்பு அழுத்தத்தால் மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. தற்பொழுது மாநகராட்சி ஆணையராக உள்ள செந்தில் முருகன் மேயர் தரப்பிற்கு மட்டும் ஆதரவாக இருப்பதாகவும், மற்ற கவுன்சிலர்களை கண்டுகொள்ளவில்லை என்றும் புகார் எழுந்தது. மேயரின் கணவரின் ஆதிக்கம் அதிகம் இருப்பதாகவும் திமுக கவுன்சிலர்கள் குற்றம்சாட்டினர். 

இறுதியில் மேயருக்கு எதிராக திமுக கவுன்சிலர்களும், எதிர்க்கட்சி கவுன்சிலர்களும் கைகோர்க்க தொடங்கினர். மகாலட்சுமி மீது நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வர வேண்டுமென, திமுக கவுன்சிலர்கள் 17 பேர், அதிமுக கவுன்சிலர்கள் 7, பாமக கவுன்சிலர்கள் 2, காங்கிரஸ் துணை மேயர் குமரகுருநாதன், சுயேச்சைகள் 5, பாஜக ஒருவர் என 33 பேர் இணைந்து மாவட்ட ஆட்சியரிடம் கடந்த ஏழாம் தேதி புகார் மனு அளித்தனர். 

கவுன்சிலர்களின் எதிர்ப்பு காரணமாக மாநகராட்சி கூட்டங்கள் கூட நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. தீர்மானங்கள் நிறைவேற்றப்பட முடியாததால், மாநகராட்சியும் செயல்படாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இப்பிரச்சினை நாளுக்கு நாள் வளர்ந்து அறிவாலயம் வரை சென்றுள்ளது. இதனை தொடர்ந்து கட்சி மேலிட உத்தரவின் பேரில், அமைச்சர் கே.என்.நேரு கவுன்சிலர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். 

மேயர் மற்றும் மேயர் கணவர் ஆகியோரின் ஆதிக்கம் மாநகராட்சி முழுவதும் அதிகரித்து வருகிறது. கவுன்சிலர்களை மதிப்பதில்லை, ஆணையரும் ஒரு சார்பு நிலையில் செயல்படுவதால் பொது மக்களுக்கு அடிப்படை விஷயங்கள் கூற செய்து தர முடியவில்லை. என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை அமைச்சரிடம் முன் வைத்துள்ளனர். பிரச்சனை இன்றி இரண்டு தரப்பும் ஒருங்கிணைந்து செயல்பட அமைச்சர் வலியுறுத்தியுள்ளார். மறுபுறம் அமைச்சர் மேயர் தரப்பிடம், கவுன்சிலர்கள் முன்னிலையில் காட்டமாக பேசியுள்ளார்.

ஆனால் மேயர் மகாலட்சுமி தலைமையின் கீழ் எங்களால் பணியாற்ற முடியாது, எனவே மேயரை மாற்றியே ஆக வேண்டும் என 18 கவுன்சிலர்கள் வரை விடாப்படியாக இருந்ததால் பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட தோல்வியில் முடிந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் நாங்கள் ராஜினாமா செய்ய இருப்பதாக 18 கவுன்சிலர்கள் வரை  மாவட்ட செயலாளர் சுந்தரிடம் மனு அளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram