NDA Meeting | சந்திரபாபு, நிதிஷின் கண்டிஷன்! என்ன செய்யப்போகிறது பாஜக? இன்று முக்கிய முடிவு
சந்திரபாபு, நிதிஷின் கண்டிஷன்! என்ன செய்யப்போகிறது பாஜக? இன்று முக்கிய முடிவு
சந்திரபாபுவும், நிதிஷ் குமாரும் பாஜகவுக்கு ஏகப்பட்ட கண்டிஷன் போட்டுள்ள நிலையில், அதுதொடர்பாக இன்று முக்கிய முடிவுகளை எடுக்கிறது பாஜக. எம்.பிக்களின் ஆலோசனைக் கூட்டத்தில், மோடி மக்களவை குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பெரும் எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகின. அதில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், தனிப்பெரும்பான்மையை பெற முடியவில்லை. அதைதொடர்ந்து, சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமாரின் ஆதரவுடன் ஆட்சி அமைப்பது என உறுதி செய்யப்பட்டது. இதுதொடர்பாக நடைபெற்ற கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில், மோடி மீண்டும் பிரதமராக தேர்வு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால் 2 பேரும் பாஜகவுக்கு நிறைய கண்டிஷன்களை போட்டுள்ளதால் கட்சியின் சீனியர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர். சந்திரபாபு நாயுடு 3 கேபினட் உட்பட 6 அமைச்சர் பதவிகள், ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து மற்றும் மக்களவை சபாநாயகர் பதவி போன்ற நிபந்தனகளை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மறுமுனையில் நிதிஷ்குமார் 3 கேபினட் உட்பட 5 அமைச்சர் பதவிகள், பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து, மக்களவை சபாநாயகர் பதவி போன்ற நிபந்தனகளை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. அதோடு, ராணுவத்திற்கு ஆள்சேர்க்கும் அக்னிபாத் திட்டத்தை மறுஆய்வு செய்யவும் வலியுறுத்தியுள்ளார். இதேபோன்று கூட்டணியில் உள்ள சிராக் பஸ்வான், குமார சுவாமி மற்றும் ஏக்நாத் ஷிண்டே ஆகியோரும் சில கோரிக்கைகள் மற்றும் நிபந்தனகளை முன்வைத்துள்ளதாக தெரிகிறது.
இந்த சூழலில் தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த எம்.பிக்களின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது. கூட்டணி கட்சிகளின் கோரிக்கைகள் தொடர்பாக இன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்படவிருக்கிறது. மேலும் தேசிய ஜனநாயக் கூட்டணியின் மக்களவை தலைவராக பிரதமர் மோடி ஒருமனதாக தேர்வு செய்யப்படுவார் என கூறப்படுகிறது. தொடர்ந்து, எம்.பிக்களின் ஆதரவு கடிதத்துடன் குடியரசு தலைவரை சந்தித்து மோடி ஆட்சி அமைக்க உரிமை கோரக்கூடும். அதன்படி, வரும் 9ம் தேதி மோடி மூன்றாவது முறையாக பிரதமர் பதவியேற்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.