Lok sabha election results 2024 | ”உடனே டெல்லி வாங்க” கூட்டணியை அழைக்கும் காங்கிரஸ்

மத்தியில் ஆட்சியமைக்கப் போவது யார் என கிளைமாக்ஸ் நெருங்கிவிட்ட நிலையில், முக்கிய முடிவுகளை எடுப்பதற்காக இந்தியா கூட்டணியின் முக்கிய தலைவர்களை டெல்லிக்கு வருமாறு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து முடிந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. ஆட்சியை பிடிக்க பாஜக கூட்டணியும், இந்தியா கூட்டணியும் மும்முரம் காட்டி வரும் நிலையில் அரியணை யாருக்கு என மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கருத்துக்கணிப்பு முடிவுகள் பாஜகவுக்கு சாதகமாக வந்துள்ள நிலையில், 295 இடங்களில் காங்கிரஸ் நிச்சயமாக வெற்றிபெறும் என உறுதியாக உள்ளனர். அந்தந்த மாநிலங்களில் கிடைத்த ரிப்போர்ட்டை வைத்து காங்கிரஸ் வெற்றி பெறுவோம் என அடித்து சொல்வதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் இந்தியா கூட்டணியின் தலைவர்களை டெல்லிக்கு வருமாறு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று இரவு வரையோ அல்லது நாளை காலை வரையோ டெல்லியில் இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு ஆலோசனை கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் தனித்து களமிறங்கிய மம்தா பானர்ஜியும் இந்தியா கூட்டணியின் பக்கமே இருப்பதாகவும், அவரும் கூட்டத்தில் கலந்து கொள்ள வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

திட்டமிட்டபடி தேர்தல் முடிவுகள் வராவிட்டால் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் தொடர்பாக குடியரசுத் தலைவரை சந்திப்பது, செய்தியாளர்களை சந்திப்பது என அடுத்தகட்ட நடவடிக்கைகளில் இறங்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நினைத்த தொகுதிகளை கைப்பற்றிவிட்டால் உடனடியாக கூட்டணியை வைத்து கூட்டம் நடத்தி பிரதமர் தொடர்பாக காங்கிரஸ் முக்கிய முடிவுகளை எடுக்கவிருக்கிறது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola