'இது என்னோட யூடியூப் சேனல் சப்ஸ்கிரைப் ப்ளீஸ்..' இப்படி ஒரு மேசேஜ் உங்களது இன்பாக்ஸில் வந்து விழாமல் இருக்காது. 'மாட்டுக்கு ஒரு கையெழுத்தா' என வடிவேலு சொல்வதைப் போல அலுத்துக்கொண்டே சப்ஸ்கிரைப்  செய்ய வேண்டிய நிலைமையும் வந்துவிட்டது. கவனித்துப்பார்த்தால் வீட்டுக்கு ஒரு யூடியூப் சேனல் எல்லாம் சமீபத்திய ஆண்டுகளில் முளைத்தவைதான். இன்னும் தெளிவாக கூற வேண்டுமென்றால், எல்லாம் ஜியோவின் வருகைக்கு பின்பு. மாதத்திற்கு ஒரு ஜிபி, 2 ஜிபி என்ற குறைந்த டேட்டாவை பொத்திபொத்தி வைத்திருந்த காலத்தில் யூடியூப்க்குள் செல்லவே கை நடுங்கும். டேட்டாவை உறிஞ்சிடும் என சொல்லிக்கொண்டே யூடியூப்பை பார்க்காமல் யூடியூப் ஆப்பை மட்டும் வேடிக்கை பார்த்த காலங்கள் அவை. ஆனால் ஒருநாளைக்கு 2ஜிபி என்ற ஜியோ காலத்தில் தொட்டதற்கெல்லாம் யூடியூப் தான். வீடியோ சாங்கை டவுன்லோட் செய்யும் பழக்கமே விட்டுபோய்விட்டது பலருக்கு. ’பாட்டு கேக்கனுமா நேரா யூடியூப்ல போய் பாத்துப்போம்’ என முகத்தில் சிரிக்கும் ஸ்மைலியை அழுத்துகின்றனர் யூடியூப் வாசிகள்.




’மக்களால் மக்களுக்காக’ என்ற மக்களாட்சி கான்செப்டை கையில் எடுத்திருப்பது தான் யூடியூப்பின் வெற்றி. ’யூடியூப்புக்கும், மக்களாட்சிக்கும் என்னப்பா சம்மந்தம்’ என்றா கேட்கிறீர்கள்..? தொடர்பில்லை தான்.. ஆனால் கான்செப்ட் அதேதான். ’யூடியூப்பில் நீங்கள் வீடியோ போடுங்கள் மக்கள் பார்க்க பார்க்க உங்களுக்கு காசு வரும்’ என்ற வருமானத்துக்கான வாய்ப்பை மக்களிடமே கொடுக்கிறது  யூடியூப். வீடியோவை பார்க்கப்போவதும் மக்கள் தான். நடுவே ஒரு பிளாட்பார்மை கொடுப்பது தான் யூடியூப் வேலை. அதாவது உங்கள் வருமானத்துக்காக நீங்கள் வீடியோ பதிவிடும் அதேவேளை அந்நிறுவனத்துக்காகவும் உழைத்துக் கொடுக்கிறீர்கள். அதேபோல் பார்வையாளர்களுக்கும் இங்கு நஷ்டமில்லை தானே? சமையல், விவசாயம், டெக், ஆட்டோ, எஜுகேஷன் என யூடியூப்பில் இல்லாத தலைப்பே இல்லை. நல்லதும் உண்டு கெட்டதும் உண்டு என கொட்டிக்கிடக்கிறது வீடியோ. தேவையானதை தேடி நொடிக்கு நொடிக்கு யூடியூப்பை அழுத்துபவர்கள் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள். அதனால் தான் 7 வயது பையன் 70 கோடி சம்பாதிக்கும் அதிசய  கதையெல்லாம் யூடியூப் மூலம் நடக்கிறது.




யூடியூப் கூகுளுக்கு சொந்தமானது என்பது பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் அதனை உருவாக்கியது கூகுள் அல்ல. 2005ல் சாட் ஹர்லி, ஸ்டீவ் சென் மற்றும் ஜவேத் கரீம்  ஆகியோர் யூடியூப்பை உருவாக்கினர். சரியாக ஒருவருடம் கழித்து யூடியூப்பை விலைக்கு வாங்கியது கூகுள். அதற்குப்பின் யூடியூப் வளர்ச்சி வேற லெவல். கூகுளுக்கு அடுத்து அதிகமானவர்களால் பார்க்கப்பட்டது யூடியூப் தான். ’உங்களுக்கு என்ன வேணும்? நாங்க இருக்கோம்’ என யூடியூப் கைநீட்டி பார்வையாளர்களை இழுத்துக்கொண்டது. அதேவேளையில் கூட்டம் கூடும் இடத்தில் தான் பலதரப்பட்ட சிக்கல்கள் வரும். யூடியூப்க்கு சொல்ல வேண்டுமா? அடல்ட் கண்டெண்ட், காப்பி ரைட் பிரச்னை, வீடியோ திருட்டு, ஆடியோ திருட்டு என பிரச்னைகள் சூழ்ந்தன. அடுத்தடுத்த பிரைவசி பாலிசிகளாலும், புதுப்புது விதிகளாலும் வரும் பிரச்னைகளுக்கு தீர்வு கண்டது யூடியூப். ஆனாலும் சுய தணிக்கை, கார்ப்ரேட் ஆதரவு, குழந்தைகள் பாதுகாப்பு என சில பிரச்னைகள் இருக்கத்தான் செய்கின்றன. அதுமாதிரியான ஓட்டை வழியாக வாழ்ந்துதான் ஹெட்லைனிலும் இடம் பிடிக்கின்றனர் 18+ யூடியூப் பதிவர்கள். ’கேமராவும், வாயும் இருக்கு.. மத்ததெல்லாம் எதுக்கு’ என்று ரூல்ஸ், எதிக்ஸை தூக்கி தூரமாக வைத்துவிட்டு போறபோக்கில் போய்க்கொண்டே இருக்க முடியாது. அரசின் புதிய விதிகள், யூடியூப்பின் அடுத்தடுத்த பிரைவசி பாலிசிகள் என நாளுக்குநாள் கட்டுப்பாடுகள் தீவிரமாகிக்கொண்டே இருக்கின்றன. 




குழந்தைகள் பாதுகாப்பு, ஆபாசம், நிர்வாணம்,  தற்கொலை, வெறுப்பு பேச்சு, வன்முறை, இணைய அச்சுறுத்தல் என பல தலைப்புகளை வைத்து வடிகட்டுகிறது யூடியூப். ’இந்த டாபிக்கில் வீடியோவை தூக்கிக்கொண்டு இந்தப்பக்கம் வரவேண்டாம்’ என்கிறது யூடியூப் பாலிசி. ஆனாலும் கிடைக்கும் கேப்பில் கெடா வெட்டி விடுகிறார்கள் யூடியூபர்கள் சிலர். 


வீவ்ஸ்க்காக எதுவேண்டுமானாலும் செய்யலாம் என்ற கோட்பாடு இங்கு செல்லுபடியாகாது. உலகளவில் யூடியூப் ஒன்றானாலும் நாட்டுக்கு நாடு அதன் விதிகள் வேறுபடும். அமெரிக்காவின் ஒரு யூடியூப் வீடியோவை பார்த்துவிட்டு அதேபோல் இந்தியாவில் பதிவிட முடியாது. நம் நாட்டு விதிகளுக்குள் அது வருமா என்பது தான் முக்கியம். சில கண்டெண்டுகளுக்கு யூடியூப் அனுமதி கொடுத்தாலும் அரசின் விதிகளுக்கு அது புறம்பானது என்றால் அது யூடியூப் நிறுவனத்தின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது. கையில் நெருப்பைக் கொடுத்து சமைத்துக்கொள் என்கிறது டெக்னாலஜி. நெருப்பை வைத்து வீட்டையும், நாட்டையும் கொளுத்துவேன் என்றால் கையில் உள்ளதை பிடிங்கிக்கொண்டு ஓரமாக உட்கார வைத்துவிடும் விதியும், சட்டமும்.


சியோமி ஸ்மார்ட் வாட்ச்; இந்தியாவில் விரைவில் அறிமுகம்