அண்மையில் ட்விட்டரில் கஸ்டமர் ஒருவர் சோமாட்டோ ஆன்லைன் ஃபுட் டெலிவரி நிறுவனத்திடம் எழுப்பிய புகார் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. தான் ஆர்டர் செய்த உணவு டெலிவரி செய்யப்படாததை அடுத்து சொமாட்டோ கஸ்டமர் கேரைத் தொடர்புகொண்டு பேசிய விகாஷிடம் இணைப்பில் அந்தப் பக்கம் இருந்தவர் ‘இந்தி தேசிய மொழி. உணவு ஆர்டர் செய்யும் எல்லோருக்கும் இந்தி கொஞ்சமேனும் தெரிந்திருக்க வேண்டும்’ என்று கூறியதுதான் இந்த பரபரப்புக்குக் காரணம்.
விகாஷ் என்பவர் ஆன்லைன் வழியாக சிக்கன் ரைஸ் மற்றும் பெப்பர் சிக்கன் காம்போ ஆர்டர் செய்துள்ளார்.ஆனால் சிக்கன் ரைஸ் மட்டும் வரவே ஆன்லைனில் அதுகுறித்துப் புகார் எழுப்பியுள்ளார். புகாரைப் பெற்றுக் கொண்ட நபர் நீண்ட நேரமாகியும் அதற்கு பதிலளிக்கவில்லை. சிறிது நேரம் கழித்துத் தொடர்புகொண்ட அந்த நபர்,’கடை நிர்வாகத்துடன் இதுகுறித்துத் தான் பேசி வருவதாகவும்.ஆனால் தமிழ் தெரியாததால் பிரச்னையாக இருப்பதாகவும்’ அவர் காரணம் கூறியுள்ளார். தமிழ் தெரிந்த நபர் ஏன் கடைக்காரரிடம் பேசவில்லை என ஆர்டர் செய்தவர் கேள்வி எழுப்பிய நிலையில் சொமாட்டோ ஊழியர் 'இந்தி தேசிய மொழி. எல்லோருக்குமே இந்தி தெரிந்திருக்க வேண்டும். ஆர்டர் செய்யும் எல்லோரும் இந்தி கொஞ்சமாவது பேசக் கற்றுக்கொள்ள வேண்டும்’ என அறிவுரை வழங்கியுள்ளார்.
மேலும் புகாரையும் சரிவரத் தீர்த்து வைக்காமல் பணத்தையும் ரீஃபண்ட் செய்ய முடியாது எனவும் கூறியுள்ளார். இதையடுத்து நேரடியாக சொமாட்டோவில் புகாரை எழுப்பியுள்ளார் அந்த கஸ்டமர். இதற்கு இன்னும் சொமாட்டோ நிறுவனம் விளக்கம் அளிக்கவில்லை.
முன்னதாக, ஜொமாட்டோ நிறுவனத்தின் இணை நிறுவனர் கௌரவ் குப்தா தனது பதவியில் இருந்து விலகியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.
2015ஆம் ஆண்டு, ஜொமாட்டோ நிறுவனத்தில் இணைந்த கௌரவ் குப்தா, 2018-ஆம் ஆண்டு அதன் தலைமை செயல் அதிகாரியாகப் பதவி உயர்வு பெற்றார். 2019ஆம் ஆண்டு, அதன் இணை நிறுவனராக அறிவிக்கப்பட்டார். கடந்த ஆண்டின், Zomato IPO என்ற ஜொமாட்டோ நிறுவனப் பங்குகளின் விற்பனையின் போது, பங்குதாரர்களுக்கும், ஊடகங்களுக்கும் நிறுவனத்தின் முகமாக கௌரவ் குப்தா செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில நாள்களுக்கு முன்பு, ஜொமாட்டோ நிறுவனம் மளிகைப் பொருள்கள் டெலிவரி, நியூட்ராசிட்டிகல் வர்த்தகம் முதலானவற்றில் இருந்து வெளியேறிய பிறகு, ஜொமாட்டோ இணை நிறுவனர் கௌரவ் குப்தா பணியில் இருந்து விலகியுள்ளார்.
`நம் முன் இன்னும் பெரிய பயணம் காத்திருக்கிறது. நம்மிடையே நல்ல அணியும், தலைமைப் பண்பும் நம்மை முன்னோக்கி அழைத்துச் செல்லும் என்பதற்கு நன்றியுடன் இருக்கிறேன்’ என்று ஜொமாட்டோவின் மற்றொரு இணை நிறுவனர் தீபிந்தர் கோயல் கௌரவ் குப்தாவின் வெளியேற்றம் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்