தஞ்சாவூர்: அழகான சிற்பங்களையும், கலை நுட்பங்களையும் கொண்டு தஞ்சைக்கு பெருமை சேர்க்கும் புள்ளமங்கை பிரம்மபுரீசுவரர் கோயில் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.
தமிழகத்தில் அழகான சிற்பங்களைக் கொண்ட கோயில்களில் ஒன்று ஆலந்துறைநாதர் கோயில் என்று அழைக்கப்படும் புள்ளமங்கை பிரம்மபுரீஸ்வரர் கோயில். தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்த கோயில். தஞ்சையிலிருந்து 15 கிமீ தொலைவில் கும்பகோணம் சாலையில் அய்யம்பேட்டைக்கு முதல் நிறுத்தத்தில் இறங்கி இக்கோயிலுக்குச் செல்லலாம்.
பழங்காலத்தில் திருவாலந்துறை மகாதேவர் என்று அழைக்கப்பட்ட இக்கோயில் முதலாம் பராந்தகசோழன் (கி.பி.907-955) காலத்தைச் சேர்ந்ததாகும். அம்மன்னன் காலத்திய கட்டடக்கலை மற்றும் சிற்பக்கலைக்கு இக்கோயில் ஒரு மிகச்சிறந்த எடுத்துக் காட்டாக இன்றும் விளங்கி வருகிறது.
ஞானசம்பந்தரால் பாடல் பெற்ற இக்கோயிலிலுள்ள பெரும்பாலான சிற்பங்கள் ஒரு அடி அளவுக்கு உள்பட்டு மிக நுட்பமாகச் செதுக்கப்பட்டுள்ளன. மேலும், இச்சுவர்களில் தூண் போன்ற வடிவில் செதுக்கப்பட்டு, கையடக்க அளவில் பூவேலைப்பாடுகளும், ஆடல் மகளிர் சிற்பங்களும் நிறைய இடம்பெற்றுள்ளன.
கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, அடிமுடிகாணா அண்ணல், பிரம்மா, விஷ்ணு துர்க்கை உள்ளனர். அருகே சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. பிரகாரத்தில் விநாயகர் சன்னதியும், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர் சன்னதியும் உள்ளன. கோயிலின் இடப்புறம் அம்மன் சன்னதி உள்ளது.
கருவறை கோஷ்டத்தில் சீதை இலட்சுமணனுடன் ராமர் வனவாசம் ஏற்று படகில் கங்கையைக் கடந்து செல்லும் காட்சி தொடங்கி ஜடாயு வதம் போன்ற ராமாயணக்காட்சிகள், கஜசம்ஹாரமூர்த்தி, காளியின் மகிஷ வதம், கால சம்ஹாரமூர்த்தி, வராகமூர்த்தி பூமாதேவியை மீட்டு வரல், ஆதிசேஷன் மீது ஹரி துயில் கொள்ளும் அனந்த சயனமூர்த்தி போன்ற பல நுட்பமான சிறிய அளவிலான சிற்பங்கள் உள்ளன.
உடுக்கை இடுப்புடையாள் என்பதுபோல பெண் சிற்பங்களில் இடுப்பு பகுதி உடுக்கை வடிவில் மிக நுணுக்கமாகச் செதுக்கப்பட்டுள்ளன. இதேபோல, கை, கால், கண் உள்ளிட்டவை செதுக்கப்பட்டுள்ள விதமும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
கோயில் திருச்சுற்றின் வலது புறத்திலுள்ள தட்சிணாமூர்த்தி சிலையின் மேலே கோபுரத்தில் பிச்சாடனர் சிற்பம் உள்ளது. இதில், காலில் காலணி, கையில் திருவோடு, கழுத்தணிகள், கையணிகள், காதுகளில் வளையங்கள் உள்ளிட்டவற்றுடன் நடக்கும் பாவனையில் நுட்பமாகச் செதுக்கப்பட்டுள்ளன.
அர்த்த மண்டபத்தில் உள்ள நான்கு தூண்களிலும் வேலைப்பாடுகள் வித்தியாசமாக உள்ளன. தூண்களிலும், சுற்றுச் சுவரிலும் ஏராளமான நடன மங்கை சிற்பங்கள் மிக நுணுக்கமாக ஆள்காட்டி விரல் அளவில் செதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு சிற்பங்களும் ஒரு காரணத்தைக் குறிப்பிடுகிறது.
சிவன் கோயில்களில் நுழைவுவாயிலில் இரு புறமும் துவார பாலகர் சிலைகள் இருப்பது வழக்கம். ஆனால், அவையெல்லாம் கோர முகத்துடனே இருக்கும். இக்கோயிலில் இருபுறமும் உள்ள துவாரபாலகர் சிற்பங்களில் கோரபற்கள் காணப்பட்டாலும், சாந்தமான முகத்துடன் வரவேற்கும் விதமாக வடிவமைக்கப்பட்டிருப்பது வியப்புக்குரியது. நவீன தொழில்நுட்பங்கள் இல்லாத அக்காலத்தில் இவ்வளவு சிறிய அளவில் மிக நேர்த்தியாகவும், நுட்பமாகவும் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருப்பது வரலாற்று ஆய்வாளர்களிடையே மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் இக்கோயிலை பார்க்கத் தவறுவதில்லை. மேலும், இக்கோயிலைப் பார்ப்பதற்காக வரலாற்று ஆய்வாளர்கள், வரலாற்று ஆய்வு மாணவர்கள் ஏராளமானோர் வந்து செல்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.