டிட்வா கதை ஓவர்?மழை நிற்குமா? தொடருமா?வானிலை நிலவரம் என்ன? | Ditwah Cyclone TN Rain
தமிழ்நாட்டில் இன்று தூத்துக்குடி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக மண்டல வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, தர்மபுரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
05 ஆம் தேதி தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 06-ஆம் தேதி முதல் 09 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25' செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாணவர்களின் நலன் கருதி சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழழை தொடங்கி கடந்த மூன்று நாட்களாக சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பதிவானது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி, பல இடங்களில் போக்குவரத்து முடங்கி பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். அரசு முன்னெடுத்த மழைநீர் வடிகால் பணிகள் காரணமாக பல இடங்களில் தண்ணீர் உடனடியாக வடிந்தாலும், தாழ்வான பகுதிகளில் இன்னும் தண்ணீர் தேங்கியபடியே உள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு முதல் மழை பெய்யாததால் தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள நீரையும் வெளியேற்ற அரசு அதிகாரிகள் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். இதனால், சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் மெல்ல மெல்ல இயல்பு நிலை திரும்ப தொடங்கியுள்ளது.