கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க பாராசூட் சாகச நிகழ்ச்சி மே 16 முதல் 19-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், சுற்றுலா பயணிகளை எவ்ளவு துாரம் பறக்க வைக்கலாம் என பாராசூட்டில் பறந்து சுற்றுலாத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Continues below advertisement


பாராசூட் நிகழ்ச்சி


திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் ‘மலைகளின் இளவரசி’ என அழைக்கப்படுகிறது. இங்கு இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகள் அதிகமாக உள்ளன. கொடைக்கானலில் தோட்டக்கலைத் துறை மற்றும் சுற்றுலாத் துறை இணைந்து விரைவில் கோடை விழா மற்றும் 62 வது மலர் கண்காட்சி நடத்த உள்ளது. கோடை காலத்தை முன்னிட்டு குளிர் சீசனை அனுபவிக்க கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவு வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க தற்போது தனியார் நிறுவனத்துடன் இணைந்து தமிழக சுற்றுலாத் துறை பாராசூட் நிகழ்ச்சியை  நாளை மே 16 முதல் 19ம் தேதி வரை, கொடைக்கானல் மூஞ்சிக்கல்லில் நடத்த உள்ளது.


கட்டணம் எவ்வளவு?


சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க  தனியார் நிறுவனத்துடன் இணைந்து தமிழக சுற்றுலாத்துறை பாராசூட் சாகசத்தை நாளை முதல் 4 நாட்களுக்கு கொடைக்கானலின் மூஞ்சிக்கல் பகுதியில் நடத்த உள்ளது. சுற்றுலா பயணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பாராசூட்டில் ஏறி வானில் பறந்தவாறு கொடைக்கானலின் இயற்கை அழகை ரசிக்கலாம். வானில் ஒரு ரவுண்ட் வர ரூ.200 கட்டணம் ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில் 15 முதல் 60 வயது வரையுள்ள இரு பாலரும் பயணிக்கலாம்.




சுற்றுலாத் துறை ஆய்வு


வானில் பறந்தவாறு கொடைக்கானலின் இயற்கை அழகை ரசிக்கலாம். காற்றின் திசை, சுற்றுலாப் பயணிகளை எவ்ளவு துாரம் பறக்க வைக்கலாம் என பாராசூட்டில் பறந்து ஆய்வு செய்தனர் சுற்றுலாத் துறை அதிகாரிகள்.


அதேபோல் கோடை சீசனை முன்னிட்டு சுற்றுலாபயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இந்த மாத இறுதிவாரத்தில் கோடைவிழா, மலர்கண்காட்சி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுவரும் நிலையில் பிரையண்ட்பூங்காவில் மலர்கள் பூத்துக்குலுங்க துவங்கிவிட்டது. இதனை சுற்றுலாபயணிகள் கண்டு ரசித்தும், புகைப்படம் எடுத்தும் வருகின்றனர். பத்து நாட்கள் நடைபெறும் கோடைவிழாவில் படகு போட்டி, மீன்பிடித்தல் போட்டி, விளையாட்டுப்போட்டிகள் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற உள்ளது. பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சி துவங்கி பத்து நாட்கள் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அனைத்து துறையினரும் இணைந்து செய்து வருகின்றனர்.




கொடைக்கானலில் தற்போது இதமான தட்பவெப்பநிலை நிலவுவதால் கடந்த சில தினங்களாக சுற்றுலாபயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது. ஊட்டி கோடைவிழா மலர் கண்காட்சி நிறைவுபெற்றபிறகு, இதன் தொடர்ச்சியாக கொடைக்கானலில் கோடைவிழா, மலர்கண்காட்சிக்கான தேதிகள் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் இனி இரவு 7 மணி வரை சுற்றுலாப்பயணிகள் அனுமதிக்கப்படுவர் என்று பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்படி கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சி சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில், பார்வையாளர்கள் அனுமதி நேரம், மாலை 6 மணிக்கு பதில், இனி இரவு 7 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.