Irfan baby gender reveal : மன்னிப்பு கேட்ட இர்ஃபான்! கறார் காட்டும் சுகாதாரத்துறை! அடுத்தது என்ன?
கருவில் இருக்கு குழந்தை ஆணா பெண்ணா என வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் மன்னிப்பு கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
உள்ளூர் முதல் வெளிநாடு வரை சென்று அங்கு கிடைக்கும் உணவுகளை எல்லாம் சாப்பிட்டும் விமர்சனம் செய்து யூடியூபில் வீடியோவாக பதிவிட்டு வருபவர் இர்ஃபான். இவர் கடந்த ஆண்டு திருமணம் செய்த நிலையில், இவரது மனைவி ஹசீஃபா தற்போது கர்ப்பமாக இருக்கிறார்.
இதனிடையே குழந்தையின் பாலினம் தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டார். தனது மனைவியை துபாய்க்கு அழைத்து சென்று பாலினத்தை தெரிந்து கொண்டு அதனை அறிவிக்கும் செலிபிரேஷன் வீடியோவையும் பதிவிட்டிருந்தார். இந்த நிகழ்ச்சியில் இர்ஃபானின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர்.
வெளிநாடுகளில் குழந்தையின் பாலினம் பற்றி அறிந்து கொள்வதில் தவறில்லை. Gender reveal party என வைத்து பாலினத்தை சொல்லும் வழக்கம் தற்போது பரவலாக இருக்கிறது. இந்தியாவில் குழந்தையின் பாலினம் பற்றி கருவிலேயே அறிந்து கொள்வதும், அதனை அறிவிப்பது சட்டப்படி குற்றமாகும். மறைமுகமாக இதனை செய்யும் மருத்துவமனைகள் மீது அரசு கடுமையான நடவடிக்கையும் மேற்கொண்டு வருகிறது.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை இர்ஃபானிடம் விளக்கம் கேட்டிருந்தது. வாட்ஸ்அப் மற்றும் இ-மெயில் மூலம் விளக்கம் கேட்டு சுகாதாரத்துறை நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்தநிலையில் சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் இர்ஃபான் மன்னிப்பு கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் மன்னிப்பு கோரி வீடியோ வெளியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இருந்தாலும் சட்ட நடவடிக்கைகள் தொடரும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.