Wayanad Landslide : கண்ணீரில் வயநாடு..உதவிக்கரம் நீட்டிய குழந்தைகள்..நெகிழ்ச்சி செயல்!
நெல்லை டவுண் பகுதியை சேர்ந்த மாணவர்கள் இருவர் வயநாடு பேரிடருக்கு உதவும் வகையில் உண்டியலில் சேர்த்து வைத்த பணத்தை நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். தொலைக்காட்சிகளில் வயநாட்டில் நடந்த சம்பவத்தை பார்த்து உண்டியலில் உள்ள பணத்தை கொடுத்ததாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
நெல்லை டவுண் பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியான சுந்தர்ராஜன் - அஸ்வினி தம்பதியினருக்கு மனோ லட்சுமணன் என்ற ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவரும், அபிநயா என்ற இரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவியும் உள்ளனர். தாய் தந்தை பாட்டி தாத்தா உள்ளிட்டோர் தினந்தோறும் மிட்டாய் உள்ளிட்டவைகள் வாங்க கொடுக்கும் பணத்தை சிறிது சிறிதாக உண்டியலில் சேமித்து வைக்கும் பழக்கத்தை இரண்டு மாணவர்களும் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரள மாநிலம் வடநாட்டில் நடந்த கோர சம்பவத்தை தொலைக்காட்சியில் பார்த்து மிகுந்த சோகத்திற்கு சென்றுள்ளனர். இந்த நிலையில் மாணவர்கள் இருவரும் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் தாய் தந்தையரிடம் தாங்கள் சேர்த்து வைத்த பணம் குறித்து தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து தாங்கள் சேர்த்து வைத்திருந்த உண்டியல் பணம் ₹ 4448 ரூபாயை கேரள பேரிடர் நிதிக்கு வழங்கினர்.
இதனை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் கேரள மாநில அரசுக்கு இதை அனுப்பி வைப்பதாகவும் மாணவர்கள் தொடர்ந்து இது போல் பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட வேண்டும் எனவும் வாழ்த்து தெரிவித்தார். மாணவர்களின் இந்த செயல் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.