இந்தியாவில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணம் செய்வதற்காக ஆன்லைன் வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்கிறார்கள். IRCTC செயலி வாயிலாக இவ்வாறு டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு பல்வேறு மாற்றங்கள் ஜனவரி 12ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருகின்றன.
வழக்கமாக இந்தியாவில் ஒரு ரயில் புறப்படுவதற்கு 60 நாட்களுக்கு முன்னரே அதற்கான பொது டிக்கெட் முன்பதிவு என்பது தொடங்கிவிடும். அதேபோல ரயில் புறப்படுவதற்கு முந்தைய நாள் தட்கல் டிக்கெட் முன்பதிவு தொடங்கும். பயணிகள் தங்களுடைய பயணத்தை முன்கூட்டியே திட்டமிட ஏதுவாக 60 நாட்களுக்கு முன்னரே டிக்கெட் முன்பதிவு செய்யும் நடைமுறை நீண்ட காலமாகவே இந்தியாவில் புழக்கத்தில் இருக்கிறது. ஆனால் இவ்வாறு டிக்கெட் முன்பதிவு செய்யும்போது ஏஜென்ட்களின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது என தொடர்ச்சியாக புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. அது மட்டும் இன்றி பலரும் போலி IRCTC கணக்குகளைக் கொண்டு டிக்கெட்டுகளை மொத்தமாக வாங்கிவிட்டு பின்னர் அதனை அதிக விலைக்கு பயணிகளிடம் விற்பனை செய்கின்றனர் என்ற ஒரு புகார் ரயில்வேக்கு வந்தது.
எனவே ரயில் டிக்கெட் முன்பதிவியை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் இந்திய ரயில்வே பல்வேறு மாற்றங்களை அதிரடியாக அறிவித்த வண்ணம் இருக்கிறது. அதில் முக்கியமான ஒரு மாற்றம் நாளை முதல் அமலுக்கு வருகிறது. ஜனவரி 12ஆம் தேதியிலிருந்து ஆதார் இணைக்கப்படாத ஐஆர்சிடிசி கணக்குகளில் இருந்து டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது. IRCTC கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்து சரிபார்ப்பு முடித்தவர்களுக்கு டிக்கெட் முன்பதிவு முன்னுரிமை வழங்கி வருகிறது. முதலில் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் முதல் 10 நிமிடங்களுக்கு , IRCTC கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்து சரிபார்ப்பு முடித்தவர்கள் மட்டுமே டிக்கெட் பதிவு செய்ய முடியும் என்ற முறை அமல்படுத்தப்பட்டது. இது வெற்றி அடையவே இதனை ரயில்வே படிப்படியாக விரிவாக்கம் செய்து முதல் 4 மணி நேரம் என நீட்டித்தது.
இந்நிலையில் ஜனவரி 12ஆம் தேதியில் இருந்து ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கும் முதல் நாள் முழுவதுமே IRCTC கணக்கில் ஆதாரை இணைத்தவர்களுக்கு மட்டுமே டிக்கெட் முன்பதிவு வாய்ப்பு வழங்கப்படும். இதன்படி காலை 8 மணிக்கு முன்பதிவு தொடங்குவதில் இருந்து இரவு 12 மணி வரை IRCTC கணக்கில் ஆதாரை இணைத்தவர்களால் மட்டுமே டிக்கெட் பதிவு செய்ய முடியும். ஆதார் சரிபார்க்கப்படாத கணக்கு வைத்திருப்பவர்களால் முதல் நாளில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியாது.
நேரடியாக ரயில் நிலைய கவுண்ட்டர்களில் சென்று டிக்கெட் முன்பதிவு செய்யும் நடைமுறையில் எந்த மாற்றமும் இல்லை. IRCTC செயலி அல்லது இணையதளம் வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே இந்த மாற்றம் பொருந்தும்.எனவே அடிக்கடி ரயில்களில் பயணம் செய்யக்கூடியவர்கள் தங்களுடைய IRCTC கணக்கோடு ஆதார் எண்ணை இணைத்து வைத்திருந்தால் தான் இனி பொது டிக்கெட் முன்பதிவும் மேற்கொள்ள முடியும்.