தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையின் மூன்றாம் நாளான இன்று காணும் பொங்கல் விழாவை பொதுமக்கள் கொண்டாடி வருகின்றனர். காணும் பொங்கலை கொண்டாடும் விதமாக தமிழகம் முழுவதும் பொதுமக்கள் தங்களது உறவினர்களுடன் சுற்றுலா தலங்களுக்கு செல்வது வழக்கம். இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் ஏற்காடு சுற்றுலா தலத்திற்கு அதிகாலை முதல் சுற்றுலா பயணிகள் படையெடுக்க தொடங்கியுள்ளனர். ஆறு நாட்கள் தொடர் விடுமுறை இருந்ததால் சேலம் மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏற்காட்டில் உள்ள படகு இல்லம், கிளியூர் நீர் வீழ்ச்சி, அண்ணா பூங்கா, மான் பூங்கா, லேடிஸ் சீட் காட்சி முனை, ஜென்ஸ் சீட் காட்சி முனை, சேர்வராயன் மலை, மஞ்சகுட்டை காட்சி முனை உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக ஏற்காட்டில் கடும் பனி நிலவி வருகிறது. இதனால் ஏற்காடு சென்ற சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Continues below advertisement

ஏற்காட்டில் உள்ள படகு இல்லத்தில் அதிக அளவில் கூட்ட நெரிசல் இருப்பதால் பாதுகாப்பு பணிகள் கூடுதலாக காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகு சவாரி செய்யும் சுற்றுலா பயணிகளுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டு படகு சவாரிக்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதேபோன்று கிளியூர் நீர்வீழ்ச்சியில் நீராடும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பான முறையில் நீராட அறிவுறுத்தி வருகின்றனர். அண்ணா பூங்கா மற்றும் மான் பூங்காவில் குழந்தைகளை அழைத்து செல்லும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. சேர்வராயன் மலைக்கு வாகனத்தில் செல்லும் சுற்றுலா பயணிகள், பனி மூட்டம் அதிகம் உள்ளதால் வாகனத்தை பொறுமையாக இயக்குமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. 

Continues below advertisement

இதேபோன்று ஏற்காடு அடிவாரத்தில் உள்ள குருவம்பட்டி வன உயிரியல் பூங்கா இன்று காணும் பொங்கல் என்பதால் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை குருவம்பட்டி வன உயிரியல் பூங்கா செயல்படும் என சேலம் சரக வனத்துறை அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் தங்கள் குடும்பங்களோடு குருவம்பட்டி வன உயிரியல் பூங்காவிற்கு வந்து கொண்டிருக்கின்றனர். குருவம்பட்டி வன உயிரியல் பூங்காவில் மான், வெள்ளை மயில், மயில், நாரை கொக்கு, மலைப்பாம்புகள், முதலைகள், நரி, வெளிநாட்டுக் குரங்கு வகைகள், ஆமை, பறவைகள் என பல உயிரினங்கள் உள்ளது. இதனை பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் ரசித்து செல்கின்றனர். 

சேலம் மாநகரப் பகுதியில் உள்ள அண்ணா பூங்காவில் காணும் பொங்கலை முன்னிட்டு காலை முதலே மக்களின் வருகை அதிகரித்து காணப்படுகிறது. தங்களது குழந்தைகளுடன் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் காணும் பொங்கல் இனிமையாக கொண்டாடி வருகின்றனர். மேலும் சேலம் புதிய பேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சி திடலில் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதனை தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களது குழந்தைகளுடன் கண்டுகளித்து வருகின்றனர்.