Food Story: கலைஞருக்கு அல்வா கொடுத்த சீர்காழி!

Continues below advertisement

சீர்காழியில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரியமிக்க சைக்கிளில் அல்வா இதற்கென்று ஒரு ரசிகர் பட்டாளம். அல்வா என்கிற சொல்லை கேட்டாலே சிறியவர் முதல் பெரியவர் வரை நாக்கில் எச்சில் ஊறும். அப்படிப்பட்ட அல்வாவிற்கு என்று ஒரு சில உதாரணங்கள் உண்டு, திருநெல்வேலி இருட்டுக்கடை அல்வா, திருவையாறு அசோகா அல்வா போன்று சீர்காழியில் பிரபலமானது சைக்கிள் அல்வா.

ஆமாங்க மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி செட்டித்தெருவில் வசித்துவந்த சுந்தரம் என்பவர் 1966- ஆம் ஆண்டு முதல் தனது வீட்டிலேயே சம்பா கோதுமையை அரைத்து அதில் பால் எடுத்து தன் கைபக்குவத்தில் அல்வா தயார் செய்து, அதனை தட்டில் வைத்து, கடைவீதிகளில் விற்பனை செய்து வந்துள்ளார். இந்த பாரம்பரியம் அல்வா இன்று 55 ஆண்டுகள் கடந்து தற்போதும் தொடர்ந்து அதே சுவையுடன் சீர்காழி மற்றும் இன்றி பல்வேறு நாடுகள் வரை வரவேற்பைப் பெற்று விற்பனை ஆகி வருகிறது. சீர்காழி அல்வா சுந்தரத்தின் மறைவிற்கு பின்னர் அவரது மகன்கள் நான்கு பேரும் தனித் தனியாக தங்களது வீடுகளிலேயே தன் தந்தையிடம் கற்றுக் கொண்ட அல்வா பக்குவத்தை சிறிதும் மாறாமல் அல்வா தயார் செய்து சைக்கிளில் எடுத்துச் சென்று சீர்காழி நகர் முழுவதும் விற்பனை செய்து வருகின்றனர்.

சில தவிர்க்க முடியாத காரணங்களால் இரண்டு சகோதரர்கள் இந்த அல்வா விற்பனையை கைவிட்ட நிலையில் தற்போது மற்ற இரு சகோதரர்களான கணேசன் மற்றும் ரவி ஆகிய இருவர் மட்டும் அல்வா வியாபாரத்தை தொடர்ந்து செய்து வருகின்றனர். இந்த அல்வா திருநெல்வேலி அல்வா போன்று சுவை, நல்ல தரத்துடன் இருப்பதால், மக்களிடையே பிரபலமானது. சீர்காழி மக்கள் வெளியூர்களில் உள்ள தங்களது உறவினர்கள் வீடுகளுக்குச் செல்லும்போது இந்த சம்பா கோதுமை அல்வாவை வாங்கிச் செல்வதுடன், வேலை நிமித்தமாக சிங்கப்பூர், சவூதி, துபை போன்ற வெளிநாடுகளில் பணிபுரியும் தங்கள் பிள்ளைகளுக்கும், உறவினர்களுக்கும் வாங்கி கொடுத்து அனுப்புகின்றனர். ஒரு மாதம் ஆனாலும் இந்த சம்பா கோதுமை அல்வா கெடாமல் உள்ளது. இந்த நவீன காலத்திலும் இந்த அல்வா வியாபாரிகள் சைக்கிளில் சென்றுதான் வியாபாரம் செய்கின்றனர்.

இதனாலேயே இது சைக்கிள் அல்வா என பெயர் பெற்று மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. தினந்தோறும் இந்த சைக்கிள் அல்வா வருகை நோக்கி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. ஆகையால் ஒரு சில மணித்துளிகளில் இந்த அல்வா விற்றுத் தீர்ந்துவிடும். இதுகுறித்து, அல்வா வியாபாரம் செய்துவரும் ரவி கூறுகையில் 25 ஆண்டுகளுக்கு மேலாக அல்வா வியாபாரம் செய்து வருவதாகவும் பாரம்பரிய முறையில் தனது தந்தையின் பக்குவத்தை முறையாக பின்பற்றி, விறகு அடுப்பை பயன்படுத்தி அல்வா தயார் செய்வதாகவும், முதல் நாள் சம்பா கோதுமையை தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலை அந்த கோதுமையை நன்கு அரைத்து அதிலிருந்து பால் எடுத்து பின்னர், மூன்றாம் நாள் அந்த பாலை தெளியவைத்து அல்வா கிண்டுவோம் என்றும், பின்னர் தயார் செய்த அல்வாவை சைக்கிளில் எடுத்துச்சென்று நகர் முழுவதும் தெரு, தெருவாக சென்று வியாபாரம் செய்து வருவதாகவும், தனது தந்தையின் காலத்தில் மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதியின் உறவினர்கள் தொடர்ந்து கோபாலபுரம் செல்லும்போதெல்லாம் அவருக்காக தனது தந்தையிடம் அல்வா வாங்கி செல்வார்கள் என்றும் தெரிவித்தார்.

விலைவாசி விலையேற்றம் நடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா நோய்த்தொற்று ஊரடங்கு காலத்தில் மிகவும் சிரமத்தை சந்தித்து வருகிறோம் இந்த பாரம்பரிய அல்வா வியாபாரத்தை தொடர அரசு உதவி கரம் நீட்டுமா என்ற எதிர்பார்ப்பில் தொடரும் அல்வா வியாபாரம்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram