தஞ்சாவூர்: என்றும்... என்றென்றும் அதிசயங்களையும் ஆச்சரியங்களையும் உள்ளடக்கியதுதான் தஞ்சாவூர் பெரியகோயில். உலகமே பெரியகோயிலை கண்டு வியக்கிறது... ரசிக்கிறது... ஆச்சரியப்படுகிறது.

பெரிய கோயிலை காண வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலாப்பயணிகள் வருகின்றனர். கண்டு வியக்கின்றனர். இக்கோயிலை எத்தனை முறை பார்த்தாலும்,  ஒவ்வொரு முறையும் ஆச்சரியம்தான் அடைகிறது. நுட்பமான கலைத்திறன், அற்புதமான வடிவமைப்பு என்று ஆச்சரியங்களின் அணிவகுப்பாகதான் பெரிய கோயில் உள்ளது.

இக்கோயில் குறித்த எழும் ஆச்சரியங்கள் பின்னணியில் பல்வேறு ஆராய்ச்சிகளும் நடக்கிறது. ஆனால் அதற்கு முடிவோ, தீர்வே இல்லை என்பதும் வியப்புதான். இத்தகைய பெரும் சிறப்புகளைக் கொண்ட இக்கோயில் குறித்து ஏராளமான,  உண்மையிலான அறிவியல் ரீதியான தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன.

அவற்றையெல்லாம் விட கட்டுக்கதைகளும் ஏராளமாக உலா வருகிறது. அவைதான் மக்களிடத்தில் அதிகம் பேசப்படுகிறது. ஆனால்,  இவையெல்லாம் உண்மையல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது

பெரியகோயில் கோபுரத்தின் இரண்டாம் நிலையில் மார்பளவு உடைய ஒரு வெளிநாட்டவர் உருவம் தொப்பி அணிந்த நிலையில் காணப்படுகிறது. இதுகுறித்து பல்வேறு கற்பனைக் கதைகள் இறக்கை கட்டி பறக்கிறது. குறிப்பாக, ராஜராஜனின் சிற்பிகள் எதிர்காலத்தில் ஐரோப்பியர் ஆட்சி தமிழகத்தில் நிலவும் என்பதை முன்பே அறிந்து இச்சிற்பத்தை வைத்துள்ளனர் என்றும் கூறுகின்றனர்.





ஆனால், இந்த ஐரோப்பியர் உருவம் தஞ்சாவூர் நாயக்கர் காலத்துத் திருப்பணியின் போது இடம்பெற்றது என்பதுதான் உண்மையாம். இந்த உருவம் சுண்ணாம்புக் காரையால் (சுதை) செய்யப்பட்டது. கி.பி. 1620 ம் ஆண்டு காலகட்டத்தில் தஞ்சாவூர் நாயக்க மன்னர் ரகுநாத நாயக்கருக்கும், டேனிஷ் அரசருக்கும் நெருங்கிய நட்பு இருந்துள்ளது.

அப்போது டேனிஷ் அரசருக்கு ரகுநாத நாயக்கர் தங்க ஓலையில் தமிழில் எழுதிய நட்புறவுக் கடிதம் அனுப்பி உள்ளார். தற்போது அது கோபன்கேஹனில் காட்சிப் பொருளாக உள்ளது. தரங்கம்பாடியில் டேனிஷ் நாட்டவருக்கு வணிக மையம் அமைக்க ரகுநாத நாயக்கர் அனுமதி அளித்ததால், அந்நாட்டவர் சிலர் அடிக்கடி தஞ்சாவூருக்கு வரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அக்காலகட்டத்தில் திருப்பணிகள் நடந்ததால் சிற்பி ஒருவர், தான் பார்த்த ஐரோப்பியர் உருவத்தைத் தொப்பியுடன் இக்கோபுரத்தில் படைத்துள்ளார் என்று தெரிவிக்கின்றனர். என்றும் ஆச்சரியம் அளிக்கும் பெரிய கோயில் எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும் ஸ்பெஷல்... ஸ்பெஷல்தானே.