தமிழ்நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் குளிர் பிரதேசங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். குறிப்பாக சேலம் மாவட்டத்தில் உள்ள ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்து வருகின்றனர். கோடை விடுமுறை மற்றும் வார விடுமுறை நாட்களில் ஏற்காட்டிற்கு இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். ஏற்காட்டில் உள்ள படகு இல்லம், கிளியூர் நீர் வீழ்ச்சி, அண்ணா பூங்கா, மான் பூங்கா, லேடிஸ் சீட் காட்சி முனை, ஜென்ஸ் சீட் காட்சி முனை, சேர்வராயன் மலை, மஞ்சகுட்டை காட்சி முனை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. சேலம் மட்டுமின்றி சேலம் அருகே உள்ள மாவட்டங்களான ஈரோடு தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் அந்த மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் ஏற்காடு வருகின்றனர். ஏற்காட்டில் தற்போது குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருவதால் சுற்றளவு பயணிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். 



ஏற்காட்டில் உள்ள படகு இல்லத்தில் அதிக அளவில் கூட்ட நெரிசல் இருப்பதால் பாதுகாப்பு பணிகள் கூடுதலாக காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டு படகு சவாரிக்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதேபோன்று கிளியூர் நீர் வீழ்ச்சியில் நீராடும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பான முறையில் நீராட அறிவுறுத்தி வருகின்றனர். அண்ணா பூங்கா மற்றும் மான் பூங்காவில் குழந்தைகளை அழைத்து செல்லும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. சேர்வராயன் மலைக்கு வாகனத்தில் செல்லும் சுற்றுலா பயணிகள், பனி மூட்டம் அதிகம் உள்ளதால் வாகனத்தை பொறுமையாக இயக்குமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக ஏற்காட்டில் உள்ள அண்ணா பூங்காவில் கோடை மலர் கண்காட்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. 



இதுபோன்று சேலம் ஏற்காடு அடிவாரத்தில் அமைந்துள்ள குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா. இங்கு மான், வெள்ளை மயில், மயில், நாரை கொக்கு, மலைப் பாம்புகள், முதலைகள், நரி, வெளிநாட்டுக் குரங்கு வகைகள், ஆமை, பறவைகள் என பல உயிரினங்கள் உள்ளது. ஏற்காடு அடிவாரத்தில் அமைந்துள்ளதால் எப்போதும் வன உயிரியல் பூங்கா குளிர்ந்த நிலையில் இருக்கும். இதனால் அங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செய்கின்றனர். குறிப்பாக சேலம் மக்கள் அதிக அளவில் வார இறுதி நாட்களில் வன உயிரியல் பூங்காவிற்கு குடும்பத்துடன் சென்று விடுமுறை நாளை மகிழ்ச்சியுடன் கொண்டா குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா வந்து சென்றனர். குறிப்பாக இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக வனத்துறை சார்பில் மினி பஸ் ஏற்பாடு செய்யப்பட்டு கோரிமேடு பகுதியில் இருந்து அரை மணி நேரத்திற்கு ஒருமுறை இயக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


இதேபோன்று மேட்டூர் அணை, மேட்டூர் அணை பூங்கா, முத்துமலை முருகன் கோவில், ஆத்தூர் அடுத்துள்ள முட்டல் நீர் வீழ்ச்சி, பூலாம்பட்டி படகு சவாரி இல்லம், பண்ணவாடி பரிசல் சவாரி உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் இன்று அதிகரித்து காணப்பட்டது.