Watch Video: அசாமில் தேயிலை தொழில் தொடங்கி 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் விதமான விழாவை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
200வது ஆண்டு விழா:
அசாமில் தேயிலைத் தொழிலின் 200வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் கவுகாத்தியில் உள்ள சாருசஜாய் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஜூமோயர் நடன நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். மாநிலம் முழுவதும் உள்ள தேயிலை பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த 8000க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள், இந்த நிகழ்ச்சியில் தங்களது திறனை வெளிப்படுத்தினர்.அசாமில் உள்ள பெரும்பாலான தேயிலைத் தோட்டங்களிலிருந்து தேயிலை பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த நடனக் கலைஞர்கள் மற்றும் இசைக்கலைஞர்கள் இந்த கலாச்சார நிகழ்வில் பங்கேற்றனர். ஜூமூர் (ஜூமோயர் என்று உச்சரிக்கப்படுகிறது) என்பது மாநில தேயிலை பழங்குடியினரின் பாரம்பரிய நாட்டுப்புற நடனமாகும்.
பிரம்மிக்க செய்த காட்சிகள்:
பாரம்பரிய இசை வாத்தியங்களை இசைத்து பிரதமர் மோடி கலை நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அதன்படி, மைதானத்தில் குவிந்து இருந்து மொத்த இசைக்கலைஞர்களையும் ஒரே நேரத்தில் ஸ்ருதி மாறாமால் இசைக்கருவிகளை இசைத்து பாடினார். அதற்கு ஏற்றபடி, ஆயிரக்கணக்கான நடனக்கலைஞர்கள் ஒரே மாதிரியாக நடனமாடியது காண்போரை பிரம்மிக்க செய்தது. ஏராளமான குன்றுகள் ஒரே நேரத்தில் ஒரே அதிர்வெண்ணில் அசைந்தால் எப்படி இருக்குமோ? அத்தகைய உணர்வை அவர்களின் நடனம் உணரச் செய்தது. வார்த்தைகளால் விவரிக்க முடியாத அந்த காட்சிகள் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
பிரதமர் மோடி பேச்சு:
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, “தேயிலை தோட்டங்களின் அழகையும், தேநீரின் நறுமணத்தையும் தேநீர் விற்பனையாளரான ( சாய்வாலா ) என்னைத் தவிர வேறு யாராலும் சிறப்பாக புரிந்துகொள்ள முடியாது. ஜூமோயர் நடனத்துடனும், தேநீருடனும் எனக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. அசாமின் வளமான பாரம்பரியத்தைத் தவிர, இந்தியாவின் பன்முகத்தன்மையை இன்று இங்கே என்னால் காண முடிகிறது. நான் 2023 ஆம் ஆண்டு அசாமில் இருந்தபோது 11000 க்கும் மேற்பட்டோர் ஒன்றாக பிஹு நடனமாடி உலக சாதனை படைத்தனர். நீங்கள் அனைவரும் ஜூமோயர் நடனத்தை நிகழ்த்தி மற்றொரு உலக சாதனை படைக்க காத்திருப்பதை என்னால் பார்க்க முடிகிறது” என பேசினார்.