கோடை விடுமுறைக்கு மக்கள் கூட்டம்கூட்டமாக படையெடுக்கும் இடம் ஊட்டி, கொடைக்கானல், நீலகிரி, ஏற்காடு போன்ற இடங்கள்தான்.ஒரே நாளில் லட்சக்கணக்கானோர் இந்த இடங்களுக்குச் செல்வதால் கூட்ட நெரிசலும் அதிகமாக காணப்படும். அழகிய இடங்களை சுற்றிப்பார்க்கவும் பல மணி நேரம் காத்திருக்க வேண்டும். எனவே, மக்கள் அதிகளவு செல்லாத அழகிய இடங்கள் ஏராளமாக உள்ளன. அதிகமான மக்கள் கூட்டம் இல்லாத அமைதியான சுற்றுலாவை விரும்புபவர்கள், இயற்கை அனுபவங்களை ரசிப்பவர்கள் இந்த மலை நகரங்களுக்குச் சென்று தங்களின் சம்மர் வெகேஷனை அனுபவிக்கலாம். அந்த வகையில், தமிழ்நாட்டில் பேமஸ் ஆகாத அதேபோல் மக்கள் கூட்டம் அதிகம் இல்லாத குளிர்ச்சியான சுற்றலா இடங்களை பற்றி பார்க்கலாம்.
திண்டுக்கல் - பூம்பாறை
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் இருந்து 18 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பூம்பாறை. மேலும், இந்த இடம் பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கும் அளவிற்கு காட்சியளிக்கும். கொடைக்கானலுக்கு வருபவர்கள் மக்கள் கூட்டம் அதிகம் இல்லாத இடத்தை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால் இந்த பூம்பாறையை தேர்வு செய்யலாம். இந்த கிராமத்துக்கு செல்லும் வழி எங்கும் படம் எடுத்து ஸ்மார்ட்ஃபோன்கள் மற்றும் லேப்டாப்பில் ஸ்கிரீன் சேவர்களாக வைக்கும் அளவுக்கு இயற்கை எழில் கொஞ்சம் பிளாக்குகள் தான். செல்ஃபி வெறியர்கள் மற்றும் போட்டோ ஆர்வலர்களுக்கு ஏற்ற சுற்றுலாத் தளம் எனலாம். இங்கு வெறுமனே கேம்பிங் செய்யாமல், சொகுசாக சகல வசதிகளோடு கேம்பிங் செய்ய லக்ஸிகிளாம்ப் (Luxeglamp) என பூம்பாறையிலேயே ஓர் அருமையான இடம் உள்ளது.
பிரமாதமான வியூ உடன் ஒய்யாரமாகத் தங்கலாம். சீசன் என்றால் உங்கள் அறையில் இருந்து நீர் வீழ்ச்சியைக் கூட காண வாய்ப்பு இருக்கிறது. அது போக, ஹோட்டல்களால், பாரதி நகர் வில்பட்டியில் சுவிட்சர்லாந்தின் மலைத் தொடர்களில் காணப்படும் மரத்தாலான சிறிய கேபின் அறைகளைப் போலவே கொடைக்கானலில் தங்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மன்னவனூரும் கொடைக்கானலில் இருந்து 32 கி.மீ. தொலைவில் பூம்பாறைக்கு அடுத்து அமைந்துள்ளது. இங்கு சுற்றிப்பார்க்க மிகவும் அழகான மற்றும் அமைதியான மன்னவனூர் ஏரி, வியூபாயின், நீர்வீழ்ச்சி என கண்களை கவரும் அளவிற்கு இருக்கும். கொடைக்கானலில் அமைத்துள்ள மிகவும் அழகான மலைக்கிராமம் ஆகும். இந்த இடமும் பூம்பாறை, மன்னவனூர் ஆகிய ஊர்களுக்கு பக்கத்தில் அமைந்துள்ளது. இங்கு கூக்கால் நீர்வீழ்ச்சி, திரில்லிங்கான வியூப் பாயிண்டுகள், அமைதியான ஏரி போன்ற பலவகையான சுற்றுலா இடங்கள் அமைந்துள்ளது.
திண்டுக்கல் - சிறுமலை
நத்தம் சாலையில் உள்ள சிறுமலை, இந்த கோடையில் செல்லக்கூடிய சரியான ஸ்பாட்டாக இருக்கும். திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து ஒருமணி நேரத்திற்கு ஒரு முறை தென்மலை செல்லும் பேருந்து பயணிகளை ஏற்றி செல்கிறது. வழியில் நத்தம் சாலையில் உள்ள மேம்பாலத்தை கடந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் வலது புறமாக சென்று சிறுமலை நோக்கி பயணிக்க வேண்டும். பேருந்தில் சென்றால் சிறுமலை இயற்கை அழகினை முழுவதுமாக ரசிக்க முடியாது. கொஞ்சம் சிரமம்தான். முடிந்தவரை தனியாக வாகனத்தில் செல்ல பாருங்கள். அப்போதுதான் நினைத்த இடத்தில் நின்று மழையின் அழகை ரசிக்க முடியும்.
இந்த மலைப்பாதை உச்சியை அடைய 18 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இதில், 4-வது கொண்டை ஊசி வளைவை கடந்தவுடன், ஜில் என்ற குளிர் காற்றும், காற்றுடன் கூடிய மூலிகை நறுமணத்தையும் உணரலாம். சிறுமலையின் 17-வது கொண்டை ஊசி வளைவில் அமைந்துள்ள உயர் கோபுரத்தில் மேலே சென்று மலையின் இயற்கையின் பிரமிக்க வைக்கும் அழகிய காட்சிகளை காண்டு ரசிக்கலாம்.