Mamata banerjee : ”காங்கிரஸ் எங்ககிட்ட கேட்கல” மீண்டும் அதிருப்தியில் மம்தா
சபாநாயகர் தேர்தல் விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. தங்களுடன் ஆலோசிக்காமல் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் தரப்பில் இருந்து அதிருப்தி வந்துள்ளது.
மக்களவை சபாநாயகர் பதவிக்கு ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி இடையே ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. இத்தனை ஆண்டுகளாக ஒருமித்த கருத்துடனேயே மக்களவை சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தார். இந்த முறை இரண்டு தரப்பும் முரண்டு பிடிப்பதால் சபாநாயகர் பதவிக்கு தனித்தனியாக நபர்களை அறிவித்துள்ளனர். NDA கூட்டணி சார்பில் ஓம் பிர்லா அறிவிக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் சார்பில் சுரேஷ் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளார். கூட்டணி கட்சிகள் ஆதரவளிப்பது தொடர்பாக காங்கிரஸ் ஆலோசனைக்கும் திட்டமிட்டது.
இந்தநிலையில் சபாநாயகர் விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் காங்கிரஸ் மீது அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தங்களை யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்றும், இது ஒருதலைப்பட்சமான முடிவு என்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி அபிஷேக் பானர்ஜி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் நிறுத்தியுள்ள வேட்பாளருக்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது தொடர்பாக மம்தா பானர்ஜிதான் முடிவு செய்வார் என்றும் குறிப்பிட்டார்.
ஏற்கனவே மக்களவை தேர்தல் சமயத்தில் தொகுதி பங்கீடு விவகாரத்தில் 2 கட்சிகளுக்கும் இடையே மோதல் முற்றியது. இறுதியில் தனித்து களமிறங்கினார் மம்தா. இருந்தாலும் இந்தியா கூட்டணியில் இருப்பதை உறுதி செய்தார். இந்த கூட்டணி ஆட்சியமைக்க வேண்டும் என தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். இந்தநிலையில் சபாநாயகர் விவகாரத்தில் மீண்டும் மம்தா பானர்ஜி காங்கிரஸ் மீது அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.