சென்னையில் மழை தாண்டவாம் டிட்வாவின் LATEST UPDATE எப்போது மழை நிற்கும்? | TN Rain Ditwah Cyclone
மாமல்லபுரத்திற்கு தெற்கே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்து விழுப்புரம் மாவட்டத்தில் நிலைக்கொண்டுள்ள நிலையில் தமிழக நிலப்பரப்பில் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் இன்றும், நாளையும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்தே காணப்படும் என வெதர்மேன் அலார்ட் லொடுத்துள்ளார்.
சென்னையை ஏமாற்றிய வடகிழக்கு பருவமழை டிசம்பர் மாதமாவது சென்னையை காப்பாற்றுமா என மக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். இதற்கு பதில் கொடுக்கும் வகையில் கடந்த 4 நாட்களாக விடாமல் மழை கொட்டி வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கும் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
டிட்வா புயல் இலங்கையை புரட்டி போட்டு தமிழகத்திற்குள் கடந்த நவம்பர் 28ஆம் தேதி நுழைந்தது. அப்போது முதல் தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை கொட்டியது. ஆனால் வானிலை ஆய்வாளர்களால் கூட கணிக்க முடியாத படி சென்னைக்கு அருகிலேயே டிட்வா புயல் சின்னம் வலு குறைந்து இரண்டு நாட்களாக மையம் கொண்டிருந்தது. இதனால் 3நாட்களாக மழையானது வெளுத்து வாங்கியது. பல இடங்களில் மழைநீர் தேங்கியது. இந்த நிலையில் டிட்வா புயல் இன்று அதிகாலை மாமல்லபுரத்திற்கு தெற்கே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக கரையை கடந்துள்ளது. இருந்த போதும் அடுத்த 2 நாட்கள் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக டெல்டாவெதர்மேன் ஹேமச்சந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று அதிகாலை மாமல்லபுரத்திற்கு தெற்கே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடந்து விழுப்புரம் மாவட்டத்தில் நிலைக்கொண்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் படிப்படியாக வலுவிழந்து அரபிக்கடல் நோக்கி நகரும்.தமிழக நிலப்பரப்பில் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் இன்றும், நாளையும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்தே காணப்படும் என தெரிவித்துள்ளார்.
மேலும் சென்னை உள்பட வடகடலோர மாவட்டங்கள் மற்றும் வடக்கு உள் மாவட்டங்களில் இன்றும் கன முதல் மிககனமழை வரை பதிவாகும் எனவும், தென் மாவட்டங்கள், காவிரி டெல்டா மற்றும் மேற்கு மாவட்டங்களிலும் இடி,மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஒட்டுமொத்தமாக வடகிழக்கு பருவமழை இன்றும், நாளையும் தீவிரமடைந்து காணப்படும் என டெல்டா வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
இதே போல தனியார் வானிலை ஆய்வாளர் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில்,சென்னையில் மேகங்கள் சூழ்ந்துள்ளன. மொத்தமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை நொறுங்குகிறது. திருவண்ணாமலை, கடலூர், பாண்டி, விழுப்புரம், சேலம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்யும். இன்று தமிழ்நாட்டிற்குள் செல்லும் Ex Ditwah மூலம் ஒட்டுமொத்த தமிழ்நாடு மாவட்டமும் பயனடையும் என பிரதீப் ஜான் குறிப்பிட்டுள்ளார்.