BJP cadre false complaint : பொய் சொன்ன பாஜக பிரமுகர்! உண்மையை உடைத்த கொள்ளையன்! ஆத்திரத்தில் POLICE

Continues below advertisement

ஒன்றரை கோடி ரூபாய் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டதாக பாஜக நிர்வாகி போலீசில் பொய் புகார் அளித்த நிலையில், கொள்ளையனிடம் மேற்கொண்ட விசாரணையில் 18.5 லட்சம் மட்டுமே திருடப்பட்டது அம்பலமாகியுள்ளது.

கோவை மாவட்டம் அன்னூர் அடுத்த சொக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். பாஜக பிரமுகரான இவர் இதே பகுதியில் வாகனங்களை சுத்தம் செய்யும் ஒர்க் ஷாப் வைத்து நடத்தி வருகிறார். இவர் சம்பவத்தன்று காலை தனது தோட்டத்துக்கு சென்று விட்டு பிற்பகலில் மீண்டும் வீட்டுக்கு திரும்பியதாக சொல்லப்படுகிறது. அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடந்தார். உடனடியாக உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த பணம் மற்றும் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. 

இதையடுத்து விஜயகுமார் தன் வீட்டில் வைத்திருந்த ஒன்றரை கோடி ரூபாய் ரொக்கம் மற்றும் 9 சவரன் நகைகள் காணாமல் போனதாக அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர். சிசிடிவியில் பார்த்த போது, சந்தேகத்துக்கிடமான நபர் ஒருவர் விஜயகுமாரின் வீட்டுக்கு அருகே இருசக்கர வாகனத்தில் வந்து சென்றது தெரிய வந்தது. 

இதையடுத்து கருமத்தம்பட்டி பகுதியில் பதுங்கி இருந்த அந்த நபரை சுற்றி வளைத்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த நபர் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த அன்பரசன் என்பதும், கருமத்தம்பட்டி பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி கூலி வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. பாஜக பிரமுகர் விஜயகுமாரின் வீட்டில் பூட்டை உடைத்து 18 புள்ளி 5 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 9 சவரன் நகைகளை அன்பரசன் கொள்ளையடித்துச் சென்றதும் வெளிச்சத்துக்கு வந்தது. 

இதுதொடர்பாக பாஜக பிரமுகர் விஜயகுமாரிடம் விசாரணை நடத்தியதில், கொள்ளையர்களை விரைவாக பிடிப்பதற்காக போலீசுக்கு அழுத்தம் தரவே ஒன்றரை கோடி ரூபாய் காணாமல் போனதாக பொய்யான தகவலை தெரிவித்ததாக கூறியுள்ளார். பொய்யான தகவல்களை கூறி போலீசாரை அலைக்கழித்த பாஜக பிரமுகர் விஜயகுமார் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்ய உள்ளதாகவும் எஸ்.பி பத்ரிநாராயணன் தெரிவித்தார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram