கோடைக்காலம் விரைவில் துவங்க இருக்கிறது. கோடை விடுமுறைக்கு பலர் சுற்றுலா தலங்களை நோக்கி செல்வது வழக்கம், அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் உள்ள பல்வேறு சுற்றுலா தலங்களில் பாபநாசம் அருகே உள்ள அகஸ்தியர் அருவியும் ஒன்று. அங்கு செல்வது எப்படி? குடும்பத்துடன் அங்கு சென்று வர ஆகும் செலவு? அங்கு என்னென்ன உள்ளது என்பதை விரிவாக பார்க்கலாம் வாங்க.....
பாபநாசம்:-
நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையும், அதில் அமைந்துள்ள அணைகளும், வற்றாத தாமிரபரணி ஆறும் இயற்கையின் மிக முக்கிய அடையாளங்கள். திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது பாபநாசம். பாபநாசம் சிவன் கோவில் அதனையொட்டி பாயும் தாமிரபரணி ஆறு பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும். பாபநாசம் ஊருக்கு வருபவர்கள் இறங்கும் இடம் சிவன் கோவில்தான். பாபநாசம் சிவன் கோவில் நவகைலாயங்களில் முதலாவது. ஆயிரம் ஆண்டுகள் முந்தைய பழமையான கோவிலாக உள்ளது. கோவிலின் படிக்கரையில் கரைபுரண்டு ஓடும் தாமிரபரணி ஆறு கண்கொள்ளா அழகாக காட்சியளிக்கிறது. வெயிலை மறைத்து நிழல் தரும் வகையில் கரையில் நீண்டு உயர்ந்து நிற்கும் பழமையான மரங்கள். கரைபுரண்டு ஓடும் நீரின் ஓசை, பறவைகளின் கீச்சு குரல்கள் காதுகளுக்கு இனிமையை தருவதாக அமைந்துள்ளது. மேலும் இங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவிலுக்கு வருபவர்களாக இருந்தாலும் சரி, சுற்றுலா வருபவர்களாக இருந்தாலும் சரி, குடும்பத்துடன் வருபவர்கள் தாமிரபரணி ஆற்றில் குளித்துவிட்டு அங்கேயே கூடி அமர்ந்து உணவும் முடித்து விட்டே செல்வார்கள்.. கோவிலுக்கு சாமி கும்பிட வரும் பக்தர்கள் கோவில் முன்பு கரைபுரண்டு ஓடும் தாமிரபரணியின் அழகை ரசிக்காமல் சென்றதில்லை.. அந்த அளவிற்கு பாபநாச கோவில் மிகச் சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது.
அகஸ்தியர் அருவி
பாபநாசத்தில் இருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவு நடந்து சென்றால் தண்ணீர் ஓங்கி ஆர்ப்பரிக்கும் சத்தம், அதோடு பொதிகை மலையில் இருந்து வெள்ளியை உருக்கி கொட்டியது போல் காட்சியளிக்கிறது அகஸ்தியர் அருவி. இங்கு ஆண்டுதோறும் தண்ணீர் விழுந்து கொண்டே இருக்கும் என்பது கூடுதல் சிறப்பு. உலகில் எங்குமே இல்லாத அறிய வகை தாவரங்கள், இந்த மேற்கு தொடர்ச்சி மலையில் தான் உள்ளது என்பது அறிவியலாளர்களால் நிரூபிக்கபட்டுள்ளது. ஆபூர்வ மூலிகைகள், விலங்கினங்கள், நீண்டு பருத்து உயர்ந்து நிற்கும் மரங்களுக்கு இடையிலான சாலை என காண்போரின் நெஞ்சை அள்ளும் காட்சிகள் அருவிக்கு செல்லும் வழியெங்கும் இருக்கும். சுற்றுலாபயணிகள், கல்லூரி மாணவ மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களுக்கும் ஆனந்தத்தை அள்ளி தரும் குளிர்ச்சியான பகுதி இந்த அகஸ்தியர் அருவி. ஆயிரக்கணக்கான மூலிகை வேர்களை தழுவி வரும் இந்த அருவியில் குளிப்பதால் சித்த சுவாதீனம் இல்லாதவர்கள் கூட நல்ல மன நிலை அடைவார்கள் என்பது இந்த பகுதியின் பேச்சு வழக்கமாகவே உள்ளது. ஆறே ஓடாத ஊரில் இருந்து வருபவர்களும், தண்ணீர் அளந்து பயன்படுத்தும் ஊரில் உள்ளவர்களும் இங்கு வந்து அருவியை பார்க்கும் போதே உற்சாகம் அவர்களை தொற்றி கொள்ளும்.
பேருந்து பயணம்:-
திருநெல்வேலி பேருந்து நிலையத்தில் காலை 4 மணி முதல் இரவு 12 மணி வரை பாபநாசம் சென்று வர பேருந்து வசதி உள்ளது. ஒரு நபருக்கு பேருந்து கட்டணம் 42 ரூபாய், போக வர 84 ரூபாய் ஆகும். திருநெல்வேலியில் இருந்து 5 பேர் கொண்ட குடும்பம் பாபநாசத்திற்கு பேருந்தில் சென்று வர 400 ரூபாய் ஆகும். பின்னர் அங்கிருந்து அகஸ்தியர் அருவி செல்ல ஆட்டோ ரூ. 100 கட்டணம் வசூலிக்கபடுகிறது. அங்கிருந்து மீண்டும் பாபநாசம் கோவில் வர ரூ. 100 வசூலிக்கபடுகிறது. திருநெல்வேலியில் இருந்து 20 பேர் வரை வேனில் சென்று வர 2000 ரூபாய் முதல் 2500 ரூபாய் வரை வசூலிக்கிறார்கள்.
பாபநாசம் கோவிலில் இருந்து அகஸ்தியர் அருவிக்கு உள்ளூர் பகுதியை சேர்ந்தவர்கள் நடந்தே சென்று வருகிறார்கள். மேற்கு தொடர்ச்சி மலையில் களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பக பகுதிக்கு சொந்தமான இடத்தில் இந்த அருவி உள்ளது. அருவிக்கு செல்வதற்கு பாபநாசம் சோதனை சாவடியில் இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் என தனித்தனியே கட்டணமானது வசூலிக்கப்படுகிறது. மேலும் முன்னர் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வழங்கப்பட்டிருந்த அனுமதியானது தற்போது காலை 8 மணியில் இருந்து மதியம் 3 மணி வரை மட்டுமே சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கிறது வனத்துறை. மது போன்ற போதை பொருட்கள் மற்றும் பாலித்தீன் பயன்படுத்த தடை உள்ளது. அதே போல் அருவியில் ஆண்கள், பெண்கள் தனித்தனியே குளிக்க வசதிகள் செய்யபட்டுள்ளது. உள்ளூர் காவல்துறை மற்றும் வனத்துறையினர் முழு நேரம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆதலால் பெண்கள் மற்றும் குழந்தைகளுடன் வருபவர்கள் அச்சமின்றி குளித்து செல்லலாம். மொத்தத்தில் மிக குறைந்த செலவில் வந்து செல்வதற்கும், மனதிற்கு இதமான ஓர் இயற்கை சூழ் ஒரு சுற்றுலா தலம் என்றால் அது மிகையாகாது..
அகஸ்தியர் அருவிக்கு மேல் சென்றால் காரையாறு அணை, சேர்வலாறு அணை, சொரிமுத்து அய்யனார் கோவில், காணி மக்கள் வாழும் பகுதி என இன்னும் பல இடங்கள் உள்ளது. ஒரே நாளில் இங்குள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்று பார்த்து வரக்கூடிய ஒரு சுற்றுலாதலமாக உள்ளது.