பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட கரிகால் சோழன் காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அணையைக் கட்ட முடிவெடுத்தான். ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள். காவிரி ஆற்றின் மீது பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டனர். அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் சென்றன. அதன் மேல் வேறொரு பாறையை வைத்து நடுவே தண்ணீரில் கரையாத ஒருவித ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசி இரண்டையும் ஒட்டிக்கொள்ளும் விதமாகச் செய்தனர். இதுவே இவ்வணையினைக் கட்டப் பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பமாகும். கல்லணை கரிகாலன் சோழனால் கட்டப்பட்டது என்பதை அனைவரும் அறிவர்.


மேலும் தற்போது உள்ள அணைகளிலேயே கல்லணைதான் மிகவும் பழமையானது. அதுமட்டுமின்றி, தற்போது வரையும் புழக்கத்திலுள்ள பழமையான அணை கல்லணை என்பது மிகவும் வியக்கத்தக்க ஒரு விஷயம் ஆகும். இதுவே உலகின் மிகப்பழமையான நீர்ப்பாசனத் திட்டம் என்று கூறுவதில் நாம் பெருமிதம் கொள்ள வேண்டும். மேலும், இந்த கல்லணை மணலில் அடித்தளம் அமைத்து கட்டப்பட்டது இன்னொரு சாதனை. சரி. தற்போது இந்த கல்லணையின் நீளம் அகலத்தை பார்க்கலாம். நீளம் 1080 அடி, அகலம் 66 அடி, உயரம் 18 அடியாகும். இது நெளிந்து வளைந்த அமைப்புடன் காணப்படுகிறது. 




இந்திய நீர் பாசனத்தின் தந்தை என அறியப்படும் சர் ஆர்தர் காட்டன் என்ற ஆங்கில பொறியாளர் கல்லணையை பல ஆண்டுகாலம் ஆராய்ந்தார். கல்லணை பலகாலம் மணல் மேடாகி நீரோட்டம் தடைப்பட்டது. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் தொடர்ச்சியாக வெள்ளத்தாலும், வறட்சியாலும் வளமை குன்றியது. இந்த சூழலில் 1829 இல் காவிரி பாசன பகுதி தனி பொறுப்பாளராக ஆங்கிலேய அரசால் சர் ஆர்தர் காட்டன் நியமிக்கப்பட்டார். இவர்தான் பயனற்று இருந்த கல்லணையில் தைரியமாக சிறு சிறு பகுதியாய் பிரித்து எடுத்து மணல் போக்கிகளை அமைத்தார். அப்போது, கல்லணைக்கு அமைக்கப்பட்ட அடித்தளத்தை ஆராய்ந்த அவர் பழந்தமிழரின் அணை கட்டும் திறனையும் பாசன மேலாண்மையையும் பாராட்டும் விதமாக கல்லணைக்கு கிரான்ட் அணைகட் என்ற பெயரையும் சூட்டினார்.





பல நூற்றாண்டுகளை கடந்தும் உறுதியோடு நிற்கும் கல்லணை தமிழர்களின் கட்டுமான திறனை பறை சாற்றி கொண்டிருக்கிறது. பழமையான இந்த அணையை கட்டிய கரிகால சோழனை கெளரவிக்க கல்லணையில் இருந்து திருக்காட்டுப்பள்ளி செல்லும் சாலையில் காவிரி ஆற்றின் இடது கரை ஓரத்தில் மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மண்டபத்தில் யானை மீது கரிகால சோழன் அமர்ந்த நிலையில் வெண்கலச் சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு பெருமையை போற்றும் அளவுக்கு வரலாற்று சிறப்பு மிக்க சுற்றுலா தளங்கள் மற்றும் வரலாற்று சின்னங்கள் தொடர்ந்து பாதுகாக்கப்பட்டால், நமக்கு பின் வரும் தலைமுறைகளும் இந்த வரலாறுகளை தெளிவாக காண முடியும் என்பதில் ஐயமில்லை.









ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண