இந்திய ரயில்வே துறையின் சேவை தொடர்ந்து மேம்பட்டு வரும் வேளையில், வந்தே பார்த் ரயில்களின் வெற்றி மற்றும் மக்களின் வரவேற்பு மூலம் பல வருட உழைப்பிற்கு பின்பு மத்திய அரசு வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலை அறிமுகம் செய்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் கொல்கத்தா-காமக்யா (குவஹாத்தி) இடையேயான இந்த ரயிலை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

Continues below advertisement

இது நாட்டின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் சேவை என்பதால் மட்டும் அல்லாமல் ரயில் டிக்கெட் முன்பதிவில் கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் மூலம் கூடுதல் சிறப்பை பெற்றுள்ளது. மக்களின் இரவு பயணங்களுக்கு விமானத்தில் கிடைக்கும் அனுபவத்தை ரயிலில் தரும் வகையில் இந்த ஸ்லீப்பர் ரயில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் முழுவதும் ஏசி, நவீன உட்புற வசதிகள் உடன் மிகவும் மேம்பட்ட முறையில் மக்களுக்கு இந்திய ரயில்வே துறை கொடுத்துள்ளது. இந்த ரயில் மூலம் கொல்கத்தா-குவஹாத்தி பாதையில் சுமார் 2.5 மணி நேரம் பயண நேரத்தை குறைக்கும். 

Continues below advertisement

இந்த பிரீமியம் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் பயணம் திட்டமிடுபவர்கள் டிக்கெட் முன்பதிவில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். விமான நிறுவனங்களைப் போன்ற கடுமையான ரத்து மற்றும் ரீபண்ட் விதிகளை அறிமுகப்படுத்தியுள்ளது மத்திய ரயில்வே துறை. வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் டிக்கெட் புக் செய்தவர்கள் பயணத்திற்கு குறைந்தது 8 மணி நேரத்திற்கு முன்பு ரத்து செய்யாவிட்டால் எந்த தொகையும் திருப்பி அளிக்கப்பட மாட்டாது. இந்த 8 மணிநேர விதியில் சிறிய தாமதம் கூட முழு டிக்கெட் தொகையை இழக்கச் செய்யும். பேருந்து, விமான டிக்கெட் புக்கிங்-ல் இருக்கும் விதிமுறையை போலவே உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளுக்கு (Confirmed Ticket) ரத்து நேரத்தைப் பொறுத்து ரீபண்ட் தொகை அளிக்கப்படும்.

உதாரணமாக பயணத்திற்கு 72 மணி நேரத்திற்கு முன்பு ரத்து செய்தால் 25 சதவீதம் கழித்துவிட்டு மீதமுள்ள 75 சதவீத தொகை மட்டுமே திருப்பி அளிக்கப்படும்.இதுவே 72 மணி நேரத்திலிருந்து 8 மணி நேரத்திற்குள் ரத்து செய்தால் 50 சதவீதம் கழித்து பாதி தொகை திருப்பி அளிக்கப்படும். மேலும் பயணம் துவங்குவதற்கு 8 மணிநேரத்திற்குள் கேன்சல் செய்தால் எந்த தொகையும் திருப்பி அளிக்கப்பட மாட்டாது.

சாதாரண ரயில் டிக்கெட் புக்கிங்-ல் உள்ள RAC (Reservation Against Cancellation) வசதி இந்த ரயிலில் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளது. இதனால் முழுமையாக உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட் (Confirmed Ticket) இல்லாமல் பயணிக்க முடியாது. மேலும் மகளிர், முதியோர், மாற்றுத்திறனாளிகள், டூட்டி பாஸ் உள்ளவர்களுக்கு மட்டுமே கோட்டா வசதி உள்ளது. மற்ற சிறப்பு அல்லது VIP கோட்டாக்கள் இந்த வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலில் இல்லை.இந்த ரயிலில் குறைந்தபட்ச கட்டண தூரம் 400 கி.மீ, இந்த ரயிலில் 400 கி.மீ-க்கு குறைவான தூரம் பயணித்தாலும் 400 கி.மீ கட்டணம் செலுத்த வேண்டும் என்பது சிறப்பு விதியாக உள்ளது. பொதுவாக மற்ற ரயில்களில் பயண தூரத்தின் அடிப்படையில் டிக்கெட்டுக்கான தொகை வசூலிக்கப்படும்.

மத்திய ரயில்வே துறை விமானங்களில் கிடைக்கும் அதே அளவிலான வசதியை குறைந்த கட்டணத்தில் வழங்குவதை முக்கியமான நோக்கமாக கொண்டு உள்ளது. இதனால் டிக்கெட் புக்கிங் மற்றும் டிக்கெட் ரத்து செய்யப்படும் விதிகள் விமான தரத்துடன் ஒத்துப்போகும் வகையில் வகுக்கப்பட்டுள்ளன. வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் இந்திய ரயில்வேயின் நவீனமயமாக்கலுக்கு முக்கிய படியாகும். ஆனால் கடுமையான விதிகள் இருக்கும் காரணத்தால் பயண தேதிகளை சரியாக திட்டமிடுவது அவசியம், இல்லையெனில் பெரும் நிதி இழப்பு ஏற்படும்.

கொல்கத்தா-காமக்யா (குவஹாத்தி) இடையேயான இந்த ரயில் சேவை ஜனவரி 23ஆம் தேதி துவங்குகிறது. இந்த ரயிலில் 3 பிரிவுகளில் டிக்கெட் விற்கப்படுகிறது AC 3 Tier (3A), AC 2 Tier (2A), AC First Class (1A). இதில் கொல்கத்தா-காமக்யா செல்ல குறைந்தபட்சம் 2435 ரூபாய் முதல் 3855 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.