தேசிய விருது வென்ற சிறுமி வீடியோ காலில் வாழ்த்திய கமல்
71 ஆம் தேசிய விருது விழா கடந்த செப்டம்பர் 23 ஆம் தேதி டெல்லியில் நடைபெற்றது. 2023 ஆம் ஆண்டுக்கான சிறந்த படங்கள் மற்றும் கலைஞர்களுக்கு விருதுகள் நாட்டு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு கையால் விருதுகள் வழங்கப்பட்டன. சிறந்த நடிகருக்கான விருதை ஜவான் படத்திற்காக ஷாருக் கான் பெற்றார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை வாத்தி படத்திற்காக ஜிவி பிரகாஷ் பெற்றார். ஹரிஷ் கல்யாண் நடித்த பார்க்கிங் திரைப்படம் அதிகபட்சமாக மூன்று விருதுகளை வென்றது. சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதை வென்று இந்த விருது விழாவில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளார் 4 வயது குழந்தை நட்சத்திரமான த்ரிஷா தோஷர்.
மராத்தியில் பல்வேறு படங்களில் நடித்து பரவலான அங்கீகாரத்தை பெற்றுள்ளார் குழந்தை நட்சத்திரமான த்ரிஷா தோஷர். நாள் 2 என்கிற படத்திற்காக இவருக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. 4 வயதில் தேசிய விருது வென்று உலகநாயகன் கமல்ஹாசனின் சாதனை முறியடித்துள்ளார். 'பெட் புராண்' , 'மன்வர் மர்டர்ஸ்' ஆகியவை இவர் நடித்த படங்கள்.
தனது சாதனையை முறியடித்த த்ரிஷா தோசருக்கு உலக நாயகன் கமல்ஹாசன் வீடியோ கால் மூலம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் தனது எக்ஸ் பக்கத்தில் " அன்புள்ள திருமதி ட்ரீஷா தோஷர், உங்களுக்கு எனது மிகப்பெரிய பாராட்டுக்கள். எனது முதல் விருதைப் பெற்றபோது எனக்கு ஏற்கனவே ஆறு வயது என்பதால், நீங்கள் எனது சாதனையை முறியடித்துவிட்டீர்கள்! வாழ்த்துக்கள் மேடம். உங்கள் அற்புதமான திறமையை மேம்படுத்த தொடர்ந்து பாடுபடுங்கள். உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு எனது நன்றிகள்." என கமல் பதிவிட்டுள்ளார்.