Kuwait Fire Accident : குவைத்தில் நடந்த கொடூரம்! இந்தியர்களின் நிலை என்ன? ராகுல் சரமாரி கேள்வி!
குவைத் தீ விபத்தை தொடர்ந்து மத்திய கிழக்கு நாடுகளில் இந்தியர்களின் நிலை என்னவென, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
குவைத்தில் தனியார் கட்டடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், 40 இந்தியர்கள் உட்பட 49 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குவைத்தில் தனியார் கட்டடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் தமிழர்கள் உட்பட 40 இந்தியர்கள் உயிரிழந்தனர். மொத்தமாக இதுவரை 49 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 50 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், அவர்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ள வெளியுறவு இணையமைச்சர் குவைத் செல்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பான டிவிட்டர் பதிவில், “குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 40க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன், காயமடைந்தவர்கள் அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இந்தியர்களின் நலன் மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம்” என குறிப்பிட்டுள்ளார். மேலும், “இந்திய அரசு, குவைத் அரசுடன் இணைந்து பணியாற்றி அங்குள்ள நமது குடிமக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் மற்றும் கண்ணியமான வாழ்க்கைத் தரத்தை உறுதிப்படுத்த வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.