Cauvery River Origin Place: நீரின்றி அமையாது உலகு என்றார் வள்ளுவர். ஆனால் அத்தகைய நீரே இரு மாநில பிரச்சினைகளுக்கு அடிப்படை காரணமாக இருக்கிறது. நம்மில் பலருக்கும் காவிரி நீர் பிரச்சினை தெரியுமா என கேட்டால் கண்டிப்பாக அதன் பின்னணி யாருக்கும் தெரியாது. காவிரி(Cauvery) நீர் விவகாரத்தில் கர்நாடகா - தமிழ்நாடு அரசுகளுக்கிடையே மிகப்பெரிய பனிப்போர் 200 ஆண்டு காலமாக நிலவி வரும் நிலையில், உச்சநீதிமன்றம் தீர்ப்பு, காவிரிநீர் மேலாண்மை வாரியம் என இப்பிரச்சினை சென்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நாம் காவிரி நீர் வரலாற்றை சற்று திரும்பி பார்ப்போம்.
பொன்னி நதி பார்க்கணுமே
கர்நாடகா மாநிலத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள குடகு மாவட்டத்தில் தலைக்காவேரி என்ற இடத்தில் 4,186 அடி உயரத்தில் காவிரி ஆறு(Cauvery River) தோன்றுகிறது. இந்த ஆறு கர்நாடகத்தில் சுமார் 320 கி.மீ. தூரமும், தமிழ்நாட்டில் 416 கி.மீ., தூரமும் பயணித்து மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பூம்புகாரில் வங்கக் கடலில் கலக்கிறது. கிட்டதட்ட காவிரி ஆறு 800 கி.மீ., பாய்ந்து ஓடுகிறது. இந்த ஆற்றிலும், மணலிலும் தங்கத் தாது இருப்பதாக சொல்லப்படுவதால் இதற்கு பொன்னி நதி என்ற பெயரும் உள்ளது.
தெற்கு, கிழக்கு திசைகளில் பாயும் காவிரி ஆற்றின் நில அமைப்பு என்பது முற்றிலும் வெவ்வேறாக உள்ளது. உருவாகும் பகுதியான குடகு மலைப் பகுதியாகவும், பாய்ந்தோடு தக்காணப் பீடபூமி மேட்டு நிலமாகவும், இறுதியில் தமிழகத்தின் சமவெளியாகவும் அமைகிறது. செல்லும் இடமெல்லாம் பூக்கள் நிறைந்த சோலைகளை விரித்துச் செல்வதால் இந்த நதிக்கு காவிரி என்று பெயர் வந்தது.
நடந்தாய் வாழி காவேரி
கர்நாடகாவில் குடகு மலையில் தொடங்கும் காவிரி ஆறு ஆசன், மைசூர், மாண்டியா, பெங்களூர் நகரம், சாமராசநகர் மாவட்டங்கள் வழியாக பாய்ந்தோடுகிறது. இதேபோல் தமிழ்நாட்டில் காவிரி கரையோரம் இருக்கும் நகரங்களாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் திகழ்கிறது. முக்கிய இடங்களாக மேட்டூர், ஈரோடு, கரூர், முசிறி, குளித்தலை, திருவையாறு, கும்பகோணம், மயிலாடுதுறை ஆகியவை திகழ்கிறது.
சிலப்பதிகாரத்தில் கூட காவிரியின் செல்வ செழிப்பு குறித்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது. காவிரி நீர் தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மக்களின் விவசாயத்திற்கு உதவுவதோடு அவர்களின் குடிநீர் தேவையையும் தீர்க்கிறது.
பிரமிக்க வைக்கும் பயணம்
கர்நாடகாவின் குடகு மாவட்டத்திலுள்ள பிரம்மகிரி மலைப்பகுதியில் தலைக்காவிரி என்ற இடத்தில் உற்பத்தியாகும் காவிரி, ஹாரங்கி ஆறுடன் இணைந்து, மாண்டியா மாவட்டத்திலுள்ள கிருஷ்ணராஜசாகர் அணையை அடைகிறது. இங்கு ஹேமாவதி, லட்சுமண தீர்த்தம் ஆகிய 2 துணை ஆறுகளும் காவிரியுடன் இணைகின்றன. இதைத் தொடர்ந்து அந்த அணையிலிருந்து வெளிவரும் ஆறுடன் ஸ்ரீரங்கப்பட்டணம் தீவு வழியாக பயணப்படுகிறது. இந்த பாதையில் கபினி, சொர்ணவதி ஆகிய ஆறுகள் காவிரியுடன் கலக்கின்றன.
பின்னர் காவிரியானது சிவசமுத்திரம் தீவை அடைந்து இரு பிரிவுகளாகப் பிரிகிறது. ஒருபுறம் ககனசுக்கி (Gaganachukki) அருவியாகவும், மறுபுறம் பாறசுக்கி அருவியாகவும் விழுகிறது. இதில் ககனசுக்கி அருவியில் தான் 1902 ஆம் ஆண்டு ஆசியாவின் முதல் நீர்மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டது. அருவியில் பாய்ந்தோடும் நீரோடு சிம்சா, அர்க்கவதி ஆறுகள் இணைந்ததன் பின் காவிரியானது தமிழகத்தை அடைகிறது.
தமிழ்நாட்டில் பிலிகுண்டு வழியாக ஒகேனக்கல் அருவியை அடையும் காவிரியில் தொடர்ந்து பாலாறு, சென்னாறு, தொப்பாறு ஆகிய சிற்றாறுகள் கலக்கின்றன. இதனையடுத்து மேட்டூர் அணையை அடைந்து ஸ்டான்லி நீர்த்தேக்கத்திற்கு (மேட்டூர் அணை) சென்ற பிறகு தான் தமிழகத்தில் காவிரி நீர்ப்பாசனம் தொடங்குகிறது. அங்கு பவானி ஆறு இணைகிறது. இதன் பின்னர் ஈரோட்டை கடந்து செல்லும் காவிரி நீரில் நொய்யலாறு கலக்கிறது. கரூரில் அமராவதி ஆறு இணைய முசிறி, குளித்தலை தாண்டி திருச்சிக்கு பயணிக்கும் காவிரி முக்கொம்பு அணை, கல்லணை ஆகியவை வழியாக பயணப்பட்டு பூம்புகார் வரை பயணிக்கிறது.
தலைக்காவேரியை கொண்டாடும் மக்கள்
தலைக்காவிரி, கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் பாகமண்டலாவிலிருந்து 7 கி.மீ., தொலைவில் உள்ளது. இது கேரள மாநிலத்தின் காசர்கோடு மாவட்டத்தின் எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது. இங்கு நீரூற்றாக உருவாகும் காவிரி தான் பல லட்சம் விவசாயிகளுக்கு அடிப்படை ஆதாரமாக உள்ளது.
இங்கு காவிரியை ஸ்ரீ கவரம்மா தேவி என அழைத்து குல தெய்வமாக கொடவர் சமூக மக்கள் வணங்குகிறார்கள் . ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி முதல் நாள் காவிரியின் பிறந்த நாள் தலைகாவிரியில் குடகு மக்களால் மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் ஊற்றின் உயரமும், வேகமும் அதிகமாக காணப்படுவதாக சொல்லப்படுவது உண்டு. இப்படி நாம் உயிர் வாழ்வதற்கு இன்றியமையாததாக உள்ள காவிரி நீரின் ஆதி இடமான தலைக்காவிரியை வாழ்வில் ஒருமுறையாவது சென்று கண்டு வாருங்கள்.