தமிழரின் மெரினா பீச்


 

'மனசு' லேசாக கடலுக்கும், கடல் சார்ந்த இடத்திற்கும் ட்ரிப் அடிக்க எப்போது ஏங்கும். அதுவும் கோடை விடுமுறையில், கொளுத்தும் வெயிலில் கொடைக்கானல், ஊட்டியை நாடும் நாம் எப்போதாச்சும் அரியமான் பீச்சுக்கும் சென்று வரலாம். பீச் என்றால் நமக்கு உடனே ஞாபகத்துக்கு வருவது சென்னை மெரினா பீச்தான். சென்னை செல்லும் பிற மாவட்ட மக்கள் மெரினா பீச் செல்வதை தங்கள் விருப்பமாக வைத்திருக்கிறார்கள். சென்னை மக்களுக்கும் எத்தனை முறை சென்றாலும் சலிக்காததாக மெரினா உள்ளது. இதுபோல் மாமல்லபுரம், கடலூர் சில்வர் பீச்சுகளும் பிரபலம். ஆனால், மெரினா பீச்சுக்கு நிகராக இயற்கையும் அழகும் கொட்டிக் கிடக்கும் பீச்சுகள் தமிழக கடலோர மாவட்டங்களில் இருப்பதை பெரும்பாலோர் அறிவதில்லை. தமிழகத்தில் 13 கடற்கரை மாவட்டங்களில் அதிகமான பீச்சுகள் இருப்பது ராமநாதபுரம் மாவட்டத்தில்தான். அதில் முக்கியமானது அரியமான் பீச்சும்(Ariyaman Beach) ஒன்றும்.

 

அறியப்படாத அரியமான் பீச்


 

இராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் வழியில் உள்ளது இந்த அரியமான் பீச். ராமேஸ்வத்திற்கு வரும் நபர்கள் இராமநாதசுவாமி கோவில், ராமர் பாதம், ராமர் தீர்த்தம்,  கோதண்டராமன் கோவில், தனுஷ்கோடி கடற்கரை, பாம்பன் பாலத்திற்கு அடியில் உள்ள தூக்கு பாலம் என பல இடங்களை பார்த்து செல்வார்கள். அப்படியே ராமேஸ்வரம் வரும் போது அரியமான் பீச் அழகையும் ரசித்து செல்லலாம். இது சிலருக்கு தெரிந்திருந்தாலும் பலருக்கும் அறியப்படாத சுற்றுலாத தலமாக தான் உள்ளது. மதுரையில் இருந்து ஒரு நாள் ட்ரிப் யோசனைக்கு போகும் நபர்களுக்கு அரியமான் பீச் சூப்பர் ஆப்சன்.

 

மதுரைக்கு அருகே ஒரு அரியமான்


 

மதுரையில் இருந்து ராமேஸ்வரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ராமநாதபுரத்தை தாண்டியதும் 25 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது அரியமான் பீச். பிரதான சாலையில் சென்று கொண்டிருக்கும் போது  தென்னந்தோப்புகள் வழியே பிரியும் கிளைச்சாலையில் கடல் வாசம் வீசும். 3 கிலோ மீட்டர் தூரம் டிராவலில் அருமையான சவுக்கு தோப்புக்குள் சென்றவுடன் ஏதோ கொடைக்கானல் மலைப்பகுதிக்கு வந்துவிட்டது போல மலைக்க வைக்கும் அடர்வனம் போல் அரியமான் காட்சி தரும். அந்த ஆச்சரியத்துடன்  சவுக்கு தோப்புக்குள் இருந்து தூரத்தில் பார்த்தால் பரந்த மணல் பரப்பை கடந்து 100- மீ தூரத்தில் தெரிகிறது, வெள்ளை நிற அலை மிதமாக முட்டியபடி அற்புதமாக தெரிகிறது நீலக்கடல்....இதுதான் அரியமான் பீச்.

 

ரசிக்க வைக்கும் அரியமான் 


 

இரண்டு கண்கள் போதாது என்பது போல் முழுக்க அழகாக தெரியும். கடற்கரையின் எல்லை வரை  தென்னையும் சாவுக்கும், நடுவில் வெண்மையான பட்டுப் போன்ற மணலும்  அழகாக காட்சி தரும். ஏலோ பாட்டுப் பாடி வலை வீசும் பாரம்பரிய மீனவர்கள் தொழில் செய்து வந்த இக்கடற்கரையின் எழில் அருமையாக இருக்கும். கடந்த 25 வருடங்களுக்கு முன்புதான் மக்களுக்கு தெரியவந்தது அரியாத அரியமான்.

 

செயற்கையாக எந்த அழகுபடுத்தலும் இல்லாமல் இயற்கையாக பரந்துவிரிந்துள்ளது அரியமான் கடற்கரை. வெளியிடங்களில் இருந்து வாகனத்தில் வருபவர்கள் சவுக்கு தோப்பில் அமர்ந்து உணவு அருந்திவிட்டு அப்படியே வெள்ளை மணலில் கால் புதிய நடந்து கிளிஞ்சல்கள் ஒதுங்கிக்கிடக்கும் இளநீர் வழுக்கை போன்று காட்சி தரும் கடற்கரையில் கால் நனைத்து ரசிக்கலாம். கரையில் பெயர் எழுதி அலை வந்து அடித்து செல்வதை பார்த்து குதுகளிக்கலாம். குழந்தைகள் பெரியவர்கள் அனைவரும் பயப்படாமல் குளிக்கலாம் பாதுகாப்பான இடம் தான். அங்கு சூடாக கிடைக்கும் மிளகாய் பஜ்ஜி, வெங்காய பஜ்ஜி, மீன் வறுவல் வா..வா..., என்று அழைக்கும். அரியமான் கடற்கரை அருகே தனியார் நிறுவன ரிசார்ட்டுகள் உள்ளது. அங்கு தீம் பார்க்குகளும், செயற்கை நீருற்றுகளும் உள்ளது. குறைந்த கட்டணத்தில் தங்கலாம்.

 

நீங்கள் விரும்பும் ப்ரெஷ்ஷான மீன் உணவுகளை சமைத்து தருகிறார்கள். அரியமான் பீச் வருகிறவர்கள் நீண்ட நாட்கள் அந்த அனுபவத்தை மறக்க முடியாது. சொந்த வாகனம் இல்லாதவர்கள் அரசுப் பேருந்துகள் மூலம் வரலாம். ராமநாதபுரத்திலிருந்து ராமேஸ்வரம் செல்லும் பெரும்பாலான பேருந்துகள் சுந்தரமுடையானில் நின்று செல்லும். அங்கிருந்து ஆட்டோக்கள் உதவியால்  அரியமான் வரலாம்.