திருநெல்வேலி சுற்றுலா தலங்களில் தலைசிறந்த சுற்றுலா தலமாக, கோடை வாசஸ்தலமாக விளங்கக்கூடியது தான் களக்காடு. திருநெல்வேலி மாவட்டத்தில் களக்காடு ஒரு சிறிய ஊர். களக்காடு திருநெல்வேலியிலிருந்து 80 கி.மீ தொலைவிலும், ராதாபுரத்திலிருந்து 26 கி.மீ தொலைவிலும் உள்ளது. இங்கு வாழைக்காய் ஏற்றுமதி செய்யும் இடமாக திகழ்கிறது. நேந்திரம் காய் மற்றும் நேந்திரம் பழம் இங்கு லாரிகளில் ஏற்றுமதி செய்து அனுப்பப்படுகிறது. களக்காட்டில் விவசாயம் பிரதான தொழிலாக விளங்குகிறது அதிலும் வாழை பயிரிடும் விவசாயம் பிரதானமாக தொழிலாக இருக்கிறது.

  


களக்காடு தலையணை: 


நெல்லை மாவட்டத்தில் களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயப்பகுதியில் அமைந்துள்ள ஓர் இயற்கை எழில் மிகுந்த இடம் களக்காடு தலையணை. இங்குள்ள மேற்குத்தொடர்ச்சி மலையில் பல உயிரினங்கள் வாழ்கிறது.  அழகிய தலையணை நீர்வீழ்ச்சி களக்காட்டில் உள்ள ஒரு சிறிய கிராமமான பட்டமடைக்கு அருகில் அமைந்துள்ளது. கால்சியம் கார்பனேட்டைக் கொண்ட மரங்கள் மற்றும் புதர்கள் நிறைந்த அடர்ந்த காடுகளில் பாய்வதால், தலையணை நீர்வீழ்ச்சியின் நீர் வெண்மையாகத் தெரிகிறது.




பூங்கா:


திருநெல்வேலி மாவட்டத்தில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் அடிவாரத்தில் தலையணை அருவி அமைந்துள்ளது. எங்கும் பசுமையாக நிறைந்த பசுமையான காடு நிறைந்த சூழலில் அமைந்திருக்க கூடிய அழகான அமைதியான நீர்நிலைகள் நிறைந்த இடம் களக்காடு தலையணை. இயற்கையில் அமைந்த மேடையில் இருந்து நீர் கொட்டும் அழகு பார்ப்பவரை பரவசம் கொள்ள செய்யும். கோடையில் குளுமையான மரநிழலில் தண்ணீர் தொட்டி போல் அமைந்திருக்கும் களக்காடு தலையணையில் குளியல் குதூகலமாக இருக்கும். தலையணை அருவியில் குளிக்கும் போது, மீண்டும் மீண்டும் குளிக்க ஆவல் ஏற்படும் அளவிற்கு தண்ணீரில் குளுமை அதிகம் ஆகும். இங்கிருந்து வரும் நீரின் ஒரு பிரிவானது தேங்காய் உருளி ஊட்டுக்கால்வாய் மூலம் வடக்குப் பச்சையாறுவிற்கு செல்கிறது. அதோடு இந்த தலையணையில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சிறுவர் பூங்கா, மீன் கண்காட்சியகம், அருங்காட்சியகம் உள்ளிட்ட பொழுது போக்கு அம்சங்களும் உள்ளது. இதனால் தலையணைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.


மூலிகை நீரில் குளியல்:


களக்காடு மேலப்பத்தை ஊர் வழியாக களக்காடு அணையை பார்வையிட செல்லலாம். மேலும் அங்கிருந்து சிறிது தூரம் காடு வழியாக பயணித்தால் களக்காடு அருவி ஆறு ஆகியவற்றை கண்டு களித்து அங்கும் குளித்து மகிழலாம். களக்காடு பகுதியில் கிராம சூழலில் அமைந்துள்ள இந்த நீர்நிலைகள் பலரும் வந்து குடும்பத்துடனும், நண்பர்களுடனும் குளித்து மகிழ ஏதுவாக அமைந்திருக்கக் கூடியதாக இருக்கிறது. ஜனவரி, பிப்ரவரி, நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் களக்காடு தலையணை மற்றும் களக்காடு நீர்நிலைப் பகுதிகளை சுற்றி பார்க்க மற்றும் குளித்து மகிழ ஏதுவாக இருக்கும். அதிக அளவில் மழை இருந்தால் களக்காடு தலையணை பகுதிகளில் குளிக்க அனுமதி வழங்கப்படுவதில்லை.  நெல்லை மாவட்டத்தில் இருக்கும் அனைத்து அருவிகளுமே மேற்குத்தொடர்ச்சி மலையில் இருந்து பல்வேறு மூலிகைகளை தழுவி பாறைகளில் மோதி வெள்ளை நிற நுரையை அள்ளிவரும்.. இந்த அருவிகளில் குளித்தால்  மனத்திற்கும், உடம்பிற்கும் புத்துணர்ச்சியை தரும் என்பதில் எந்த வித மாற்றுக்கருத்தும் இல்லை.  இந்த கோடையில் நெல்லையில் உள்ள அனைத்து அருவிகளுக்கும் ஒரு விசிட் சென்று வாருங்கள் மக்களே.. அதோடு உங்க கருத்துகளையும், அனுபவங்களையும் மறக்காமல் எங்களுக்கு கமெண்ட்ல சொல்லுங்க....!!!!