தமிழ்நாட்டில் கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில், பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் தமிழ்நாட்டில் உள்ள ஊட்டி, கொடைக்கானல் மற்றும் கேரளாவில் உள்ள மூணாறு போன்ற பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல தொடங்கியுள்ளனர்.
இதில், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள மூணாறு, இந்தியாவின் முக்கிய மலை சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 6000 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த சுற்றுலா தலம் தேயிலை மற்றும் ஏலத் தோட்டங்களால் சூழப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில், மிளகு மற்றும் நறுமணப் பொருட்கள் அதிக அளவில் விளைகின்றன.
கோடை காலங்களில் இப்பகுதியில் நிலவும் இதமான காலநிலையால், மூணாறுக்கு ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் அயல் நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். இதனால், கேரள மாநில அரசின் சுற்றுலாத் துறை, கடந்த 2019 ஆம் ஆண்டு மூணாறில், மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஆறு ஏக்கர் பரப்பளவில் ரூ.4.5 கோடி செலவில் புதிய தாவரவியல் பூங்கா அமைத்தது.இதனால் முக்கிய சுற்றுலா தலங்களில் சுற்றுலா வசதிகள் மேம்படுத்தப்பட்டு உள்ளன. தமிழகத்தின் எல்லை பகுதியிலுள்ள தேக்கடிக்கும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவது வழக்கமாக உள்ளது. இது, தற்போது இந்தியா முழுவதிலும் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகளை கவரும் முக்கிய தலமாக மாறியுள்ளது.
மே 1-ம் தேதி உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு இன்று மூணாறில் மலர் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதற்காக ரோஜா, ஜெரோனியா, டேலியா, ஜெரிபரா, ஐஸ்வர்யா போன்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு மலர்களின் 20,000-க்கும் மேற்பட்ட செடிகள் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இந்த மலர் கண்காட்சி 10 நாட்கள் நடைபெறவுள்ளது.
அத்துடன், கடந்த ஆண்டு தென் தமிழகத்தின் தேனி மாவட்ட மக்களை பயமுறுத்திய அரிக்கொம்பன் யானையை நினைவூட்டும் வகையில் அதன் உருவம் பைபர் மூலம் தத்ரூபமாக உருவாக்கப்பட்டுள்ளது. இயந்திரத்தால் இயக்கப்படும் இந்த யானையின் காதுகள் மற்றும் தும்பிக்கையால் அசைவுகள் ஏற்படுவதால், சுற்றுலாப் பயணிகள் அருகில் செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். மேலும் சுற்றுலா அனுபவத்தை இன்னும் சிறப்பாக மாற்றும் வகையில், வண்ண விளக்குகளுடன் கூடிய இசை நீர் அருவிகள், கண்ணாடி பாலங்கள், செல்பி பாயிண்ட் பகுதிகள் போன்றவை பல இடங்களில் அமைக்கப்பட்டு வருகின்றன. இவை பயணிகளை ஈர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
இதைத் தவிர, கேரளத்தின் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் அரிக்கொம்பன் யானை, கதகளி நாட்டிய வடிவம், காட்டெருமை உருவம் போன்றவை இயற்கையை பிரதிபலிக்கும் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மலர்கள் மற்றும் இலைகளால் உருவாக்கப்பட்ட டைனோசர் மற்றும் மர அணில் வடிவங்கள் சிறார்களையும் பெரியவர்களையும் பெரிதும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது