Chennai to Arupadai Veedu: சென்னையில் இருந்து அறுபடை வீட்டிற்கு எளிதில் பயணம் மேற்கொள்வதற்கான வழித்திட்டமிடல் கீழே விவரிக்கப்பட்டுள்ளது.

அறுபடை வீடு பயணம்:

கோடைகாலம் வந்துவிட்டது, குடும்பத்துடன் நேரம் செலவிட விரும்புவோர் வெளியூர்களுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிடுகின்றனர். சிலர் இந்த விடுமுறையை பயன்படுத்தி பக்தி பயணங்களில் ஈடுபடவும் விரும்புவர். அந்த வகையில் முருகனின் ஆறு வீடு எனப்படும் அறுபடை ஸ்தலங்களுக்கான பயணம்,  பக்தி மற்றும் அமைதிக்கான சிறந்த தேர்வாக இருக்கும். இந்த அழகான பயணம் உங்களுக்கு நம்பிக்கை, வரலாறு மற்றும் இயற்கை அழகை ரசிக்கும் ஒரு அற்புதமான வாய்ப்பை வழங்கும்.

அறுபடை வீடுகள் என்ன?

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்பார்கள், அந்தவகையில் மலைகள் மீது அமைந்துள்ள இந்த ஆறு கோயில்களும் முருகனின் அறுபடை வீடு என வர்ணிக்கப்படுகிறது. ஒவ்வொன்றும் தனித்துவமான வரலாறு மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் கொண்டவை ஆகும். தமிழ்நாடு முழுவதும் பரவியுள்ள அறுபடை வீடுகள் என்பவை திருத்தணி முருகன் கோயில் , சுவாமிமலை முருகன் கோயில் , பழமுதிர்ச்சோலை முருகன் கோயில் , பழனி முருகன் கோயில் , திருப்பரங்குன்றம் முருகன் கோயில் மற்றும் திருச்செந்தூர் முருகன் கோயில் ஆகியவை ஆகும் . இந்த கோயில்களுக்குச் செல்வது ஆன்மாவைத் தூய்மைப்படுத்தி உள் அமைதியைக் கொண்டுவரும் புனிதச் செயலாகக் கருதப்படுகிறது. தமிழகத்தின் ஊடே பயணித்த ஒரு நல்ல வாழ்நாள் அனுபவத்தையும் வழங்குகிறது.

பயணத்திற்கான திட்டம்:

தமிழ்நாட்டின் வடக்கே தொடங்கி மாநிலத்தின் தென்பகுதி வரையில் நீளும் இந்த பயணமானது, இரண்டு நாட்கள் வரை நீடிக்கக் கூடியது. அதன்படி, கார் பயணத்தை சென்னையில் இருந்து தொடங்கினால் அறுபடைகளை தரிசிக்க முற்றிலுமாக இரண்டு நாட்கள் தேவைப்படும். நீண்ட நேரம் செலவிட்டு, கோயிலில் கிடைக்கும் நேர்மறை எண்ணங்களை உள்வாங்க விரும்பினார் ஒரு கோயிலுக்கு ஒரு நாள் என ஆறு நாட்கள் கூட பயணத்தை நீட்டிக்கலாம். இந்நிலையில் சென்னையில் இருந்து அறுபடை வீடுகளுக்கான பயணத்தை எப்படி தொடங்கலாம் என்பதை இந்த தொகுப்பில் அறியலாம். 

அறுபடை வீடுகளுக்கான பயணம்:

1. திருத்தணி முருகன் கோயில் - திருவள்ளூர்

சென்னையில் இருந்து சுமார் 85 கி.மீ தொலைவில் அமைந்துள்ள திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் தணிகை மலை உச்சியில் அமைந்துள்ளது, இது அமைதியைக் குறிக்கிறது. இங்குதான் முருகப்பெருமான் பழங்குடி இளவரசியான வள்ளியை மணந்ததாக நம்பப்படுகிறது. இந்த கோயில் மூச்சடைக்கக் கூடிய காட்சிகளை வழங்குகிறது மற்றும் அதன் தெய்வீக சூழலுக்கு பெயர் பெற்றது. இத்திருக்கோயில் முருகப் பெருமானின் ஐந்தாவது படைவீடாகும்.

2. சுவாமிமலை முருகன் கோயில் - தஞ்சாவூர்

திருத்தணியில் இருந்து சுமார் 280 கிலோ மீட்டர் தொலைவில் கும்பகோணத்திற்கு அருகில் சுவாமிமலை முருகன் கோயில் அமைந்துள்ளது. முருகன் தனது தந்தையான சிவபெருமானுக்கு "ஓம்" என்ற புனித மந்திரத்தின் அர்த்தத்தை இங்கு தான் உபதேசித்ததாகக் கூறப்படுகிறது . தமிழ் ஆண்டுகளைக் குறிக்கும் 60 படிக்கட்டுகளைக் கொண்ட இந்தக் கோயிலின் கட்டிடக்கலை பிரமிக்க வைக்கிறது. காவிரி ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த கோயில், முருகப் பெருமானின் நான்காவது படைவீடாகும்.

3. பழனி முருகன் கோயில் - திண்டுக்கல்

ஆறு படைவீடுகளில் பழனி முருகன் கோயில் மிகவும் பிரபலமானது. திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு மலையின் மீது அமைந்துள்ள இந்த கோயிலில் முருகன் துறவியாகக் அருள்பாலிக்கிறார். தெய்வத்தின் சிலை மூலிகைகள் மற்றும் தாதுக்களின் தனித்துவமான கலவையான நவபாஷானத்தால் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. முருகப் பெருமானின் மூன்றாவது படைவீடான பழனி ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்களை ஈர்க்கிறது. சுவாமி மலையில் இருந்து 250 கிமீ தொலைவில் உள்ள இந்த கோயிலை 4 மணி நேர பயணத்தில் அடையலாம்.

4. திருச்செந்தூர் முருகன் கோயில் - தூத்துக்குடி

வங்காள விரிகுடாவின் அழகிய கடற்கரையில் அமைந்துள்ள திருச்செந்தூர் முருகன் கோயில் , முருகன் சூரபத்மனை வென்ற இடமாகும் . இந்தக் கோயிலின் கடலோர இருப்பிடம் அதன் ஆன்மீக சூழலுக்கு அமைதியான அழகை சேர்க்கிறது, இது கட்டாயம் பார்க்க வேண்டிய இடமாக அமைகிறது. முருகனின் அறுபடை வீடுகளில் இந்த கோயில் இரண்டாவது இடம் வகிக்கிறது. பழனியில் இருந்து சுமார் 315 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருச்செந்தூரை சுமார் 6 மணி நேரத்தில் அடையலாம்.

5. திருப்பரங்குன்றம் முருகன் கோயில் - மதுரை

மதுரைக்கு அருகிலுள்ள திருப்பரங்குன்றம் கோயிலில் தான், முருகன் இந்திரனின் மகள் தெய்வானையை மணந்தார் என கூறப்படுகிறது. ஒரு மலையில் செதுக்கப்பட்ட இந்த கோயில், தமிழ்நாட்டின் மிகப் பழமையான பாறையில் செதுக்கப்பட்ட கோயில்களில் ஒன்றாகும். இது நேர்த்தியான கட்டிடக்கலையை வெளிப்படுத்துகிறது. அறுபடை வீடுகளில் முதன்மையானதாக கூறப்படுகிறது. திருச்செந்தூரிலிருந்து சுமார் 180 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த கோயிலை சுமார் மூன்றரை மணி நேர பயணத்தில் அடையலாம்.

6. பழமுதிர்ச்சோலை முருகன் கோயில் - மதுரை

மதுரையிலேயே பசுமைக்கு மத்தியில் அமைந்திருக்கும் பழமுதிர்ச்சோலை முருகன் கோயில் அதன் இயற்கை அழகு மற்றும் தெய்வீக அமைதிக்காக கொண்டாடப்படுகிறது. முருகப்பெருமான் தனது துணைவியார்களான வள்ளி மற்றும் தெய்வானையுடன் இங்கு வழிபடப்படுகிறார். இங்கு அவரது ஆறுபடை வீட்டை தரிசிக்கும் பயணம் நிறைவு பெறுகிறது. திருப்ப்ரங்குன்றத்தில் இருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த கோயிலை சுமார் ஒரு மணி நேரத்தில் அடையலாம். இந்த கோயில், முருகப் பெருமானின் ஆறாவது படைவீடாகும்.

கிடைக்கும் அரிய அனுபவங்கள்:

அறுபடை வீடுகளுக்கான இந்த பயணமானது பக்தி, அமைதி, நல்லொழுக்கம் மற்றும் வரலாறு சார்ந்த பயணமாக அமையும். அதோடு, கட்டிடக் கலை, புராணக் கதைகள், தமிழ்நாட்டின் நிலப்பரப்பின் அழகியல் மற்றும் தென்னிந்திய உணவு வகைகளையும் சுவைக்கலாம். நேரம் இருந்தால் பயணத்தின்போது எதிர்கொள்ளும் சில சுற்றுலா தளங்களையும் கண்டுகளிக்கலாம். இதனால் தமிழ்நாட்டின் பெரும்பாலான பகுதிகளை அனுபவிக்கலாம். அதன் மூலம் இது ஒரு பக்தி பயணமாக மட்டுமின்றி கோடை காலத்திற்கான சுற்றுலா அனுபவத்தை பெறலாம்.