சுதந்திரப் போராட்டத்தில் தூத்துக்குடி மாவட்டம்- கழுகுமலை வெட்டுவான் கோவில் முதல் மணப்பாடு தேரிக்காடு வரை சுற்றுலாவும் தூத்துக்குடியும்.



எப்போ பார்த்தாலும் வேலை, ஓட்டமென இருக்கும் மக்கள் வேகமான வாழ்க்கை ஓட்டத்தில் இருக்கின்றனர். இதில் ஏற்படும் மனக்கவலை மன அழுத்தம் உள்ளிட்டவற்றில் இருந்து மக்களை ரிலாக்ஸாக ஆக்குவதுதான் சுற்றுலா.


இதற்காக பல இடங்களை தேடி சுற்றுலாவாக மக்கள் பயணித்துக்கொண்டு இருக்கின்றனர். இத்தகைய சுற்றுலாவுக்காக மக்கள் அதிக அளவில் பணம் செலவு செய்துகொண்டும் இருக்கிறார்கள். வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பயணிகள் தமிழகத்துக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள். அத்தகைய சுற்றுலா பயணிகள் வருகையால் நாட்டின் வருவாய் பெருகும். இதனால் சுற்றுலாத்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.


தூத்துக்குடி மாவட்டம் தொழில் நகர் மட்டுமல்ல, நான்கு வழிகளையும் கொண்ட ஒரே மாவட்டம், தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. இங்கு பல பிரசித்தி பெற்ற கோவில்கள், ஆலயங்கள் உள்ளன. இதனை காண மக்கள் அதிக அளவில் வந்து கொண்டு இருக்கின்றனர். ஒவ்வொரு மாதமும் சராசரியாக இந்தியாவை சேர்ந்த சுற்றுலா பயணிகள் சுமார் 8 லட்சம் பேர் தூத்துக்குடிக்கு வருகின்றனர்.


அதே நேரத்தில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் 100-க்கும் குறைவாகவே வருகின்றனர். இதனால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கடற்கரையோர சுற்றுலா தளங்களை மேம்படுத்துவது, நீர்சாகச விளையாட்டுக்களை தொடங்குவது போன்ற முயற்சியிலும் சுற்றுலாத்துறை ஈடுபட்டு வருகிறது. இந்த திட்டங்களை விரைவுபடுத்தி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவர வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்.


தூத்துக்குடி மாவட்டம் தொழில் நகரமாக இருந்தாலும், மக்கள் ரசனைக்கு ஏற்ற பல இடங்கள் உள்ளன. புதிதாக ஒரு சுற்றுலா தளத்தை உருவாக்குவது சிரமமாக இருக்கும். ஆனால் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற இடங்களை மையப்படுத்தி சுற்றுலாவை மேம்படுத்தலாம். குறிப்பாக ஆன்மிக சுற்றுலா தூத்துக்குடி மாவட்டத்தில் நன்றாக இருக்கிறது. அதனை மேம்படுத்தினால் வெற்றி பெறும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு ஏராளமான வெளியூர் பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவர்கள் திருச்செந்தூருக்கு மட்டும் வந்து விட்டு திரும்பி விடுகின்றனர். அவர்களை மாவட்டத்தில் உள்ள மற்ற சிறப்பு வாய்ந்த கோவில்களுக்கும் அழைத்து செல்லும் வகையில் திட்டங்களை செயல்படுத்தலாம்.


திருச்செந்தூரில் இருந்து பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு அரசே சுற்றுலா பஸ்களை இயக்கலாம். இதற்காக ஆன்லைன் மூலமாகவே டிக்கெட் முன்பதிவு வசதியையும் ஏற்படுத்தலாம். இதனால் திருச்செந்தூர் கோவிலில் தரிசனம் முடித்த பக்தர்கள், நவதிருப்பதி, நவகைலாயம் மற்றும் பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு சென்று வருவதற்கான வாய்ப்புகளை உருவாக்கலாம்.




தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு சுற்றுலாதலங்கள் உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆன்மிக தலங்களுக்கு சுற்றுலா செல்வதற்காக ஒரு சுற்றுலா திட்டம் செயல்படுத்தலாம். சுற்றுலாத்துறை மூலம் செயல்படுத்தப்படும் சுற்றுலாவில் கழுகுமலை கோவிலும் சேர்க்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் கழுகுமலை வெட்டுவான் கோவில், சமண சிற்பங்கள், முருகன் கோவிலுக்கு அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். நவதிருப்பதி, குலசேகரன்பட்டிணம் முத்தாரம்மன் கோவில், நவகைலாயம் கோவில்களுக்கு பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்கின்றனர்.



இதனால் மாவட்டத்தில் சுற்றுலா வளர்ச்சி பெறும். வருவாய் பெருகும் என கூறும் சுற்றுலா ஆர்வலர்கள், அதே நேரத்தில் மாணவர்களிடம் சுதந்திரத்திற்காக போராடியவர்கள் குறித்தும் அறிய வைக்கலாம் என்கின்றனர். விடுதலை போராட்ட வீரர்கள் நிறைந்த மாவட்டமாக தூத்துக்குடி விளங்கி வருகிறது. பாரதியார் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது. அவரது இல்லத்தை பார்ப்பதற்காக மக்கள் அதிகம் ஆசைப்படுகிறார்கள். ஆகையால் பாரதியார் இல்லத்தை பொழுதுபோக்கு அம்சங்களுடன் மேம்படுத்த வேண்டும். பாஞ்சாலங்குறிச்சி கட்டபொம்மன் கோட்டை, வீரன் சுந்தரலிங்கனார், வ.உ.சிதம்பரனார் இல்லம், விடுதலை வரலாற்றில் ஆங்கிலேயருக்கு எதிராக கப்பல் இயக்கப்பட்ட தூத்துக்குடி பழைய துறைமுகம் உள்ளிட்ட இடங்களில் சுற்றுலாவை மேம்படுத்தலாம் என்கின்றனர்.




கடற்கரை சார்ந்த சுற்றுலா தளங்களை உருவாக்க வேண்டும். கடல்சறுக்கு விளையாட்டு, பாரா கிளைடிங் உள்ளிட்ட நீர் விளையாட்டுக்களை விளையாட வேண்டும் என்றால் நாம் கோவாவுக்குதான் செல்ல வேண்டி இருக்கும். தூத்துக்குடி மாவட்டத்தில் நீர் விளையாட்டுக்களை தொடங்கப்பட்டால் மக்களிடம் நல்ல வரவேற்பு பெறும். அதிக அளவில் சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுக்கும். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் நம் மாவட்டத்துக்கு வருவதற்கான வாய்ப்புகள் உருவாகும் என்கின்றனர்.


கடற்கரையோரங்களில் சுற்றுலா தளமாக மேம்படுத்த முள்ளக்காடு பகுதியில் நீர்விளையாட்டுக்கள் தொடங்குவதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலத்தை பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. அதே நேரத்தில் அந்த பகுதியில் பணிகளை தொடங்குவதற்கான அனுமதியும் கேட்டு இருந்த நிலையில் திட்டம் அடுத்தக்கட்டத்திற்கு நகராமல் அதே இடத்தில் இருப்பதாக கூறுகின்றனர் சுற்றுலாப்பிரியர்கள்.