Monkey Video : முட்டை சாப்பிடும் குரங்குகள்..வியந்து பார்த்த மக்கள்! ரசிக்க வைக்கும் வீடியோ
வனப் பகுதியை விட்டு வெளியே வந்த குரங்குகள் மாரண்டஅள்ளி அரசு பள்ளி சத்துணவு முட்டையை எடுத்து உணவு முறை மாறி, குரங்குகள் முட்டையின் வெள்ளை, மஞ்சள் கருவை ரசித்து சாப்பிடுவதை அந்த பகுதியில் உள்ள மக்கள் வினோதமாக பார்த்தனர்.
தருமபுரி மாவட்டத்தில் தேவையான தண்ணீர் மற்றும் உணவுகள் வனப்பகுதியில் இல்லாததால் ஏராளமான குரங்குகள் உணவைத் தேடி அருகில் உள்ள கிராமப் பகுதிகளுக்குள் நுழைந்து வருகிறது. இவ்வாறு கிராமப் பகுதிகளுக்குள் வரும் குரங்குகள், வீடுகளில் நுழைந்து, உணவு பண்டங்களை எடுத்துச் செல்வது, குழந்தைகள் கையில் வைத்திருக்கும் தின்பண்டங்களை பறித்து செல்வது, விவசாய நிலங்களில் நுழைந்து பயிர்களை அழிப்பது என பொதுமக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் வனப் பகுதியை விட்டு, நகர் பகுதிக்குள் வந்த குரங்குகளின் உணவு முறை முற்றிலுமாக மாறி உள்ளது. வனப் பகுதிகளில் உள்ள குரங்குகள் அசைவத்தை உண்பதில்லை. ஆனால் தற்பொழுது நகர் பகுதிக்குள் நுழைந்துள்ள குரங்குகள், இயற்கை உணவு மட்டுமல்லாமல் இறைச்சி போன்ற அசைவ உணவுகளையும் உண்டு வருகிறது.
இந்நிலையில் மாரண்டஅள்ளி அரசு தொடக்கப்பள்ளி அருகே சுற்றி திரியும் குரங்குகள், பள்ளியில் சமையலறைக்கு சென்று முட்டைகளை எடுத்துச் செல்கிறது. ஒரு குரங்கு, மூன்று, நான்கு முட்டைகளை எடுத்துச் சென்று ஓடுவதும், அதனை பார்த்து மற்ற குரங்குகள், முட்டைகளை பறித்து செல்வதும் நடந்து வருகிறது. இந்நிலையில் முட்டை எடுத்து வந்த குரங்குகள், சண்டை போட்டதில் ஒரு முட்டை கீழே விழுந்து உடைந்து விட்டது. அதனை ஒரு குரங்கு வாயை வைத்து முட்டையின் வெள்ளை மற்றும் மஞ்சள் கருவை ரசித்து, ருசித்து சாப்பிட்டது. குரங்குகள் இயற்கையை உணவு வகையை மட்டுமே உண்ணும், அசைவ உணவை குரங்குகள் உண்ணது. ஆனால் இங்கு முட்டையின் வெள்ளை, மஞ்சள் கருவை ரசித்து சாப்பிடுவதை அந்த பகுதியில் உள்ள மக்கள் வினோதமாக பார்த்தனர்.