6 முறை சாம்பியன்கடா மீசை.. WWE ஜாம்பவான் ஹல்க் ஹோகன் திடீர் மரணம் | WWE
90-களில் பிறந்த நபர்களுக்கு தொழில்முறை மல்யுத்தம் என்றாலே நினைவிற்கு வருபவர்களில் ஹல்க் ஹோகன் தவிர்க்க முடியாத நபர் ஆவார்.
முறுக்கேறிய கட்டுமஸ்தான உடல், கடா மீசையுடன் தலையில் தலைப்பாகை கட்டிக்கொண்டு ஆக்ரோஷமாக கத்தியபடி அரங்கத்திற்குள் நுழைந்து, சட்டையை கிழித்தபடி களத்திற்குள் இறங்கி பலரையும் பிரம்மிக்கச் செய்தவர் ஹல்க் ஹோகன். WWE எனப்படும் தொழில்முறை மல்யுத்த போட்டிகளின் அடையாளமாகவே திகழ்ந்த இவர், தனது 71வது வயதில் இறந்துள்ளதாக அறிவிக்கபொபட்டுள்ளது. இது ஒட்டுமொத்த தொழில்முறை மல்யுத்த ரசிகர்களை, குறிப்பாக தாங்கள் கொண்டாடிய மேலும் ஒரு நாயகனும் மறைந்துவிட்டதாக 90ஸ் கிட்ஸ்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஹல்க் ஹோகனின் மறைவிற்கு உலகம் முழுவதிலுமிருந்து ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஃபுளோரிடாவில் உள்ள க்ளியர் வாட்டர் பகுதியில் வசித்து வந்த ஹல்க் ஹோகன் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக காவல்துறை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக WWE வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “பாப் கலாச்சாரத்தின் மிகவும் அடையாளம் காணக்கூடிய நபர்களில் ஒருவரான ஹோகன், 1980களில் WWE உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற உதவினார். ஹோகனின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு WWE தனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.