மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள இந்த அற்புதமான இடம் மூடுபனி காடுகள், மயக்கும் நிலப்பரப்புகள், அமைதியான ஏரிகள் மற்றும் இனிமையான வானிலை ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. இயற்கையாகவே, மலைவாசஸ்தலத்தின் இந்த அம்சங்கள் ஒவ்வொரு ஆண்டும் பல சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றது என சொல்லலாம்.  கோடைகாலங்களில் பல லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் படையெடுக்கும் இடமாகவும் உள்ளது. 

கொடைக்கானலில் இயற்கை அழகை ரசிப்பதற்காகவும், குளிர்ச்சியான சூழலை அனுபவிப்பதற்காகவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் வெள்ளி நீர்வீழ்ச்சி, நகரின் மையப்பகுதியில் உள்ள நட்சத்திர ஏரி, பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா ஆகியவற்றுக்கு சென்று பார்வையிடுகின்றனர். இங்கு வனத்துறை கட்டுப்பாட்டின் கீழ் மோயர் பாயிண்ட், பைன் மரக்காடு, பில்லர் ராக், குணா குகை, பேரிஜம் ஏரி ஆகிய இடங்களுக்கும் சுற்றுலாப் பயணிகள் சென்று வருகின்றனர்.

குறிப்பாக கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் பூத்துக் குலுங்கும் பல வண்ண ரோஜாக்களை, சுற்றுலாப் பயணிகள் போட்டோ, செல்பி எடுத்து மகிழுகின்றனர். `மலைகளின் இளவரசி’ எனவும் அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு தற்போது கோடை கால சீசன் எதிரொலியால் நாளுக்கு நாள் சுற்றுலாப் பயணிகள் அதிகமானோர் வந்து செல்கின்றனர். இங்குள்ள மோயர் சதுக்கம், குணா குகை, பைன் மரக்காடுகள், பசுமைப் பள்ளத்தாக்கு, தூண்பாறை, பேரிஜம் ஏரி உள்ளிட்ட இடங்கள் சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்க்கிறது. மேலும், நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், பிரையன்ட் பூங்காவில் பல வண்ண மலர்களை கண்டு ரசிப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.

கொடைக்கானலுக்கு மேலும் அழகு சேர்க்கவும், சுற்றுலா பயணிகளை கவரும் விதமாகவும் கடந்த 2012ம் ஆண்டு அப்சர்வேட்டரி பகுதியில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் ரோஜா பூங்கா அமைக்கப்பட்டது. ரூ.10 கோடி செலவில் அமைக்கப்பட்ட இந்த பூங்காவில் பைரைட், பாரடைஸ், ஆட்டன் கோல்டு உள்ளிட்ட 1,500 வகையை சேர்ந்த சுமார் 16 ஆயிரம் ரோஜா செடிகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் ரோஜா செடிகளை கவாத்து செய்யும் பணி நடைபெற்றது. இதனால் செடிகளில் புதிய அரும்புகள், மொட்டுகள் வளர்ந்தது. தற்போது, கோடை சீசன்  நடைபெறும் நிலையில் கவாத்து செய்யப்பட்ட செடிகளில் பல வண்ண ரோஜா மலர்கள் பூத்து குலுங்குகின்றன. குறிப்பாக, மஞ்சள், பச்சை ரோஜாக்கள், வரி ரோஜா, கருப்பு ரோஜா, பட்டர் ரோஜா, சிறகு ரோஜா ஆகியவை பூத்துள்ளன.

தற்போது கோடை சீசன் காலம் என்பதால் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் ரோஜா தோட்டத்தை ஆர்வமுடன் பார்த்து பரவசமடைந்து செல்கின்றனர். புதிய சுற்றுலா தலமாக விளங்கும் இந்த பூங்காவில் குழந்தைகள், சிறுவர்கள் விளையாட உபகரணங்களும், செயற்கை படிக்கட்டு நீர் ஊற்றும் அமைக்கப்பட்டுள்ளன. இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விளையாடி மகிழ்ச்சியுடன் பொழுதை கழிக்கின்றனர்.