Airtel Employee: “இந்தியில் தான் பேசுவேன்” வாக்குவாதம் செய்த ஏர்டெல் ஊழியர்! வெடித்த மொழி பிரச்சனை
மத்திய பாஜக அரசின் மும்மொழி கொள்கைக்கு எதிராக தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வரும் சூழலில், மும்பையில் உள்ள ஏர்டெல் சேவை மையத்தில் இருந்த ஊழியர் ஒருவர் மராத்தியில் பேச மறுத்து இந்தியில் பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி புயலை கிளப்பியுள்ளது.
மகாராஷ்டிராவில் உள்ள ஏர்டெல் நிறுவனத்திற்கு கடந்த சில நாட்களுக்கு முன்னர் இளைஞர் ஒருவர் சென்றுள்ளார். அப்போது அந்த இளைஞர் அங்கு வேலை செய்யும் பெண் ஊழியர் ஒருவரிடம் மராத்தியில் பேசியுள்ளார். அதற்கு அந்த பெண் இந்தியில் பதில் அளித்ததாக சொல்லப்படுகிறது. அந்த இளைஞரோ எனக்கு இந்தி தெரியாது என்று கூறியுள்ளார். பின்னர், “ நீங்கள் மகாராஷ்டிராவில் வேலை பார்த்து வருகிறீர்கள் உள்ளூர் மொழி தெரியாமல் எப்படி வேலைக்கு வருகிறீர்கள்” என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார். இதனிடையே அந்த இளைஞருக்கும் , ஏர்டெல் ஊழியருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
உடனே அந்த பெண்ணோ,”நான் ஏன் மராத்தியில் பேச வேண்டும். நீங்கள் மகாராஷ்டிராவைச் சொந்தமாக்கிக் கொண்டீர்களா? நீங்கள் மகாராஷ்டிராவை வாங்கினீர்களா? எங்கு வாழ வேண்டும், எங்கு வாழக்கூடாது என்று நீங்கள் எனக்குச் சொல்ல முடியாது. மேலும் வீடியோ பதிவை நிறுத்துங்கள். ஒருவரைப் படம்பிடிக்க அனுமதி இல்லை. நான் போலீஸை அழைப்பேன். மகாராஷ்டிராவில் வாழ, நான் மராத்தி பேச வேண்டும் என்று நீங்கள் ஏன் என்னிடம் சொல்கிறீர்கள்?.
மராத்தி என்பது எனக்கு முக்கியமில்லை. நாம் இந்துஸ்தானில் வசிக்கிறோம். யார் வேண்டுமானாலும் எந்த மொழியை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்” ன்று கூற அருகில் இருந்தவர்கள் அந்த பெண்ணை சமாதனபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இது தொடர்பான வீடியோதான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆர் எஸ் எஸ் தலைவர்,லைவர் பய்யாஜி ஜோஷி, மும்பைக்கு ஒரே மொழி இல்லை என்றும், மும்பைக்கு வரும் மக்கள் மராத்தி மொழியை கற்க வேண்டிய கட்டாயம் இல்லை ” என்று கூறிய நிலையில் மகாராஸ்டிரா முதல்வர் பட்னாவிஸ் எதிர்ப்பு தெரிவித்து, ”மராத்திதான் நம் மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மொழி. இந்த மாநிலத்தில் உள்ள அனைவரும் மராத்தியை கண்டிப்பாக கற்க வேண்டும். மதிக்க வேண்டும். மாநிலத்தின் வளர்ச்சியிலும் கலாசாரத்திலும் மராத்திக்கு முக்கியப்பங்குள்ளது” என்ரு கூறியது குறிப்பிடத்தக்கது.