மலைவாசஸ்தலங்களில் ஒன்றான கொடைக்கானல் தமிழ்நாட்டின் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. 'காடுகளின் பரிசு' என்று மொழிபெயர்க்கும் ஒரு பெயருடன், இந்த இடத்தின் அமைதியும், அழகும் நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள இந்த அற்புதமான இடம் மூடுபனி காடுகள், மயக்கும் நிலப்பரப்புகள், அமைதியான ஏரிகள் மற்றும் இனிமையான வானிலை ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. இயற்கையாகவே, மலைவாசஸ்தலத்தின் இந்த அம்சங்கள் ஒவ்வொரு ஆண்டும் பல சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றது என சொல்லலாம்.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை கோட்டம் சார்பில் கோடை காலத்தை முன்னிட்டு பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு மே மாதம் முழுவதும் தினசரி சிறப்பு பேருந்துகள் கொடைக்கானலில் இருந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்துகள் கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு 12 சுற்றுலா தலங்களுக்கு செல்லும். இதில் ஏறி செல்லாம். பெரியவர்களுக்கு தலா 150 ரூபாயும், சிறியவர்களுக்கு 75 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழ் நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. அதேநேரம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான நீலகிரி, கோவை, தென்காசி, திண்டுக்கல், தேனி, போன்ற மாவட்டங்களில் மலையின் தாக்கம் காரணமாக ஓரளவு வெப்பத்தின் தாக்கம் குறைந்தே காணப்படுகிறது. கோடை விடுமுறை விடப்பட்ட நிலையில், பலரும் வெயிலில் இருந்து தப்பிக்கவும், குடும்பத்துடன் சுற்றுலா செல்லவும் விரும்புகிறார்கள். பெரும்பாலும் குளுகுளுவென இருக்கும் மலைப்பிரதேசங்களைத்தான் விரும்புகிறார்கள். அப்படி அதிகம் பேர் விரும்பும் இடமாக கொடைக்கானலும், ஊட்டியும் இருக்கிறது. இதில் கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்வோரின் வசதிக்காக, ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் சுற்றுப்பேருந்துகளை அரசு போக்குவரத்துக்கழகம் இயக்குவது வழக்கம். அந்த வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மதுரை கோட்டம் சார்பில் கோடை காலத்தை முன்னிட்டு பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு மே மாதம் முழுவதும் தினசரி சிறப்பு பேருந்துகள் கொடைக்கானலில் இருந்து இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானல் பேருந்து நிலையத்தில் இருந்து தினமும் காலை 8மணிக்கு, 9 மணிக்கு, 11 மணிக்கு, 12 மணிக்கு என 4 முறை இந்த சுற்று பேருந்துகள் செல்கின்றன. இந்த பேருந்துகள் அப்பர் லேக் வியூ, மோயர் பாயிண்ட், பைன் பாரஸ்டு, குணா குகை, தூண் பாறை, பசுமை பள்ளத்தாக்கு, கால்ஃப் மைதானம், பாம்பார் ஆறு காட்சி, 500 வருட மரம், கோக்கர்ஸ் வாக், பிரையண்ட் பூங்கா, லேக்(டிராப் செய்யும் இடம்) என 12 இடங்களுக்கு சுற்றுலா பேருந்துகள் செல்கின்றன.இந்த பேருந்தில் எழில்மிகுந்த 12 இடங்களை சுற்றி பார்த்து வர பெரியவர்களுக்கு 150 ரூபாயும், 12 வயதிற்கு உள்பட்ட குழந்தைகளுக்கு 75 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த கொடைக்கானல் அரசு சுற்றுலா பேருந்துகளில் பயணிக்க ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியும். முன்பதிவு செய்வதற்கு www.tnstc.com என்ற இணையதளத்திலும்,tnstc அதிகாரப்பூர்வ மொபைல் செயலியையும் பயன்படுத்தி முன்பதிவு செய்யலாம் என்று அரசு போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது. கொடைக்கானலில் தற்போது கிளைமேட் மிக அருமையாக உள்ளது. பலரும் ஆர்வமுடன் கொடைக்கானல் வருகிறார்கள். பகலிலேயே பனிமூட்டமும், அவ்வப்போது மழையும் பெய்கிறது. ஏரியில் படகில் பயணித்தபடி பலரும் கொடைக்கானல் கால நிலையை ரசித்து வருகிறார்கள். இதேபோல் டிரக்கிங் செல்வதிலும் பலர் ஆர்வம் காட்டுகிறார்கள்