ஆர்ப்பரிக்கும் அகஸ்தியர் அருவி:
மனிதன் ஆரம்ப கால முதலே தட்பவெட்ப நிலைக்கு ஏற்றார் போல தான் இடம் பெயர்ந்து தன்னை கோடை காலத்தில் குளிர்ச்சியாகவும் குளிர் காலத்தில் வெப்பமாக வைத்துக்கொள்ள திட்டமிட்டு பயணித்திருக்கிறான். அப்படி இடம்பெயர்ந்து வாழ்ந்ததின் அடிப்படையில் வந்தது தான் சுற்றுலா செல்லும் பழக்கம். அந்த வகையில் தமிழகத்தில் பல்வேறு கோடை வாஸ்தலங்கள் இருக்கின்றன. அப்படிப்பட்ட இடங்களில் திருநெல்வேலி மாவட்டத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களல் பல உண்டு. அதில் அம்பாசமுத்திரம் ஒன்று. அதிலும் குறிப்பாக அகத்தியர் அருவி. மேற்குத் தொடர்ச்சி மலையும் அதன் அடிவாரத்தில் பாய்ந்தோடும் தன்பொருனை நதியும் உள்ளது. அகத்தியர் அருவி, பாபநாசம் அருகில், மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற அருவி. முக்கியமான சுற்றுலா தலமும் ஆகும். மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை பெய்யும் பருவமழை காரணமாக அகத்தியர் அருவிக்கு நீர்வரத்து கிடைக்கிறது. ஆனால், அதிகபட்ச நீர்வரத்து, அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் வரை பெய்யும் வடகிழக்குப் பருவமழையினால் கிடைக்கிறது. ஆண்டு முழுவதும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் ஒரே அருவி அகத்தியர் அருவி.
எப்படி போகலாம்?
திருநெல்வேலியில் இருந்து 41 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த அகத்தியர் அருவி. திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து பாபநாசம் வரை பேருந்து வசதி உண்டு. திருநெல்வேலி சந்திப்பில் இருந்து அம்பாசமுத்திரம் வரை ரயில் வசதியும் உண்டு. அதன்பின்பு பாபநாசம் சென்று அங்கிருந்து ஆட்டோ அல்லது தனியார் வாகனங்களில் அகத்தியர் அருவிக்கு செல்லலாம். அகத்தியர் அருவிக்கு சென்றால் வனத்துறை அறிவிக்கப்பட்டிருந்த கட்டணத்தை செலுத்தி விட்டு குளிக்க செல்லலாம். இங்கு அருவியில் ஆண்கள் மற்றும் பெண்கள் குளிக்க தனி தனி இட வசதி உண்டு. அகத்தியர் அருவியில் குரங்கு பட்டாளங்கள் அதிகம் உண்டு அவற்றைக் கண்டு களித்தபடி அவற்றுடன் விளையாடியபடி சுற்றுலாவை மகிழ்ச்சியாக கொண்டாடலாம். அகத்தியர் அருவிக்கு அருகில் சிறிது தூரத்தில் ஒரு படிக்கட்டு செல்லும் அந்தப் படிக்கட்டின் மேலே பயணித்தால் கல்யாணி தீர்த்த அருவியை பார்க்கலாம். ஆனால் அங்கு குளிக்க அனுமதி கிடையாது. அங்கு சென்று அங்கு இருக்கும் இறைவனை தரிசித்து விட்டு அருவியை கண்களால் கண்டு ரசித்து விட்டு வரலாம்.
அகத்தியர் அருவி பெயர்க்காரணம்:
புராணத்தின்படி, சிவபெருமான் பார்வதி திருமணத்தின் போது அனைவரும் வடக்கு பகுதியில் கூடியிருந்ததால் வடக்கே உயர்ந்து தெற்கே தாழ்ந்ததால் அதனை சமன் செய்ய அகத்தியரை சிவபெருமான் தென் கைலாயமான மேற்கு தொடர்ச்சி மலைக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அப்போது கைலாயத்தில் நடக்கும் சிவன்-பார்வதி கல்யாணத்தை காண விரும்பி தவத்தில் ஈடுபட்டிருக்கிறார். அவரது தவத்தின் பலனாக திருமணக் கோலத்தில் சிவனும் பார்வதியும் பாபநாசத்தில், அகத்தியர் முன் காட்சியளித்ததாக ஐதீகம். இதனாலேயே பாபநாசநாதர் கோவில் இங்கு வந்தது. அகத்தியர் அருவி என்ற பேரும் வந்தது. இத்தகைய சிறப்பு பெற்ற அகத்தியர் அருவிக்கு கோடைக்கால சுற்றுலாவிற்கு சென்று வந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் நீங்களும் அகத்தியர் அருவிக்கு கோடைக்கால சுற்றுலாவிற்கு சென்று வாருங்களேன்.