திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் செல்லக்கூடிய பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு கோயிலில் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் கருங்கற்களால் செதுக்கப்பட்ட சிற்பங்கள், ஓவியங்களை காண மறந்துவிடாதீர்கள் 


அண்ணாமலையார் கோயில் 


உலகப் புகழ் பெற்ற திருத்தலமாக விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலாகும். இந்த கோவில் மிகவும் பழமை வாய்ந்ததாகவும் உள்ளது. நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில், சுமார் 25 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்த கோவில் ஆகும். இங்கு நான்குபுறமும் பெரிய கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஒன்பது கோபுரங்களும், ஒன்பது நுழைவுவாசல்களாக பார்க்கப்படுகின்றன. இதனால் திருவண்ணாமலையை ‘நவதுவார பதி’ என்றும் சொல்லப்படுகிறது. இங்குள்ள அம்மணி அம்மன் கோபுரம் பற்றி கல்வெட்டு ஆய்வாளர் ராஜ் பன்னீர்செல்வத்தின் உதவியோடு பார்க்கலாம். தமிழ்நாட்டு ஓவியக்கலை தொன்மையான வரலாற்றைக் கொண்டதாகும். பாறை ஒவியம் தொடங்கி இன்றைய டிஜிட்டல் ஓவியம் வரை, ஓவியக் கலை பல பரிணாம வளர்ச்சியைக் கண்டுள்ளது. அவற்றில் கோயில்களில் தீட்டப்படும் ஓவியம் நீண்ட நெடிய தூர வரலாற்றைக் கொண்டுள்ளது. பல்லவர் காலம் தொடங்கி சோழர், சேரர்கள், பாண்டியர்கள், விஜயநகரம், நாயக்கர் என்று நாட்டுக்கோட்டை நகரத்தார் வரை ஏராளமான ஓவியங்கள் வரலாற்றில் இன்றும் வாழ்ந்து வருகிறது.




அதில் சுமார் 1400 வருடம் நீண்ட நெடிய வரலாற்றைக் கொண்ட திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், இதுவரை ராஜகோபுரம், அம்மணி அம்மன் கோபுரம் பற்றி அனைவரும் அறிவோம், அதில் உள்ள சிற்பக்கலைகள் பற்றியும் அறிந்து பார்த்து வருகிறோம். தற்போது அனைவராலும் அறியாததை பற்றி தெரிந்துகொள்ள போகிறோம்.


திருமஞ்சன கோபுரம் : 


ஐந்தாம் மற்றும் வெளிப் பிரகாரத்தின் பிரதான தெற்கு வாயிலாக அமைந்துள்ளது இக்கோபுரம். ஒன்பது நிலைகளுடன் காணப்பெறும் இக்கோபுரத்தில் கீழ்நிலை கருங்கல்லாலும் , ஏனைய தளங்கள் செங்கற்களாலும் கட்டப்பட்டுள்ளது. இக்கோபுரத்தின் நுழைவு வாயிலில் உள்ள விதானத்தில் முழுவதுமாக ஓவியம் தீட்டப்பட்டு, அவை கால ஓட்டத்தால் சிதைந்து இன்று முருகர் ஓவியம் மற்றும் காணக்கிடைக்கிறது. ஏனைய தொகுப்புகள் அழிந்து ஆங்கங்கே வண்ணங்கள் மட்டும் திட்டுகளாகத் தென்படுகிறது.




முருகர் ஓவியம் 


இந்த ஓவியத்தில் முருகர் மயில் மீது உத்குடிகாசனத்தில் அமர்ந்து சதுர்புஜத்துடன் காட்சி தர, அவரின் வலது பக்கம் வள்ளியும் இடப்பக்கம் தெய்வானையும் காட்சி தருகின்றனர். முருகரின் தலையை அழகான கிரீட மகுடம் அலங்கரிக்க, காதில் குண்டலங்களும் கழுத்தில் கண்டிகை, சரப்பளி அணிந்து, மார்பின் மீது முறையே ஸ்தன சூத்திரம், முப்புரிநூல் மற்றும் உரஸ் சூத்திரம் அணிந்து மார்பின் கீழ் உதரபந்தத்துடன் காட்சி தருகிறார். வலது மேற்கரம் வஜ்ராயுதம் ஏந்தியும் , கீழ் வலது கரம் அருள்பாலிக்கும் அபய முத்திரையிலும், இடது மேற்கரம் சக்தி குலிசம் ஏந்தியும் கீழ் இடக்கரம் வரத முத்திரையிலும் காட்சி தருகிறது. அனைத்து கைகளிலும் தோள் வளை மற்றும் கைவளைகள் அணிந்து இருபக்க தோள்களிலும் தோள் மாலை அழகுறக் காட்சி தருகிறது. முருகன் தனது இடது காலை மடக்கி வலது காலை தொங்கவிட்டு , தொடைவரை ஆடை அணிந்து தனது வாகனமான மயிலின் மீது உத்குடிகாசனத்தில் அமர்ந்து "சிகிவாகனராக" நீள்வட்ட பிரபையினுள் காட்சி தருகிறார். கந்த புராணம் கூறும் முருகனின் 16 கோலங்களில் ஒன்று "சிகிவாகனர்" என்பது குறிப்பிடதகுந்தது. மயிலின் தலையானது முருகனைப் பார்த்துத் திரும்பிய நிலையில் , அதன் வாயில் பாம்பின் வால் பகுதியைக் கவ்வி உள்ள நிலையில் பாம்பின் உடல் மயிலின் உடல் மீது ஊர்ந்து முருகனின் இடக்காலின் கீழ் காட்சி பாம்பின் தலை படமெடுத்த நிலையில் காட்சி தருகிறது. 




 


வள்ளி மற்றும் தெய்வானை 


முருகனின் வலப்புறம் உள்ள வள்ளியும் இடப்புறம் உள்ள தெய்வானையும் மிகவும் சேதமுற்று இருப்பதால் தெளிவாகக் காணக்கிடைக்கவில்லை. முருகனின் வலப்புறம் இச்சை சக்தியைக் குறிப்பிடும் வள்ளி, கையில் தாமரை மலரை ஏந்தி இடுப்பை வளைத்து அழகான நளினத்தோடு காட்சிதருகிறார். கழுத்தில் அணிகலன்கள் அணிந்து, தோள்களில் தோள் மலை அலங்கரிக்க, பாதம் வரை ஆடை அணிந்து காட்சி தருகிறார். வள்ளியின் அருகே சாமரம் வீசும் சேடி பெண் முற்றிலும் சிதைந்து, பாதங்கள் மட்டும் காணக் கிடைக்கிறது. சேடிப்பெண்ணை தாண்டி , ஓவியம் முற்றிலும் அழிந்துள்ளது. முருகனின் இடப்புறம் கிரியாசக்தியை குறிப்பிடும் தெய்வானை கையில் நீலோத்பல மலரை ஏந்தி இடுப்பை வளைத்து அழகான நளினத்தோடு காட்சி தருகிறார். கழுத்தில் அணிகலன்கள் அணிந்து , தோள்களில் தோள் மலை அலங்கரிக்க , பாதம் வரை ஆடை அணிந்து காட்சி தருகிறார். தெய்வானையின் அருகே சாமரம் வீசும் சேடி பெண் அக்கால கொண்டை அணிந்து பணி செய்யும் காட்சி தீட்டப்பட்டுள்ளது. சேடி பெண்ணை தாண்டி ஓவியம் முற்றிலும் அழிந்துள்ளது.


கொடி கருக்கு


இதே போல இக்கோபுரத்தில் காணப்படும் கொடிகருக்கு வேலைப்பாடுகளில் அழகூட்ட வண்ணங்கள் கொண்டு தீட்டி அழகுப்படுத்தியுள்ளனர்.




பஞ்சவர்ணம்


இவ்ஓவியத்தில் சுண்ணாம்பு, கருப்பு மை மற்றும் உலோக வண்ணங்களான சிகப்பு, மஞ்சள் மற்றும் பச்சை ஆகிய ஐந்து வர்ணங்களையும் சேர்த்து பஞ்சவர்ண ஓவியமாகத் தீட்டியுள்ளனர். இங்குள்ள ஓவியத்தில் தீட்டப்பட்டுள்ள வண்ணம் மற்றும் காட்டப்பட்டுள்ள ஆபரணங்கள் யாவும் தஞ்சை பெரிய கோயிலின் நாயக்கர் கால ஓவியத்துடனும், ஆந்திர மாநிலம் லீபாக்ஷி வீரபத்திரர் கோயில் ஓவியத்துடனும் ஒத்துப் போவதால் இதனை நாயக்கர் கால ஓவியமாகக் கருதலாம்.


காலம் 


மேலும் இக்கோவிலில் புரவி மண்டபத்தின் விதானத்தில் உள்ள கிரிஜா கல்யாணம் , பாற்கடல் அமிர்தம் கடையும் காட்சி அடங்கிய ஓவிய தொகுப்பை இவ்ஓவியம் ஒத்துள்ளது குறிப்பிடதகுந்தது. திருவண்ணாமலை கோவிலின் ராஜ கோபுர திருப்பணி மற்றும் மதில்களில் எல்லாம் தஞ்சை நாயக்க மன்னரான சேவப்ப நாயக்கர் (கி.பி 1532-1560 ) காலத்தில் கட்டப்பட்டவையே ஆகும். எனவே இவ்வோவியம் சேவப்ப நாயக்கரின் காலத்தில் திருப்பணி செய்தபொழுதோ அல்லது அவரது மகனான அச்சுதப்ப நாயக்கர் காலத்திலோ தீட்டப்பட்டு இருக்க வேண்டும். அதாவது இவ்ஓவியத்தை 16ம் நூற்றாண்டின் கடை பகுதியைச் சேர்ந்ததாக இதனைக் கருதலாம்.