சுற்றுலா பயணிகளின் விருப்பத்திற்கு உரிய இடமாக நீலகிரி மாவட்டம் அமைந்துள்ளது. எப்படியும் ஒரு முறையேனும் பெரும்பாலானோர் சுற்றிப் பார்த்திருக்க கூடும். ஆனால் எத்தனை பேர் ஊட்டிக்கு நீலகிரி மலை இரயிலில் போயிருக்கிறார்கள் எனக் கேட்டால், வெகு சிலரே கையை உயர்த்துவார்கள். ஊட்டிக்கு சாலை வழியாக செல்வதும், மலை இரயிலில் ஊட்டிக்கு செல்வதும் ஒன்றல்ல. மலை இரயில் பயணம் என்பது ஊட்டியை வேறொரு கோணத்தில் பார்க்க வைக்கும், தவற விடக்கூடாத ஒரு உன்னத பயண அனுபவம்.




தென்னிந்தியாவில் உள்ள ஒரே மலை இரயில், நீலகிரி மலை இரயில் தான். மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரையிலான மலை இரயில், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1899 ம் ஆண்டு துவக்கப்பட்டது. கடந்த 2005 ம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பால் இந்த மலை இரயில், உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது. உள்நாட்டு பயணிகளை மட்டுமின்றி வெளிநாட்டு பயணிகளை கவர்ந்திழுக்கும், மலை இரயிலில் பயணிக்க வேண்டுமென்ற ஆசை எனக்கும் வெகு நாளாக இருந்தது. அதனால் ஒரிரு மாதங்களுக்கு முன்பாகவே ஒரு நாளை தேர்வு செய்து முன்பதிவு செய்திருந்தேன். இல்லையெனில் அதிகாலையில் மேட்டுப்பாளையம் இரயில் நிலையத்தில் நின்று டிக்கெட் வாங்க வேண்டியிருந்திருக்கும்.




மேட்டுப்பாளையம் இரயில் நிலையத்தில் இருந்து மலை இரயில் காலை 7. 10 மணிக்கு உதகமண்டலத்தை நோக்கிய 46.61 கிலோ மீட்டர் தூரப் பயணத்தை புகையைக் கிளப்பியபடி துவக்கும். அதிகாலையிலே கிளம்பி மேட்டுப்பாளையம் இரயில் நிலைய பார்க்கிங்கில் வண்டியை நிறுத்தி விட்டு, மலை இரயிலில் ஏறிவிட்டோம். மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே மிகவும் சரிவான பாதை என்பதால், தண்டவாளங்களுக்கு இடையே பற்சக்கரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதனை பற்றிக் கொண்டே இரயில் மலையேறத் துவங்கியது. குளிர்ந்த ஈரக் காற்று முகத்தை தழுவ, ஜன்னலூக்கு வெளியே தலையை நீட்டி வேடிக்கை பார்க்கத் துவங்கினேன். குன்னூர் வரை நீராவி ரயில் இயந்திரம் தண்ணீர் நிரப்புவதற்காக ஒவ்வொரு ஸ்டேசனிலும் சிறிது நேரம் இரயில் நின்று செல்லும். இதமான சூழலில் தேநீர் அருந்தி விட்டு, இயற்கை சூழலை இரசித்தபடி புகைப்படங்கள் எடுத்து மகிழலாம்.





மலைப் பாம்பை போல வளைந்து நெளிந்து மெல்ல இரயில் மலையேறியது. மேகங்கள் தவழும் மேற்கு தொடர்ச்சி மலைகளின் அழகும், இயற்கை சூழலும் மனதை கொள்ளை கொள்ளும். குகைகளுக்குள் ரயில் புகுந்து செல்வது திரில்லான அனுபவமாக இருக்கும். மலைகள், அடர்ந்த காடுகள் இடையே ஆங்காங்கே நீர் வீழ்ச்சிகளை காண முடியும். அதிர்ஷ்டம் இருந்தால் வனவிலங்குகள் நடமாட்டத்தை பார்க்கலாம். சில நேரங்களில் இரயிலை யானைகள் மறித்து நிற்கும் சம்பவங்களும் நடப்பதுண்டு.




மலை இரயில் குன்னூரை அடைந்ததும் புதிய பரிணாமத்திற்கு மாறிவிட்டது. குன்னூரிலிருந்து உதகை வரையுள்ள பாதையில் செல்ல டீசல் இயந்திரத்திற்கு மாற்றப்பட்டது. அதன்பின் ரயில் சற்று கூடுதல் வேகம் பெற்றது போலிருந்தது. போகும் பாதையெங்கும் மலைகளின் அரசியை இயற்கை கட்டி அணைத்திருந்தது. ஏழில் கொஞ்சும் கண் கொள்ள காட்சிகள், இதுவரை பார்க்காத வேறொரு பரிணாமத்தில் உதகை தெரிந்தது.
108 வளைவுகள், 16 சுரங்கங்கள், 250 பாலங்கள் ஆகியவற்றை கடந்து செல்லும் மலை இரயில், 12 மணிக்கு ஊட்டி இரயில் நிலையத்தை சென்றடைந்தது. ஒரு நீண்ட இனிமையான பயணம். இது இதுவரை அனுபவிக்காத அதி அற்புதமான அனுபவம். அதன் பின்னர் வழக்கம் போல ஊட்டியை கொஞ்சம் சுற்றிப் பார்த்து விட்டு அன்று மாலையே பேருந்தில் கோவைக்கு கிளம்பி விட்டோம்.




மழைக்காலங்களில் மலை இரயில் பயணத்தை தவிர்த்து விட வேண்டும். ஏனெனில் நிலச்சரிவுகளால் ரயில் சேவை இரத்து செய்யும் வாய்ப்புகள் அதிகம். மலை இரயிலில் பயணிக்க முன்கூட்டியே முன்பதிவு செய்து கொள்வது நல்லது. டூவிலர், பேருந்துகளில் செல்வதை காட்டிலும் மலை இரயில் பயணம் கூடுதல் நேரத்தை எடுத்துக் கொள்ளும். ஆனால் அந்த நேரத்தை நீங்காத இனிமையான நினைவுகளாக மாற்றித் தரும் என்பதில் சந்தேகமே வேண்டாம். நூறு முறை சாலைகளில் ஊட்டிக்கு சென்று வந்தாலும், ஒருமுறை மலை இரயிலில் செல்லும் பயணத்திற்கு அவை ஈடாகாது.